திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

மன்னர்கள் யோசபாத்து, எசேக்கியா.

அதிகாரம் 17

தொகு

யோசபாத்து அரசன் ஆதல்

தொகு


1 ஆசாவின் மகன் யோசபாத்து அவனுக்குப்பின் ஆட்சியேற்று, இஸ்ரயேலுக்கு எதிராகத் தம்மை வலுப்படுத்திக் கொண்டார்.
2 யூதாவின் அனைத்து அரண்சூழ் நகர்களில் போர்ப்படைகளையும், பிற பகுதிகளிலும் தம் தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்ராயிம் நகர்களிலும் காவற்படைகளையும் நிறுத்தி வைத்தார்.
3 ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல் தம் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார்.
4 மேலும், அவர் இஸ்ரயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே நடந்து வந்தார்.
5 ஆதலால் ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். யூதா மக்கள் அனைவரும் யோசபாத்துக்குக் காணிக்கைகள் கொண்டு வந்தனர்; அவர் செல்வமும் புகழும் பெருகியது.
6 மேலும் ஆண்டவரது வழியில் அவர் உள்ளம் உறுதியடைந்து, யூதாவிலிருந்த தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் அகற்றினார்.


7 அவர் தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு தலைவர்களான பென்கயில், ஒபதியா, செக்கரியா, நெத்தனியேல், மீக்காயா ஆகியோரையும்,
8 லேவியரான செமாயா, நெத்தனியா, செபதியா, அசாவேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தோபியா, தோபு-அதோனியா ஆகியோரையும் குருக்கள் எலிசாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பி வைத்தார்.
9 இவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று யூதாவில் போதித்தனர்; யூதாவின் எல்லா நகர்களிலும் சுற்றி அலைந்து மக்களுக்குப் போதித்தனர்.

யோசபாத்தின் சிறப்பு

தொகு


10 யூதாவைச் சூழ்ந்த நாடுகள் எல்லாம், ஆண்டவர்மீது அச்சம் கொண்டதால், அவை யோசபாத்தை எதிர்த்துப் போரிடவில்லை.
11 பெலிஸ்தியர் யோசபாத்துக்கு அன்பளிப்பும் கப்பமுமாக வெள்ளிப் பணமும் கொடுத்தனர். அரேபியரும் அவருக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கிடாய்களையும் ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக் கிடாய்களையும் அளித்தனர்.
12 யோசபாத்து மென்மேலும் வலிமையடைந்து வந்தார்; யூதாவில் கோட்டைகளையும் சேமிப்பு நர்களையும் கட்டினார்.
13 யூதாவின் நகர்களில் சேமிப்பு மிகுதியாய் இருந்தது; வலிமைமிகு போர்வீரர் எருசலேமில் இருந்தனர்.


14 தங்கள் மூதாதையரின் குடும்பத்தின்படி அவர்களது எண்ணிக்கை: யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா;
15 அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான்.
16 அவனை அடுத்து, ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவனும் சிக்ரியின் மகனுமான அமசியா; இவனுக்குக்கீழ் வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.
17 பென்யமினிலிருந்து வலிமைமிகு போர் வீரர் எலியாதா. இவனுக்குக்கீழ் வில்லும் பரிசையும் தாங்கிய வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.
18 அவனை அடுத்து, யோசபாத்து, இவனுக்குக்கீழ் போர்க்கோலம் பூண்ட இலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்தனர்.
19 இவர்கள் அரசருக்குப் பாதுகாப்புப் பணி புரிந்து வந்தனர். மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்களில் அரசரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் இருந்தனர்.

அதிகாரம் 18

தொகு

பொய் வாக்கினர்

தொகு

(1 அர 22:1-28)


1 யோசபாத்து மிகுந்த செல்வமும் புகழும் பெற்றிருந்தார்; திருமணத்தின் வழியாக ஆகாபுடன் உறவுமுறை கொண்டார்.
2 சில ஆண்டுகளுக்குப்பின் ஆகாபைச் சந்திக்க அவர் சமாரியா சென்றார். மிகுதியான ஆடுமாடுகளை அடித்து அவருக்கும் அவர் ஆள்களுக்கும் விருந்தளித்த ஆகாபு இராமோத்து-கிலயாதிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு அவரைத் தூண்டினான்.


3 இஸ்ரயேலின் அரசனான ஆகாபு யூதாவின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இராமோத்து-கிலயாதை எதிர்க்க என்னோடு வருவீரா?" என்று கேட்டான். அதற்கு யோசபாத்து அவனிடம் "உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; நான் உமக்குத் துணையாகப் போருக்கு வருவேன்" என்றார்.
4 யோசபாத்து இஸ்ரயேல் அரசனை நோக்கி, "ஆண்டவரின் வாக்கு எதுவென இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்" என்றார்.


5 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் நானூறு பொய்வாக்கினரை வரவழைத்தான். "நாங்கள் இராமோத்து கிலயாதிற்கு எதிராகப் படையெடுக்கலாமா, வேண்டாமா?" என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், "போங்கள்; ஏனெனில், அரசன் கையில் கடவுள் அதை ஒப்படைப்பார்" என்று பதிலளித்தனர்.
6 ஆனால் யோசபாத்து, "நாம் கேட்டறிவதற்கு இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர் யாருமில்லையா?" என்று கேட்க,
7 அதற்கு ஆகாபு, "ஆண்டவரின் வாக்கைக் கேட்டறிவதற்கு இம்லாவின் மகன் மீக்காயா என்பவன் இருக்கிறான். ஆனால், நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாவே எப்பொழுதும் இறைவாக்கு உரைக்கிறான்" என்றான். அதற்கு யோசபாத்து, "அரசே நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்" என்றார்.
8 உடனே இஸ்ரயேலின் அரசன் ஓர் அலுவலரிடம், "இம்லாவின் மகன் மீக்காயாவை உடனே அழைத்து வா" என்றான்.


9 பிறகு இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசர் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய்ச் சமாரியா நுழைவாயில் மண்டபத்தில் தம் அரியணையில் அமர்ந்தனர். அவர்கள் முன் பொய்வாக்கினர் அனைவரும் வாக்கு உரைத்துக் கொண்டு இருந்தனர்.
10 அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, "இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அழித்துவிடுவீர்" என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றான்.
11 பொய்வாக்கினர் அனைவரும் அவ்வாறே வாக்கு உரைத்து, "நீர் இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார்" என்றனர்.


12 மீக்காயாவை அழைக்கப்போன தூதன் அவரை நோக்கி, "இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்ப்பட அரசருக்கு உகந்ததாகவே வாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கும் அவர்களது வாக்கைப்போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்" என்றான்.
13 அதற்கு மீக்காயா, "ஆண்டவர் மேல் ஆணை! என் கடவுள் எனக்குச் சொல்வதையே நான் உரைப்பேன்" என்றார்.


14 அவர் அரசனிடம் வந்தபோது அவன் அவரிடம், "மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின் மீது போர் தொடுக்கலாமா? வேண்டாமா?" என்று கேட்டான். அதற்கு அவர், "போங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்" என்றார்.
15 அரசன் அவரிடம், "ஆண்டவர் திருப்பெயரால் உண்மையைத் தவிர வேற எதையும் என்னிடம் சொல்லலாகாது என்று உன்னை எத்தனை முறை ஆணையிடவைப்பது?" என்றான்.
16 அப்பொழுது மீக்காயா, "இஸ்ரயேலர் யாவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை; அவரவர் தம் வீட்டிற்கு அமைதியாகத் திரும்பிப் போகட்டும்' என்றார்" என்று கூறினார். [*]
17 அதைக் கேட்ட இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "இவன் எனக்குச் சாதகமாக அன்று, பாதகமாகவே இறைவாக்கு உரைப்பான் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா?" என்றான்.


18 அப்பொழுது மீக்காயா, "ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் தம் அரியணைமேல் வீற்றிருப்பதையும் விண்ணகப்படையெல்லாம் அவர்தம் வலப்புறமும் இடப்புறமும் நிற்பதையும் கண்டேன்.
19 அந்நேரத்தில் ஆண்டவர், 'இஸ்ரயேலின் அரசனான ஆகாபு இராமோத்து-கிலயாதிற்குச் சென்று அங்கே வீழ்ச்சியடையும்படி அவனை வஞ்சிக்கப்போகிறவன் யார்?' என்று கேட்க, அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, மற்றொருவன் வேறொன்றைச் சொன்னான்.
20 அப்பொழுது ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, 'நானே போய் அவனை வஞ்சிப்பேன்' என்றது. 'எவ்வாறு?' என் று ஆண்டவர் அதைக் கேட்டார்.
21 அந்த ஆவி, 'நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்' என்றது. அதற்கு ஆண்டவர் 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்' என்றார்.
22 எனவே, இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார்" என்றார்.


23 அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்று உன்னிடம் பேசிற்று என்று சொல்" என்றான்.
24 அதற்கு மீக்காயா, "நீ உள்ளறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளில் தெரிந்து கொள்வாய்" என்றார்.
25 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் இவ்வாறு கட்டளையிட்டான்: "மீக்காயாவைப் பிடித்து, அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும், அரசன் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
26 அவர்களிடம் 'நலமாய் நான் திரும்பும்வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள்; இவனுக்குச் சிறிதளவே அப்பமும் தண்ணீரும் கொடுத்து வாருங்கள்' என்று கூறுங்கள்."
27 அதற்கு மீக்காயா, "நலமாய் நீ திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே, இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

ஆகாபின் அழிவு

தொகு

(1 அர 22:29-35)


28 பின்னர் இஸ்ரயேலின் அரசனும் யூதாவின் அரசர் யோசபாத்தும் இராமோத்து- கிலயாதின்மீது படையெடுத்துச் சென்றனர்.
29 இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "நான் மாறுவேடத்தில் போருக்குச் செல்வேன்; நீரோ உம் அரச உடைகளை அணிந்து வாரும்" என்று சொல்லிவிட்டு, மாறு வேடத்தில் போருக்குச் சென்றான்.


30 சிரியா மன்னன் தன் தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி. "நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர் புரியாமல், இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.
31 ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், "இவன்தான் இஸ்ரயேலின் அரசன்!" என்று அவனோடு போரிடும்படி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது யோசபாத்து ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட, அவரும் அவருக்குத் துணையாக வந்து, எதிரிகள் அவனைவிட்டு விலகும்படி செய்தார்.
32 தேர்ப்படைத்தலைவர்கள், இவன் இஸ்ரயேலின் அரசன் இல்லையென்று கண்டு, அவனைத் துரத்தாமல் அகன்று போனார்கள்.
33 ஆனால் ஒரு மனிதன் தனது வில்லை நாணேற்றி குறி வைக்காமல் அம்பெய்தான். அது இஸ்ரயேல் அரசன் கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. ஆகாபு தன் தேரோட்டியிடம், "நான் காயமடைந்துள்ளேன், ஆதலால் நீ தேரைத் திருப்பி என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ" என்றான்.
34 அந்நாள் முழுவதும் கடும் போர் நடந்தது. இஸ்ரயேலின் அரசன் சிரியருக்கு எதிராகத் தன் தேரிலேயே நின்றுகொண்டு மாலைவரை போரிட்டான்; கதிரவன் மறையும் வேளையில் உயிர்விட்டான்.

குறிப்பு

[*] 18:16 = எண் 27:17; எசே 34:5; மத் 9:36; மாற் 6:34.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை