திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அரசி அத்தலியா கொலைசெய்யப்படுகிறார் (2 குறி 23:12-15). விவிலிய வரைவு ஓவியம். கலைஞர்: குஸ்தாவ் டோரே (1832-1883). ஆண்டு: 1866.

அதிகாரம் 23

தொகு

அரசி அத்தலியாவுக்கு எதிரான கிளர்ச்சி

தொகு

(2 அர 11:4-16)


1 அத்தலியா ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயாதா தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, நூற்றுவர் தலைவர்களாக எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இசுமவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மகசேயா, சிக்ரியின் மகன் எலிபாபாற்று ஆகியோரைத் தம்முடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார்.
2 இவர்கள் யூதா எங்கும் போய் அதன் நகர்களில் இருந்த லேவியர்களையும், இஸ்ரயேல் குலத்தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.


3 சபையார் யாவரும் கடவுளின் இல்லத்தில் யோவாசுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். யோயாதா அவர்களை நோக்கி, "இதோ! அரசனின் மைந்தன்! தாவீதின் புதல்வர்களைக் குறித்து ஆண்டவர் கூறியபடியே, அவன் அரசாள்வான். [*]
4 நீங்கள் செய்ய வேண்டியது இதுவே: ஓய்வு நாளில் பணிபுரியும் குருக்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர வாயிலிலும்,
5 இரண்டாம் பகுதியினர் அரண்மனையிலும், மூன்றாம் பகுதியினர் அடித்தள வாயிலிலும் காவல் இருக்க வேண்டும்; மக்கள் எல்லாரும் ஆண்டவரின் இல்லத்து முற்றத்தில் நிற்க வேண்டும்.
6 குருக்களையும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் லேவியரையும் தவிர வேறெவனும் ஆண்டவரின் இல்லத்துள் நுழையக் கூடாது. புனிதப்படுத்தப்பட்ட இவர்கள் மட்டுமே நுழையலாம். மக்கள் அனைவரும் ஆண்டவருக்கான காவலில் கருத்தாய் இருப்பார்களாக! v7 லேவியர் தங்கள் படைக்கலன்களைத் தாங்கியவராய், அரசனை எப்பக்கமும் சூழ்ந்து நிற்க வேண்டும். திருக்கோவிலுள் நுழையும் மற்ற எவனும் கொல்லப்படுவான். அரசன் வந்துபோகும் இடமெல்லாம் லேவியர் அவனோடு இருக்க வேண்டும்" என்றார்.


8 குரு யோயாதா கட்டளையிட்டவாறே லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஓய்வுநாளில் பணியேற்போரும், விடுப்பில் செல்வோரும், அவரவர் தம் ஆள்களைக் கூட்டி வந்தனர். ஏனெனில், குரு யோயாதா விடுப்பில் செல்லும் குருக்களைக் கலைந்து போக அனுமதிக்கவில்லை.
9 அரசர் தாவீது ஆண்டவரின் இல்லத்தில் வைத்திருந்த ஈட்டிகள், கேடயங்கள், பரிசைகள் முதலியவற்றைக் குரு யோயாதா நூற்றுவர் தலைவர்களிடம் அளித்தார்.
10 மக்கள் அனைவரும் படைக்கலன் தாங்கியவராய்த் திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை பலிபீடத்துக்கும் திருக்கோவிலுக்கும் முன்னும், அரசனைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.
11 பின்னர், அரச மகனை வெளியே அழைத்து வந்து அவனது தலைமேல் மகுடத்தை வைத்து, உடன்படிக்கைச் சுருளை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பிறகு யோயாதாவும் அவர் புதல்வர்களும் அவனைத் திருப்பொழிவு செய்து, 'அரசே வாழ்க!' என்று முழங்கினர்.


12 மக்கள் ஓடி வந்து அரசனைப் புகழும் பேரொலி கேட்டவுடன், அத்தலியா ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் சென்றாள்.
13 ஆனால் வாயில் தூண் அருகில் அரசன் நிற்பதையும், தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அரசனின் அருகில் நிற்பதையும் நாட்டின் எல்லா மக்களும் மனமகிழ்ந்து எக்காளம் ஊதுவதையும், பாடகர்கள் இசைக்கருவிகளுடன் புகழ்ந்துபாடுவதில் முன்னணியில் நிற்பதையும் கண்டவுடன், அத்தலியா தன் ஆடைகளைக் கிழ்த்துக் கொண்டு, "சதி, சதி!" என்று கத்தினாள்.
14 பின்னர், குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, "அவளைப் பிடித்துச் சுற்று மதிலுக்குப் புறம்பே கொண்டு போங்கள்; எவனாவது இவளோடு சேர்ந்து கொண்டால், அவனை வெட்டி வீழ்த்துங்கள். ஆண்டவரின் இல்லத்தில் அவளைக் கொன்று போடக் கூடாது" என்று கூறியிருந்தார்.
15 அதன்படி அவளைப் பிடித்து அரண்மனையின் குதிரை வாயிலுக்குக் கொண்டுவந்து அங்கே அவளைக் கொன்று போட்டனர்.

யோயாதாவின் சீர்திருத்தங்கள்

தொகு

(2 அர 11:1-20)


16 பின்னர் யோயாதா, தானும் எல்லா மக்களும், அரசனும் ஆண்டவரின் மக்களாயிருப்பதாக ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.
17 அதன்பின், எல்லா மக்களும் பாகாலின் கோவிலில் நுழைந்து அதனை இடித்து, பலிபீடத்தையும் சிலைகளையும் தகர்த்து, பாகாலின் அர்ச்சகன் மாத்தானை பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றொழித்தனர்.
18 ஆண்டவரின் இல்லத்தைக் கண்காணிப்போராக தாவீதின் நியமனத்தின்படி லேவிய குருவை யோயாதா நியமித்தார். அவர்கள் மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்தவாறு எரிபலிகளை ஆண்டவருக்குச் செலுத்தி, தாவீதின் சொற்படி ஆர்ப்பரித்துப் பாட வேண்டும் என்று கட்டளையிட்டார்.
19 மேலும் எவ்வகையிலேனும் தீட்டுப்பட்டவர்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழையாதபடி வாயில் காவலரை அவர் ஏற்படுத்தினார்.


20 பின்னர் நூற்றுவர் தலைவர்கள், மேன்மக்கள், மக்களின் ஆளுநர்கள், மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் புடைசூழ ஆண்டவரின் இல்லத்திலிருந்து உயர் வாயில் வழியாக அரசரை அரண்மனைக்கு அழைத்துச்சென்று, அங்கே அரசரின் அரியணையில் அமர்த்தினர்.
21 நாட்டு மக்கள் எல்லாரும் மகிழ்ந்தனர். அத்தலியா வாளுக்கு இரையாகி மாண்டபின், நகரில் அமைதி நிலவிற்று.

குறிப்பு

[*] 23:3 = 2 சாமு 7:12.

அதிகாரம் 24

தொகு

யோவாசு அரசன் ஆதல்

தொகு

(2 அர 12:1-16)


1 யோவாசு அரசரானபோது அவர் வயது ஏழு; அவர் எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவர் தாய்.
2 குரு யோயாதாவின் வாழ்நாள் முழுவதும், யோவாசு ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.
3 யோயாதா அவருக்கு இரு பெண்களை மணமுடித்து வைத்தார். அவர்கள் வழியாக அவருக்குப் புதல்வர், புதல்வியர் பிறந்தனர்.


4 பின்னர், ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்க யோவாசு விரும்பினார்.
5 எனவே, அவர் குருக்களையும் லேவியரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், "நீங்கள் யூதா நகர்களுக்கெல்லாம் சென்று உங்கள் கடவுளின் இல்லத்தை ஆண்டுதோறும் பழுதுபார்க்க இஸ்ரயேல் எங்கும் பணம் சேகரியுங்கள். இதனை விரைவாகச் செய்யுங்கள்" என்றார். ஆனால் லேவியர் இதை விரைவாகச் செய்யவில்லை.
6 ஆகையால், அரசர் தலைமைக் குரு யோயாதாவை அழைத்து, "ஆண்டவரின் அடியாராகிய மோசே உடன்படிக்கைக் கூடாரத்திற்காக இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் வரிகொடுக்குமாறு பணித்தார். லேவியரோ அவ்வரியை யூதாவிலும் எருசலேமிலும் வசூலிக்காமல் இருப்பதை நீர் ஏன் கண்டிக்காமல் இருக்கறீர்? [1]
7 அந்தத் தீய பெண் அத்தலியாவும் அவளுடைய புதல்வர்களும் கடவுளின் இல்லத்தினுள் வன்முறையாய் நுழைந்து, ஆண்டவரின் இல்லத்துப் புனிதப் பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டு அவற்றைப் பாகால்களுக்காகப் பயன்படுத்தினர்" என்றார்.


8 பின்னர், அரசரின் கட்டளைக்கேற்ப ஒரு பெட்டியைச் செய்து, அதை ஆண்டவரின் இல்லத்து வாயிலுக்கு வெளியே வைத்தனர்.
9 "கடவுளின் அடியார் மோசே பாலைநிலத்தில் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட வரிப்பணத்தை ஆண்டவருக்குக் கொண்டு வாருங்கள்" என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றினர்.
10 இதைக் கேட்டு எல்லாத் தலைவர்களும் மக்களும் மகிழச்சியுற்று, தங்கள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து பெட்டியில் போடவே, பெட்டியும் நிறைந்தது.


11 பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.


12 அதை அரசரும் யோயாதாவும் ஆண்டவரின் இல்லப்பணியைக் கவனித்து வந்த வேலையாள்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்கக் கொத்தர்களையும் தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினர்; ஆண்டவரின் இல்லத்தை வலுப்படுத்துமாறு இரும்பு, வெண்கல வேலையில் தேர்ச்சி பெற்றோரையும் வேலைக்கென அமர்த்தினர்.
13 வேலையாள்களின் பொறுப்பில் கடவுளின் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி விரைவாக முன்னேறியது; அவர்கள் முன்னைய நிலைக்கு அதனைக் கொணர்ந்து இன்னும் வலுப்படுத்தினர்.
14 வேலைகள் எல்லாம் முடிந்தபின், எஞ்சியுள்ள பணத்தை அரசருக்கும் யோயாதாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தனர்; அவர்கள் அதைக் கொண்டு ஆண்டவரின் இல்லப்பணிக்கெனப் பாத்திரங்களையும், திருப்பணி, எரிபலி ஆகியவற்றுக்கான பாத்திரங்களையும் கிண்ணங்களையும், மற்றும் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் செய்தனர். யோயாதாவின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் இல்லத்தில் எரிபலிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டன.
15 யோயாதா நிறை ஆயுள் கண்டு முதுமை எய்தி இறந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நூற்றுமுப்பது.
16 அவர் இஸ்ரயேலருக்கும் கடவுளுக்கும் அவரது இல்லத்துக்கும் நற்பணி செய்திருந்ததனால், அவரைத் தாவீதின் நகரில் அரசர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர்.


17 ஆனால், யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.
18 அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.
19 அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவிகொடுக்கவில்லை.
20 அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின்மேல் இறங்கியது; அவர் மக்கள்முன் நின்று அவர்களை நோக்கி: "இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்" என்று கூறினார்.
21 அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். [2]
22 அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, "ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!" என்றார்.

யோவாசின் இறப்பு

தொகு


23 அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்றழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.
24 சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர்.
25 கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்; அவருடைய அலுவலர்களோ அவருக்கெதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப்பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்யவில்லை.
26 அவருக்கெதிராகச் சதி செய்தவர் அம்மோனியனான சிமயாத்தின் மகன் சாபாத்தும், மோவாபியனான சிம்ரித்தின் மகன் யோசபாத்தும் ஆவர்.
27 அவர் புதல்வர் பற்றியும் அவருக்கெதிராக பல இறைவாக்குகள் பற்றியும், கடவுளின் இல்லத்தை அவர் வலுப்படுத்தியது குறித்தும் அரசர்களின் ஆய்வேட்டில் எழுதப்பட்டுள்ளன; அவருக்குப்பின் அவர் மகன் அமட்சியா அரசனானான்.

குறிப்புகள்

[1] 24:6 = விப 30:11-16.
[2] 24:20-21 = மத் 22:35; லூக் 11:51.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை