திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

சேபா நாட்டு அரசி மன்னர் சாலமோனை சந்திக்கிறார். ஓவியர்: நிக்கோலாஸ் க்னூப்ஃபெர். காலம்: சுமார் 1640. காப்பிடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், உருசியா.

அதிகாரம் 9

தொகு

சேபா நாட்டு அரசியின் வருகை

தொகு

(1 அர 10:1-13)


1 சேபாவின் அரசி சாலமோனின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, கடினமான வினாக்களால் அவரைச் சோதிக்க எருசலேம் வந்தார். பெரும் பரிவாரத்தோடும், நறுமணப் பொருள்கள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்த ஒட்டகங்களோடும் அவர் வந்து சாலமோனைக் கண்டு, தம் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினார்.
2 சாலமோன் அவருடைய எல்லா வினாக்களுக்கும் விடையளித்தார்; அவர் அவருக்கு விடுவிக்க இயலாத புதிர் ஒன்றுமில்லை.
3 சேபாவின் அரசி சாலமோனின் ஞானத்தையும் அவர் கட்டியிருந்த அரண்மனையையும் கண்டார்.
4 அத்துடன், அவரது பந்தி உணவுகளையும், அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும், அவர்களது பணியின் ஒழுங்குமுறையையும், அவர்களுடைய சீருடைகளையும், அவருடைய பானம் பரிமாறுவோர், அவர்களுடைய சீருடைகள், மற்றும் ஆண்டவர் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றையும் கண்டபோது அவர் பேச்சற்றுப் போனார்.


5 அவர் அரசரை நோக்கி, "உமது செயல்பற்றியும் உமது ஞானம் பற்றியும் எனது நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே!
6 நான் இங்கு வந்து அவற்றை நேரில் என் கண்களால் காணும்வரை, அவர்கள் சொன்னதை நான் நம்பவில்லை; உம் மிகுந்த ஞானம்பற்றி, அவர்கள் பாதிகூட எனக்குக் கூறவில்லை என உணர்கிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விஞ்சிவிட்டீர்!
7 உம் மனைவியர் பேறுபெற்றோர்! எப்பொழுதும் உம் முன் நின்று உமது ஞானத்தைக் கேட்கிற உம் அலுவலரும் பேறுபெற்றோர்!
8 உம்மீது பரிவுகொண்டு உம்மைத் தம் அரியணையில் ஏற்றி, தமக்காக உம்மை ஓர் அரசராக்கிய உம் கடவுளாம் ஆண்டவர் போற்றி! போற்றி! இஸ்ரயேல் மக்களை என்றென்றும் நிலைநிறுத்த உம் கடவுள் அவர்கள்மேல் கொண்டிருக்கும் அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.


9 பின்பு அவர் அரசரிடம் நூற்றிருபது தாலந்து பொன், மிகுதியான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அளித்தார். சேபாவின் அரசி அரசர் சாலமோனுக்கு அளித்த நறுமணப் பொருள்களைப் போன்று பிறகு என்றுமே அவருக்குக் கிடைக்கவில்லை. [1]


10 ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமோனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்.
11 அரசர் அந்த நறுமண மரங்களால் ஆண்டவர் இல்லத்திற்கும் அரச அரண்மனைக்கும் தேவையான படிக்கட்டுகளையும், பாடகர்களுக்கு சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக்கருவிகளையும் செய்தார். யூதா நாட்டில் அத்தகையவை அதற்குமுன் இருந்ததில்லை.


12 அரசர் சாலமோன் சேபாவின் அரசி விரும்பிக் கேட்டவை எல்லாவற்றையும் அவர் அரசருக்குக் கொண்டு வந்ததைவிட, மிகுதியாகவே அளித்தார். பின்பு அவர் தம் அலுவலருடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.

சாலமோனின் செல்வச் சிறப்பு

தொகு

(1 அர 10:14-25)


13 சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்த பொன்னின் நிறை இருபத்து ஆறாயிரத்து, அறுநூற்று நாற்பது கிலோகிராம். [2]
14 இத்துடன், வியாபாரிகளும் வணிகர்களும் கொண்டு வந்ததைத் தவிர, அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள் நாட்டின் ஆளுநர்களும் சாலமோனுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டுவந்தனர்.
15 சாலமோன் அரசர் பொன் தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தார்; ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏழு கிலோகிராம் [3] பொன் பயன்படுத்தப்பட்டது.
16 அதே போன்று அவர் முந்நூறு சிறிய கேடயங்களைப் பொன் தகட்டால் செய்தார்; ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்றரை கிலோ கிராம் [4] பொன் பயன்படுத்தப்பட்டது. அரசர் இவற்றை 'லெபனோனின் வனம்' என்ற அரச மாளிகையில் வைத்தார்.


17 பின்பு அரசர் தந்தத்தால் பெரியதோர் அரியணை செய்து, அதனைப் பசும் பொன்னால் மூடினார்.
18 அந்த அரியணைக்குப் பொன்னாலான ஆறுபடிகளும், பொன்னாலான ஒரு கால்மணையும் மற்றும் இருக்கையின் இருமருங்கிலும் கைத்தாங்கிகளும் அக்கைத்தாங்கிகளோடு இணைந்த இருசிங்கங்களும் இருந்தன.
19 அந்த ஆறுபடிகளின் இருமருங்கிலுமாகப் பன்னிரு சிங்கங்கள் நின்றன; இது போன்று வேறு எந்த அரசிலும் செய்யப்படவில்லை.


20 அரசர் சாலமோனின் பானபாத்திரங்கள் அனைத்தும் பொன்னாலானவை; 'லெபனோன் வனத்தில்' இருந்த எல்லாக் கலன்களும் பசும் பொன்னால் ஆனவை. சாலமோனின் காலத்தில் வெள்ளிக்கு எத்தகைய மதிப்பும் இல்லை.
21 அரசரின் கப்பல்கள் ஈராமின் பணியாளருடன் தர்சீசுக்குச் சென்று வரும்; மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தர்சீசிலிருந்து கப்பல்கள் பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.


22 செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார்.
23 கடவுள் சாலமோனின் அறிவுக்கு அருளிய ஞானத்தை நேரில் கேட்க உலகின் எல்லா மன்னர்களும் அவரை நாடி வந்தனர்.
24 அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.


25 சாலமோன் குதிரைகளுக்கும் தேர்களுக்குமாக நாலாயிரம் கொட்டில்களையும், பன்னீராயிரம் குதிரை வீரர்களையும் கொண்டிருந்தார்; தேர்களைத் தேர்ப்படை நகர்களிலும் தம்முடன் எருசலேமிலும் நிறுத்தி வைத்திருந்தார்.
26 அவர் பேராறு முதல் பெலிஸ்தியர் நாடு வரையிலும், எகிப்திய எல்லைமட்டும் இருந்த எல்லா மன்னர்கள்மேலும் அதிகாரம்செலுத்தினார். [5]
27 எருசலேமில் வெள்ளி கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் பள்ளத்தாக்கின் அத்தி மரம் போன்றும் ஏராளமாகக் கிடைக்கும்படி செய்தார்.
28 அவர்கள் எகிப்திலிருந்தும், மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகளைக் கொண்டு வந்தனர்.

சாலமோனின் இறப்பு

தொகு

(1 அர 11:41-43)


29 சாலமோனின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும், சீலோவியராகிய அகியாவின் இறைவாக்கிலும், நெபாற்றின் மகன் எரொபவாம் பற்றித் திருக்காட்சியாளர் இத்தோ கண்டு எழுதிய காட்சிகளிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
30 சாலமோன் இஸ்ரயேல் முழுமைக்கும் அரசராக எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
31 பின்பு சாலமோன் தம் மூதாதையருடன் துயில்கொண்டார். அவரை அவர் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவருக்குப்பின் அவர் மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தான்.

குறிப்புகள்

[1] 9: 1-9 = மத் 12:42; லூக் 11:31.
[2] 9:13 'அறுநூற்று அறுபத்தாறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[3] 9:15 'அறுநூறு செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[4] 9:16 'முந்நூறு செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[5] 9:26 யூப்பிரத்தீசு ஆறு.

அதிகாரம் 10

தொகு

வடகுலங்களின் கிளர்ச்சி

தொகு

(1 அர 12:1-20)


1 இஸ்ரயேலர் எல்லாரும் ரெகபெயாமை அரசனாக்க செக்கேமில் கூடினர்; அதனால் ரெகபெயாமும் அங்கே சென்றான்.
2 அரசர் சாலமோனுக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடிச்சென்றிருந்த நெபாற்றின் மகன் எரொபவாம் இதனைக் கேட்டு எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.
3 அவர்கள் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தனர். எரொபவாம் இஸ்ரயேலர் அனைவரோடும் ரெகபெயாமிடம் வந்து,
4 "உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார்; இப்பொழுது நீர் உம் தந்தை சுமத்தின கடினமான வேலையையும் பளுவான நுகத்தையும் எளிதாக்கும்; நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றான்.


5 அதற்கு ரெகபெயாம், "இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.


6 பின்பு தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவரிடம் பணிபுரிந்த பெரியோர்களை நோக்கி ரெகபெயாம், "இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து, என்ன அறிவுரை தருகிறீர்கள்?" என்று கேட்டான்.
7 அவர்கள் அவரிடம், "நீர் இம்மக்களுக்கு அன்பு காட்டி, அவர்கள் மனம் குளிருமாறு இன்சொல் பேசினால், அவர்கள் உமக்கு எந்நாளும் பணியாளராய் இருப்பர்" என்றனர்.


8 ஆனால் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, அவன் தன்னோடு வளர்ந்து தனக்குப் பணிசெய்த இளைஞர்களுடன் கலந்துரையாடினான்.
9 அவன் அவர்களிடம், "'உம் தந்தை எங்கள்மேல் சுமத்தின நுகத்தை எளிதாக்கும்' என்று கேட்கும் இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து என்ன அறிவுரை தருகிறீர்கள்?" என்று கேட்டான்.
10 அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம், "'உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்' என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்: என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது;
11 என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன்; என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்; நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்' என்று பதிலளிக்கவும்" என்று கூறினர்.


12 'மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்' என்று அரசன் கட்டளையிட்டபடி மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர்.
13 அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான்.
14 இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம், "என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்; நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்" என்று கூறினான்.
15 இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை; ஏனெனில் சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன.


16 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு, "எங்களுக்குச் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ராயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திருப்பிச் செல்லுங்கள். தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்!" என்று கூறிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர். [*]
17 ஆனால் யூதா நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள்மீது ரெகபெயாமே ஆட்சி செலுத்தினான்.


18 பின்பு அரசன் ரெகபெயாம், கட்டாய வேலைத் திட்டத்தை முன்பு செயல்படுத்தியவனான அதோராமை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பி வைத்தான். அவர்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்; அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பியோடிப் போனான்.
19 தாவீதின் குடும்பத்திற்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.

குறிப்பு

[*] 10:16 = 2 சாமு 20:1.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை