திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

சாலமோன் எருசலேம் கோவிலை அர்ப்பணித்தல். விவிலிய வரை ஓவியம். ஆண்டு: 1894.

அதிகாரம் 7

தொகு

திருக்கோவிலின் அர்ப்பணம்

தொகு

(1 அர 8:62-66)


1 சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்றப் பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பியது. [1]
2 ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பியிருந்ததால், குருக்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழைய முடியவில்லை.
3 நெருப்பு இறங்குவதையும், ஆண்டவரின் மாட்சி கோவிலில் இருப்பதையும் இஸ்ரயேலின் மக்கள் அனைவரும் கண்டபோது, தரையில் முகம் குப்பற வீழ்ந்து வழிபட்டனர்; "ஆண்டவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது" என்று அவருக்கு நன்றி கூறினர். [2]
4 அரசரும் மக்கள் யாவரும் ஆண்டவர் திருமுன் பலி செலுத்தினர்.
5 அரசர் சாலமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டார்; இவ்வாறு அரசரும் மக்கள் அனைவரும் கடவுளின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர்.
6 குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து,


"ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது"


என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.


7 அப்போது ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த நடுமுற்றத்தைச் சாலமோன் அர்ப்பணம் செய்தார்; எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் அங்கேதான் அவர் செலுத்தினார். ஏனெனில் சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை.


8 இத்திருவிழாவை சாலமோன் ஏழுநாள் தொடர்ந்து கொண்டாடினார்; அவருடன், ஆமாத்து எல்லை முதல் எகிப்து நதிவரை வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.
9 பலிபீட அர்ப்பணத்தையும், திருவிழாவையும் ஏழு நாள்கள் அவர்கள் கொண்டாடி, எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடத்தினர்.
10 பின்பு, அவர் ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் மக்களை அவர்களின் கூடாரங்களுக்கு அனுப்பினார்; ஆண்டவர் தாவீதுக்கும், சாலமோனுக்கும் தம் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் செய்துள்ள நன்மைத்தனத்தை நினைத்து அவர்கள் உள்ளத்தில் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சென்றனர்.
11 இவ்வாறு சாலமோன், ஆண்டவரின் இல்லத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தார். ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் அவர் செய்ய விரும்பிய அனைத்தையும் வெற்றியுடன் முடித்தார்.

கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்

தொகு

(1 அர 9:1-9)


12 பின்பு ஆண்டவர் சாலமோனுக்கு இரவில் தோன்றி, "நான் உன் விண்ணப்பத்தை ஏற்று, இவ்விடத்தை எனக்குப் பலியிடும் கோவிலாகத் தேர்ந்துகொண்டுள்ளேன்.
13 நான் மழை பெய்யாதவாறு வானத்தை அடைத்தாலும், நாட்டை அழிக்க வெட்டுக் கிளிகளுக்குக் கட்டளையிட்டாலும், என் மக்களிடையே கொள்ளை நோயை அனுப்பினாலும்,
14 எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்; அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்.
15 இவ்விடத்தில் எழுப்பப்படும் வேண்டுதல்களை என் கருணைக் கண் கொண்டு நோக்கிக் கவனத்தோடு செவிகொடுப்பேன்.
16 எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன்; என் கண்ணும் கருத்தும் இதன்மேல் எந்நாளும் இருக்கும்.


17 உன் தந்தை தாவீதுபோல் நீயும் என் திருமுன் நடந்து, என் கட்டளைகளையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் ஏற்று வாழ்ந்தால்,
18 'இஸ்ரயேலை அரசாளும் ஒருவன் உனக்கு இல்லாமல் போகான்' என்று உன் தந்தை தாவீதுடன் நான் செய்த உடன்படிக்கைக்கு ஏற்ப உனது அரசின் அரியணையை நான் நிலைபெறச் செய்வேன். [3]
19 ஆனால், நீங்கள் நெறிதவறி, உங்களுக்கு அளித்துள்ள கட்டளைகளையும் நியமங்களையும் புறக்கணித்து, வேற்றுத் தெய்வங்களுக்குப் பணி செய்து அவற்றை வழிபட்டால்,
20 நான் அவர்களுக்கு அளித்துள்ள எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்திவிட்டு, என் பெயருக்கென திருநிலைப்படுத்திய இக்கோவிலை எனது திருமுன்னின்று அகற்றிவிடுவேன்; இதனை எல்லா நாட்டு மக்களினங்கள் நடுவிலும் பழமொழியாகவும் வசைமொழியாகவும் நிலவச் செய்வேன்.


21 அப்பொழுது உயர்ந்து விளங்கிய இக்கோவிலைக் கடந்து செல்வோர் யாவரும் நடுங்கி, 'ஆண்டவர் இந்நாட்டிற்கும் இக்கோவிலுக்கும் ஏன் இவ்வாறு செய்துவிட்டார்?' என்று கேட்பார்கள்.
22 அதற்கு அவர்கள், 'தங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்கள்மேல் பற்றுக் கொண்டு அவற்றை வழிபட்டு, அவற்றிற்கு ஊழியம் செய்ததனால், அவர் இத்தகைய தீமை முழுவதையும் அவர்கள்மேல் விழச்செய்தார்' என்று பதிலளிப்பர்" என்று உரைத்தார்.

குறிப்புகள்

[1] 7:1 = லேவி 9:23-24.
[2] 7:3 = 1 குறி 16:34; 2 குறி 5:13; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11.
[3] 7:18 = 1 அர 2:4.

அதிகாரம் 8

தொகு

சாலமோனின் ஏனைய அரிய செயல்கள்

தொகு

(1 அர 9:10-28)


1 சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் தம் அரண்மனைiயும் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.
2 அதன்பின், ஈராம் தமக்கு அளித்திருந்த நகர்களைச் சாலமோன் புதுப்பித்து அங்கே இஸ்ரயேல் மக்களைக் குடியமர்த்தினார்.
3 அடுத்து, சாலமோன் அமத்சோபா சென்று அதனைக் கைப்பற்றினார்;
4 பாலைநிலத்தில் தத்மோர் என்ற நகரையும், ஆமாத்துப் பகுதியின் கிடங்கு நகர்கள் அனைத்தையும் எழுப்பினார்.
5 மேலும், மேலைப் பெத்கோரோன், கீழைப் பெத்கோரோன் என்ற நகர்களை மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட அரண்சூழ் நகர்களாக அமைத்தார்.
6 மேலும், பாலாத்தையும், தம் கிடங்கு நகர்களையும், தேர் நகர்களையும், குதிரை வீரர் நகர்களையும் சாலமோன் எழுப்பினார்; அவற்றுடன், எருசலேமிலும், லெபனோனிலும், தம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் தாம் விரும்பிய எல்லாவற்றையும் கட்டியெழுப்பினார்.
7 இஸ்ரயேலர் அல்லாத இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகிய மக்களினத்தாருள் விடப்பட்ட எல்லாரையும் -
8 இஸ்ரயேல் மக்கள் கொல்லாமல் விட்டுவைத்த அவர்களின் வழிமரபினர் எல்லாரையும் - சாலமோன், இன்றுவரை உள்ளதுபோல், கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.
9 ஆனால், சாலமோன் இஸ்ரயேல் மக்களுள் எவரையும் கட்டாய வேலைக்கு உட்படுத்தவில்லை. மாறாக அவர்கள் போர்வீரர்களாகவும் தானைத் தலைவர்களாகவும் தேர்ப்படை, குதிரைப்படையின் தலைவர்களாகவுமே இருந்தனர்.
10 அரசர் சாலமோனுடைய அலுவலர்களின் தலைவர்கள் மொத்தம் இருநூற்று ஐம்பது பேர்; இவர்களே மக்கள்மேலும் அதிகாரம்செலுத்தினர்.


11 'ஆண்டவரின் பேழை வைக்கப்பட்டிருந்த இடங்கள் புனிதம் பெற்றவை. எனவே இஸ்ரயேல் அரசராம் தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழக்கூடாது' என்று சாலமோன் எண்ணி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரிலிருந்து அழைத்துவந்து, அவளுக்கெனத் தாம் கட்டிய அரண்மனையில் குடியமர்த்தினார்.


12 அதன்பின், சாலமோன், மண்டபத்தின் முன் ஆண்டவருக்காகத் தாம் கட்டிய பலிபீடத்தில் அவருக்கு எரிபலிகளைச் செலுத்தினார்.
13 அந்தப் பலிபீடத்தில், மோசேயின் கட்டளைப்படி ஓய்வுநாள், அமாவாசை நாள்களிலும், ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று விழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார். [*]
14 சாலமோன், தம் தந்தை தாவீது கட்டளையிட்டவாறு, திருப்பணி செய்யும் குருக்களின் பிரிவுகளையும், ஒவ்வொரு நாளின் சடங்கிற்கு ஏற்ப புகழ்ப்பண் இசைத்து, குருக்களுக்குத் துணைப்பணி செய்யும் லேவியரின் முறைகளையும் ஒவ்வொரு வாயிலிலும் காவல்புரிய வாயிற்காப்போரின் குழுக்களையும் ஏற்படுத்தினார். கடவுளின் மனிதர் தாவீதின் கட்டளை இப்படியிருந்தது.
15 குருக்களும் லேவியரும் கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட அனைத்திலும் அரச கட்டளையிலிருந்து சிறிதும் பிறழவில்லை.


16 ஆண்டவரின் இல்லம், அடிக்கல் நாட்டப்பட்டது முதல் முழுமை பெறும் வரை, சாலமோனின் திட்டம் இனிதே நடந்தேறியது. இவ்வாறு ஆண்டவரின் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.
17 பின்பு சாலமோன் ஏதோம் நாட்டின் கடலோரப் பகுதிகளான எட்சியோன்கெபேருக்கும், ஏலோத்துக்கும் சென்றார்.
18 ஈராம், கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர்.

குறிப்பு

[*] 8:13 = விப 23:14-17; 34:22-23; எண் 28:9; 29:39; இச 16:16.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை