திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அரசர் யோசபாத்து ஏதோமுடன் போர்செய்து வெற்றி பெறுகிறார் (2 குறி 20). ஓவியர்: ழான் ஃபூக்கே. காலம்: கி.பி. 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு

அதிகாரம் 19

தொகு

யோசபாத்தைத் திருக்காட்சியாளர் இடித்துரைத்தல்

தொகு


1 யூதாவின் அரசராகிய யோசபாத்து எருசலேமிலிருந்த தம் அரண்மனைக்கு நலமாய்த் திரும்பி வந்தார்.
2 அப்போது அனானீயின் மகன் ஏகூ என்ற திருக்காட்சியாளர் அரசர் யோசபாத்தைச் சந்தித்து அவரிடம், "நீர் தீயவனுக்குத் துணைநிற்கலாமா? ஆண்டவரை வெறுப்பவனோடு நட்புக் கொள்ளலாமா? அதனால் ஆண்டவரின் சினம் உம்மேல் விழ இருந்தது.
3 ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்; அதாவது அசேராக் கம்பங்களை நாட்டிலிருந்து எரித்து அகற்றினீர்; கடவுளை நாடுவதில் உம் இதயம் நிலையாயிருந்தது" என்று கூறினார்.

யோசபாத்தின் சீர்திருத்தங்கள்

தொகு


4 எருசலேமில் வாழ்ந்த யோசபாத்து தம் குடிமக்களைக் காணப்புறப்பட்டுச் பெயேர்செபா முதல், மலைநாடான எப்ராயிம் வரைசென்று, அவர்களைத் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரிடம் திருப்பினார்.
5 மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் நீதிபதிகளை அவர் நியமித்தார்.
6 அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் செய்வது யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் நீதி வழங்குவது மனிதனை முன்னிட்டு அன்று, ஆண்டவரை முன்னிட்டே; ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார்.
7 உங்களிடம் இறையச்சம் இருக்கட்டும்; எல்லாவற்றையும் கவனத்தோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம் அநீதி இல்லை; ஓர வஞ்சனை இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது" என்றார்.


8 மேலும், ஆண்டவருக்கடுத்த காரியங்களில் நீதி வழங்கவும், மற்ற வழக்குகளைத் தீர்க்கவும் யோசபாத்து சில லேவியரையும் குருக்களையும் இஸ்ரயேல் குடும்பத்தலைவர்களையும் எருசலேமில் ஏற்படுத்தினார். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
9 அவர் அவர்களைப் பார்த்துக் கூறியது: "நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேரிய உள்ளத்தோடும் நடங்கள்.
10 அவரவர்தம் நகர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர், இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், நியமங்கள் ஆகியவற்றை அடுத்த வழக்குகளை உங்களிடம் தீர்ப்புக்குக் கொண்டு வரும்போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகத் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சினம் உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் விழாதபடியும் அவர்களை எச்சரியுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்.
11 ஆண்டவருக்கடுத்த எல்லா வழக்குகளிலும் தலைமைக் குரு அமரியாவும், அரசனுக்கடுத்த எல்லாக் காரியத்திலும் இஸ்மவேலின் மகனும் யூதா மரபின் ஆளுநனுமான செபதியாவும் தலைமை வகிப்பார்கள். லேவியர் உங்கள் அலுவலராய் இருப்பர். மன உறுதியுடன் செயல்படுங்கள்; நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்."

அதிகாரம் 20

தொகு

ஏதோமுடன் போர்

தொகு


1 பின்னர் மோவாபியரும் அம்மோனியரும் அவர்களுடன் மெயோனியருள் சிலரும் ஒன்றுசேர்ந்து யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.
2 சிலர் வந்து யோசபாத்திடம், "பெருந்திரளானோர் கடலின் அக்கரையிலிருந்தும் ஏதோமிலிருந்தும் [1] உம்மை எதிர்த்து வந்து ஏங்கேதி என்ற அச்சோன்தாமாரில் இருக்கின்றனர்" என்றனர்.
3 அப்பொழுது யோசபாத்து அச்சமுற்று, ஆண்டவரை நாடுவதில் உறுதிபூண்டு, யூதா மக்கள் யாவரும் நோன்பிருக்குமாறு கட்டளையிட்டார்.
4 அப்படியே யூதா மக்கள் ஆண்டவரிடமிருந்து உதவி பெற ஒன்றுகூடினர்; யூதாவின் எல்லா நகர்களிலிருந்தும் அதற்கென வந்திருந்தனர்.


5 அப்பொழுது யோசபாத்து யூதா, எருசலேம் சபையாருடன் ஆண்டவரின் இல்லத்துப் புது மண்டபத்தின்மேல் நின்று கொண்டு,
6 "எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே! விண்ணகக் கடவுள் நீரே அன்றோ! நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர்; நீரே வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவர்! உம்மை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது.
7 எங்கள் கடவுளே, உம் மக்கள் இஸ்ரயேலருக்காக இந்த நாட்டு மக்கள் அனைவரையும் வெளியேற்றி, இதனை உம் நண்பர் ஆபிரகாமின் வழிமரபினருக்கு என்றென்றுமாகக் கொடுத்தவர் நீரே அன்றோ! [2]
8 ஆகவே, அவர்கள் இந்நாட்டில் குடியேறி உமது திருப்பெயர் விளங்குமாறு இத்திருத்தலத்தை எழுப்பினார்கள்.
9 வாள், தண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய எவ்விதத் தீங்கும் எங்களுக்கு நேர்ந்தால், உமது திருப்பெயர் விளங்கும் இக்கோவிலுக்கு நாங்கள் வந்து, உமது திருமுன் நின்று, எங்கள் வேதனைகளில் உம்மை நோக்கி மன்றாடுவோம், நீரும் அதனைக் கேட்டு எங்களை மீட்பீர்.
10 இதோ! அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைநாட்டவரும் எங்களுக்கு எதிராக வருகிறார்கள்; எகிப்திலிருந்து இஸ்ரயேலர் வெளியேறிய காலத்தில் இவர்கள் நாட்டின் வழியே போக நீர் அவர்களை அனுமதிக்கவில்லை; எனவே, இஸ்ரயேலர் அவர்களை அழிக்காது விலகிச் சென்றனர். [3]
11 இதோ, அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடைமையாகத் தந்த இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்களே!
12 எங்கள் கடவுளே, அவர்களுக்கு நீர் நீதி வழங்க மாட்டீரோ? எங்களுக்கு எதிராக வருகிற இப்பெரும் படையை எதிர்த்து நிற்க எங்களுக்கு வலிமை இல்லை. எங்கள் கண்கள் உம்மை நோக்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் செய்ய வேண்டியது வேறு எதுவெனத் தெரியவில்லை" என்று மன்றாடினார்.


13 யூதா குலத்தார் அனைவரும் தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர்களுடன் ஆண்டவர்திருமுன் நின்று கொண்டிருந்தனர்.
14 அவ்வேளையில் அச்சபை நடுவில் இருந்த யாகசியேலின்மேல் ஆண்டவரின் ஆவி இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர்; இவர் மத்தனியா, எயியேல், பெனாயா ஆகியோரின் வழிவந்த சக்கரியாவின் புதல்வர்.
15 யாகசியேல் மக்களை நோக்கி, "யூதா, எருசலேம் வாழ்மக்களே, அரசே யோசபாத்து! கவனமாய்க் கேளுங்கள். ஆண்டவர் உங்களுக்குக் கூறுவது இதுவே: இப்பெரும் படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும் வேண்டாம். இப்போர் உங்களுடையது அல்ல, கடவுளுடையது.
16 நீங்கள் அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள்.
17 அங்கே நீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே! எருசலேமே! உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள்! எனவே, அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களை நோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்" என்றார். [4][5]


18 இதைக் கேட்டவுடன் யோசபாத்தும், அவருடன் யூதா, எருசலேம் வாழ்மக்கள் யாவரும் முகங்குப்புறத் தரையில் வீழ்ந்து ஆண்டவரை வணங்கினர்.
19 கோகாத்தியரையும் கோராகியரையும் சார்ந்த லேவியர் எழுந்து நின்று இஸ்ரயேலின் கடவுளை உரத்த குரலிலும் உயர்ந்த தொனியிலும் வாழ்த்தினர்.


20 அவர்கள் அதிகாலையில் எழுந்து, தெக்கோவாப் பாலைநிலம் நோக்கிப் புறப்படுகையில், யோசபாத்து அவர்களிடம், யூதா, எருசலேம் வாழ்மக்களே! எனக்குச் செவி கொடுங்கள்! உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்புங்கள்! உங்களுக்குத் தீங்கு ஏதும் நேராது. அவர்தம் இறைவாக்கினர்களை நம்புங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்றார்.


21 அவர் மக்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்தபின், ஆண்டவரைப் புகழ்ந்து பாடப் பாடகர்களை நியமித்தார். அவர்கள் விழாச் சீருடை அணிந்து படைகளுக்கு முன்னே பாட வேண்டியது:


"ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர்தம் பேரன்பு என்றுமுளது."


22 அவர்கள் அவ்வாறே ஆண்டவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிய போது, யூதாவை எதிர்த்து வந்தவர்களான அம்மோனியரையும் மோவாபியரையும் சேயீர் மலைநாட்டவரையும் ஒருவருக்கொருவர் பகைவராக்கி முறியடித்தார் ஆண்டவர்.
23 முதலில் அம்மோனியரும் மோவாபியரும் சேர்ந்து சேயீர் மலைநாட்டவரை அடியோடு அழித்தனர். இவ்வாறு சேயீர் மக்களைத் தீர்த்துக் கட்டியபின் தங்களுக்குள் ஒருவர் மற்ற வரை வீழ்த்தி அழித்துக் கொள்வதில் உதவினர்.
24 யூதா மக்கள் பாலைநிலக் காவல் மேட்டுக்கு வந்து, படைத்திரளைப் பார்த்தபோது, நிலத்தில் பிணங்களே கிடப்பதையும், யாருமே உயிர் தப்பவில்லை என்பதையும் கண்டு கொண்டனர்.


25 உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.
26 நான்காம் நாள் பெராக்கா [6] பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி, ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர். எனவே இந்நாள் வரை அவ்விடம் 'புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.
27 பின்னர் யூதா, எருசலேம் ஆள்கள் அனைவரும் யோசபாத்தின் தலைமையில் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினர்; ஏனெனில் ஆண்டவர் அவர்களின் பகைவர்களை முன்னிட்டு, அவர்களை மகிழ்வுறச் செய்தார்.
28 அவர்கள், தம்புரு, சுரமண்டலம், எக்காளம் இசைத்து எருசலேமுக்கு வந்து, ஆண்டவரது இல்லத்தினுள் நுழைந்தனர்.
29 ஆண்டவர் இஸ்ரயேலின் பகைவர்களுக்கு எதிராகப் போரிட்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற எல்லா நாட்டு அரசுகளும் ஆண்டவர்மீது அச்சம் கொண்டன.
30 யோசபாத்தின் அரசு அமைதி கண்டது. அவர் கடவுளும் அவருக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்.

யோசபாத்து ஆட்சியின் முடிவு

தொகு

(1 அர 22:41-50)


31 இவ்வாறு யூதா நாட்டை யோசபாத்து ஆண்டு வந்தார். அவர் தம் முப்பதாவது வயதில் அரசர் ஆனார். அவர் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேம் ஆட்சி செய்தார். சில்கியின் மகள் அசுபா என்பவளே அவர் தாய்.
32 அவர் தம் தந்தை ஆசாவின் வழிகளைவிட்டு விலகாது ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.
33 ஆயினும், தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. தங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரை மக்களின் மனம் உறுதியாகப் பற்றிக்கொள்ளவில்லை.
34 யோசபாத்தின் பிறசெயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் அனானீயின் மகன் ஏகூவின் சொற்களில் எழுதப்பட்டுள்ளன.
35 பின்னர், யூதாவின் அரசன் யோசபாத்து, தீய வழியில் நடந்த இஸ்ரயேலின் அரசன் அகசியாவுடன் சேர்ந்துகொண்டார்.
36 தர்சீசுக்குப் போகுமாறு எட்சியோன்-கெபேரில் அவர்கள் கப்பல்களைக் கட்டினர்.
37 ஆனால் மாரேசாவைச் சார்ந்த தோதவாவின் மகன் எலியேசர் யோசபாத்திற்கு எதிராக இறைவாக்குரைத்து "நீர் அகசியாவோடு சேர்ந்து கொண்டமையால் ஆண்டவர் உம் திட்டங்களை அழித்து விடுவார்" என்றார். அவ்வாறே அக்கப்பல்கள் உடைந்துபோக, தர்சீசு பயணம் தடைப்பட்டது.

குறிப்புகள்

[1] 20:2 'ஆராமிலிருந்தும்' என்பது வேறு பாடம்.
[2] 20:7 = எசா 41:8; யாக் 2:23.
[3] 20:10 = இச 2:4-19.
[4] 20:15-17 = இச 20:1-4.
[5] 20:17 = விப 14:13-14.
[6] 20:26 எபிரேயத்தில் 'புகழ்ச்சி' என்பது பொருள்.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை