திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை
2 குறிப்பேடு (The Second Book of Chronicles)
தொகுஅதிகாரங்கள் 25 முதல் 26 வரை
அதிகாரம் 25
தொகுயூதாவின் அரசன் அமட்சியா
தொகு(2 அர 14:2-6)
1 அமட்சியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; எருசலேமைச் சார்ந்த எயோயதான் என்பவளே அவன் தாய்.
2 ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதையே அவன் செய்தான்; இருப்பினும், முழு மனத்துடன் அவ்வாறு செய்யவில்லை.
3 அவனது அரசை வலுப்படுத்தியபின் தன் தந்தையான அரசனைக் கொன்ற அலுவலர்களைக் கொலை செய்தான்.
4 புதல்வர் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டுப் புதல்வரும் இறக்கக்கூடாது; மாறாக அவனவன் தனது பாவத்தின் பொருட்டே இறக்கவேண்டும் என்ற மோசேயின் திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்களின் புதல்வர்களை அவன் கொல்லவில்லை. [1]
ஏதோமுடன் போர்
தொகு(2 அர 14:7)
5 பின்னர், அமட்சியா யூதா மக்களை ஒன்று திரட்டி, யூதா, பென்யமின் நாடெங்கும் மூதாதையரின் குடும்பங்கள் வாரியாக ஆயிரத்தவர் தலைவர்களையும், நூற்றுவர் தலைவர்களையும் எற்படுத்தினான். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களை அவன் ஒன்றுசேர்த்தபோது கேடயம் தாங்கிப் போரிடும் வேல்வீரர் மூன்று இலட்சம் பேர் இருந்தனர்.
6 இஸ்ரயேல் நாட்டிலிருந்து ஓர் இலட்சம் போர் வீரரை நாலாயிரம் கிலோகிராம் [2] வெள்ளிக்கு அமர்த்தினான்.
7 அப்பொழுது கடவுளின் மனிதர் ஒருவர் அவனிடம் வந்து, "அரசே! இஸ்ரயேல் படையினர் உம்மோடு செல்லக்கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலோடு இல்லை! எப்ராயிம் புதல்வரோடும் இல்லை!
8 ஆனால், அப்படிச் சென்று போரில் வலிமை வாய்ந்தவராகத் திகழலாம் என்று நீர் கருதினால், கடவுள் உம்மை எதிரிகள்முன் வீழ்த்துவார்; ஏனெனில், உதவி புரியவும், வீழ்ச்சியுறச் செய்யவும் கடவுளுக்கு ஆற்றல் உண்டு" என்றார்.
9 அப்பொழுது அமட்சியா கடவுளின் மனிதரை நோக்கி, "இஸ்ரயேலின் படைக்கு நான் கொடுத்துள்ள நாலாயிரம் கிலோகிராம் வெள்ளி வீணாகுமே!" என்றான். அதற்குக் கடவுளின் மனிதர், "ஆண்டவரால் இதைவிட மிகுதியாக உனக்குக் கொடுக்க முடியும்" என்றார்.
10 பின்னர் அமட்சியா எப்ராயிமிலிருந்து வந்த போர்ப்படையைப் பிரித்து, அவர்கள் இடத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் யூதாவின்மீது கடுஞ்சினமுற்று, கோபக்கனலுடன் தங்கள் நாடு திரும்பினர்.
அமட்சியாவின் நம்பிக்கைத் துரோகம்
தொகு
11 பின்னர் அமட்சியா தன்னை வலுப்படுத்திக்கொண்டு, உப்புப் பள்ளத்தாக்கிற்குத் தன் மக்களை அழைத்து சென்றான். அங்கே சேயீர் புதல்வருள் பத்தாயிரம் பேரைக் கொன்றான்.
12 யூதாவின் புதல்வர் மற்றுமொரு பத்தாயிரம் பேரை உயிரோடு பிடித்து ஒரு குன்றின் உச்சிக்குக் கொண்டு சென்று, அவர்களை அங்கிருந்து கீழே தள்ள, அவர்கள் நொறுக்கப்பட்டனர்.
13 இதற்கிடையில், அமட்சியா தன்னோடு போருக்கு அழைத்துச் செல்லாமல் திருப்பி அனுப்பிய போர் வீரர்கள் சமாரியா முதல் எபத்கோரோன் வரையிலுள்ள யூதா நகர்களைச் சூறையாடினர்; மூவாயிரம் பேரைக் கொன்றதுடன் மிகுந்த பொருள்களையும் கொள்ளையடித்தனர்.
14 அமட்சியா, ஏதோமியரை முறியடித்து சேயீர் புதல்வர்களின் தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தான்; தன் தெய்வங்களாக அவற்றை நிறுத்தி வைத்து, அவற்றின் முன்பாகப் பணிந்து, அவற்றுக்குத் தூபம் காட்டினான்.
15 எனவே, ஆண்டவர் அமட்சியாவின் மீது கடுஞ்சினமுற்று, அவனிடம் ஓர் இறைவாக்கினரை அனுப்பினார். அவர் அமட்சியாவை நோக்கி, "தங்கள் மக்களை உம் கையினின்று காப்பாற்ற இயலாத தெய்வங்களில் நாட்டம் கொண்டது ஏன்?" என்று கேட்டார்.
16 இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கையில் அமட்சியா அவரை நோக்கி, "அரசருக்கு ஆலோசகனாக உன்னை நானா நியமித்தேன்? நிறுத்து! நீ ஏன் வீணாக சாக வேண்டும்?" என்றான். இறைவாக்கினரும் சற்று நிறுத்தி, பின் அமட்சியாவை நோக்கி, "எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவ்வாறு செய்ததனால் கடவுள் உன்னை அழிக்க முடிவு செய்திருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்.
இஸ்ரயேலுடன் போர்
தொகு(2 அர 14:8-20)
17 பின்னர், அமட்சியா ஆலோசனை செய்து, ஏகூவின் மகன் யோவகாசுக்குப் பிறந்த யோவாசு என்ற இஸ்ரயேலின் அரசனிடம், "வாரும், நாம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம்" என்று சவால் விட்டான்.
18 இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவுக்கு ஆளனுப்பி, "லெபனோன் முட்செடி, லெபனோன் கேதுரு மரத்திடம் தூது அனுப்பி, 'நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக்கொடு' என்று கேட்டதாம்; அப்பொழுது லெபனோன் காட்டு விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் அம் முட்செடியை மிதித்துப் போட்டதாம்!
19 ஏதோமை நீர் முறியடித்ததனால், உம் இதயம் தற்பெருமை கொண்டு எழுகிறது; இப்பொழுது நீர் உம் வீட்டிலேயே இரும்! நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும்?" என்று பதிலளித்தான்.
20 ஆனால் அமட்சியா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஏதோமின் தெய்வங்களை அவன் வழிபட்டு வந்ததனால், அவனை எதிரிகளின் கையில் ஒப்பவிக்கக் கடவுள் திட்டமிட்டிருந்தார்.
21 ஆகவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வர, அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவின் பெத்செமேசில் நேருக்கு நேர் மோதினர்.
22 யூதாவினர் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டு, அவரவர் தம் கூடாரத்திற்கு ஓடினர்.
23 யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியாவை யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு பெத்செமேசில் சிறைப்பிடித்து, எருசலேமுக்கு இட்டுச் சென்றான். எப்ராயிம் வாயில் தொடங்கி மூலைவாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு எருசலேம் மதிலை யோவாசு இடித்துத் தள்ளினான்.
24 கடவுளின் இல்லத்தில் ஓபேது-ஏதோமின் பொறுப்பில் இருந்த அனைத்துப் பொன், வெள்ளி, அனைத்துக் கலன்கள், அரண்மனையின் கருவூலங்களில் இருந்தவை ஆகியவற்றைக் கொள்ளையடித்தான்; பிணைக் கைதிகளையும் சமாரியாவுக்கு இட்டுச் சென்றான்.
அமட்சியாவின் முடிவு
தொகு
25 யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு இறந்த பின்னும் யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தான்.
26 அமட்சியாவின் பிற செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
27 அமட்சியா ஆண்டவரைப் புறக்கணித்த காலம் முதல் எருசலேமில் அவனுக்கெதிராகச் சதி உருவானது; அவன் இலாக்கிசுக்குத் தப்பியோட, அங்கேயும் அவர்கள் ஆள்களை அனுப்பி அவனைக் கொன்றனர்.
28 அவன் உடலைக் குதிரைகளால் எடுத்துச் சென்று, யூதாவின் நகரில் அவன் மூதாதையருடன் அடக்கம் செய்தனர்.
- குறிப்புகள்
[1] 25:4 = இச 24:16.
[2] 25:6 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
அதிகாரம் 26
தொகுயூதாவின் அரசன் உசியா
தொகு(2 அர 14:21-22; 15:1-7)
1 பின்னர், யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுடைய [1] உசியாவை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
2 அரசன் தன் மூதாதையருடன் துயில் கொண்டபின், ஏலோத்தைக் கட்டியெழுப்பி, அதனை யூதாவுக்குச் சொந்தமாக்கினவன் இவனே.
3 உசியா அரியணை ஏறியபோது, அவனுக்கு வயது பதினாறு. எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேமைச் சேர்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.
4 அவன் தன் தந்தை அமட்சியாவைப் போலவே ஆண்டவரின் பார்வையில் யாவற்றிலும் நேர்மையாக நடந்து கொண்டான்.
5 இறையச்சத்தில் தன்னைப் பயிற்றுவித்த செக்கரியாவின் வாழ்நாள் முழுவதும், உசியா கடவுளையே நாடினான். அவன் ஆண்டவரைத் தேடிய காலமெல்லாம் கடவுள் அவனுக்கு வெற்றியை அளித்தார்.
6 பின்பு, பெலிஸ்தியருடன் போரிட்டு, காத்து, யாப்னே, அஸ்தோது ஆகியவற்றின் மதில்களைத் தகர்த்தெறிந்தான்; அஸ்தோதைச் சுற்றிலும் பெலிஸ்திய நாட்டிலும் நகர்களை எழுப்பினான்.
7 பெலிஸ்தியரையும், கூர்ப்பாகாவில் குடியிருந்த அரேபியரையும், மெயோனியரையும் வெல்லக் கடவுள் அவனுக்குத் துணைபுரிந்தார்.
8 அம்மோனியர் உசியாவுக்குக் கப்பம் கட்டினர்; அவன் ஆற்றல் மிக்கவனாய் விளங்கியதால், அவனது புகழ் எகிப்தின் எல்லைமட்டும் பரவியது.
9 உசியா எருசலேமில் மூலை வாயில் மேலும், பள்ளத்தாக்கு வாயில் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் கொத்தளங்களை எழுப்பி அவற்றை வலுப்படுத்தினான்.
10 அவன் பாலைநிலத்திலும் கொத்தளங்களைக் கட்டி, பல கிணறுகளையும் வெட்டினான். அவனுக்கு பள்ளத்தாக்கிலும் சமவெளியிலும் ஏராளமான ஆடுமாடுகள் இருந்தன; மலைப் பகுதியிலும் வயல்வெளிகளிலும் அவனுக்கு வேளாண்மை செய்வோரும், திராட்சை பயிரிடுவோரும் இருந்தனர். ஏனெனில் அவன் பயிரிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.
11 உசியாவுக்குப் போர்த் திறனுடைய படை ஒன்று இருந்தது. அது எழுத்தர் எயீயேல், அலுவலர் மகசேயா ஆகியோரால் வகுக்கப்பட்டு, அரச அலுவலர் தலைவர்களில் ஒருவரான அனானியாவின் தலைமையில் போருக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது.
12 இப்போர்வீரர்களின் குடும்பத் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு பேர்.
13 அவர்களின் பொறுப்பில் மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு வீரர் கொண்ட ஆற்றல்மிகு படை இருந்தது. அது எதிரியோடு மிகுந்த வலிமையுடன் போரிடுவதில் அரசனுக்குத் துணைநின்றது.
14 உசியா தன் படையினர் அனைவருக்கும் கேடயம், வேல், தலைச்சீரா, மார்க் கவசம், வில், கவண் கற்கள் ஆகியவற்றைச் செய்தான்.
15 அம்பு எய்வதற்கும், பெரிய கற்களை வீசுவதற்கும் திறமை மிக்கோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளை எருசலேமில் செய்து கொத்தளங்கள் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் அவற்றை நிறுவினான். அவன் வியத்தகு முறையில் கடவுளிடமிருந்து உதவி பெற்று, வலிமை அடைந்ததால் அவன் புகழ் வெகுதூரம் பரவியது.
உசியாவின் ஆணவமும் தண்டனையும்
தொகு
16 உசியா வலிமைமிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான். தன் கடவுளாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், தூபபீடத்தின்மேல் தானே தூபம் காட்ட ஆண்டவரின் இல்லத்தில் நுழைந்தான்.
17 ஆனால் குரு அசரியாவும் அவருடன் ஆண்டவரின் எண்பது வலிமைமிகு குருக்களும் தொடர்ந்து சென்றனர்.
18 அவர்கள் அரசன் உசியாவைத் தடுத்து நிறுத்தி, அவனிடம், "ஓ உசியா! ஆண்டவருக்குத் தூபம் காட்டுவது உமது வேலையன்று; தூபம் காட்டுவதற்கெனத் திருநிலைப்படுத்தப்பட்டவரும், ஆரோனின் புதல்வருமான குருக்களுக்கே உரிய பணி அது! ஆதலால், திருத்தலத்தைவிட்டு வெளியே செல்லும்! நீர் செய்வது தவறு! நீர் கடவுளாகிய ஆண்டவரால் மேன்மை பெறமாட்டீர்" என்றனர். [2]
19 அப்பொழுது உசியா சினமுற்றான்; இவ்வாறு அவன், தூப கலசத்தைக் கையில் பிடித்துக்கொண்டே, குருக்கள் மேல் கோபமுற்றபோது, அவர்களுக்கு முன்பாக, ஆண்டவரின் இல்லத்தில் தூபபீடத்திற்கு அருகில், அவன் நெற்றியில் தொழுநோய் கண்டது.
20 தலைமைக் குருவான அசரியாவும் மற்ற எல்லாக் குருக்களும் அவன் நெற்றியில் தொழுநோய் பற்றியிருந்ததைக் கண்டனர். உடனே அவர்கள் அவனை அங்கிருந்து வெளியேற்ற முனைந்தனர்.உசியாவும், ஆண்டவர் தன்னைத் தண்டித்ததால், உடனே வெளியேறினான்.
உசியாவின் இறப்பு
தொகு
21 அரசன் உசியா இறக்கும்வரை ஒரு தொழுநோயாளியாகவே இருந்தான். ஆண்டவரின் இல்லத்திலிருந்து அவன் விலக்கிவைக்கப்பட்டிருந்ததால், ஒரு தொழுநோயாளியாகத் தன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அவன் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி வந்தான்.
22 உசியாவின் பிற செயல்களை, தொடக்கமுதல் இறுதிவரை, ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா எழுதிவைத்துள்ளார்.
23 உசியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். உசியா ஒரு தொழுநோயாளி என்பதால், அவன் மூதாதையரின் அருகில் அரசர்களுக்குரிய கல்லறை நிலம் ஒன்றில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பிறகு அவன் மகன் யோத்தாம் அரசன் ஆனான். [3]
- குறிப்புகள்
[1] 26:1 'அசரியா' என்பது மறுபெயர்.
[2] 26:18 = விப 30:7-8; எண் 3:10.
[3] 26:23 = எசா 6:1.
(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை