திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை
2 சாமுவேல் (The Second Book of Samuel)
தொகுஅதிகாரங்கள் 9 முதல் 10 வரை
அதிகாரம் 9
தொகுதாவீதும் மெபிபொசேத்தும்
தொகு
1 "யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?" என்று தாவீது கேட்டார். [1]
2 சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிச் சென்றனர். "நீ தான் சீபாவா?" என்று அரசர் அவனிடம் கேட்க, "அடியேன் தான்" என்று அவன் பதிலிறுத்தான்.
3 "கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?" என்று அரசர் கேட்டார். "யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான்" என்று அரசனிடம் சீபா பதிலளித்தான். [2]
4 "எங்கே அவன்?" என்று அரசர் அவனிடம் கேட்க, "லோதபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்" என்று அரசரிடம் சீபா கூறினான்.
5 லோதபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச் செய்தார்.
6 சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற விழுந்து வணங்கினான். "மெபிபொசேத்து" என்று தாவீது அழைக்க, "இதோ! உம் அடியான்" என்று அவன் பதிலிறுத்தான்.
7 தாவீது அவனிடம் "அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்குக் கருணை காட்டுவது உறுதி. உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்கு மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய்" என்று கூறினார்.
8 அவன் வணங்கி, "நான் செத்த நாய் போன்ற பணியாளன்; நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது?" என்றான்.
9 பிறகு அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து, "சவுலுக்கும் அவர்தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.
10 உன் தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டு வருவீர்கள். ஆனால் உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் என்னுடன் உணவருந்துவான்" என்று கூறினார்.
11 "என் தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைப்படியே உம் பணியாளனும் செய்வான்" என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.
12 மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச் சார்ந்த அனைவரும் மெபிபொசேத்தின் பணியாளராக இருந்தனர்.
13 இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான், எனவே எருசலேமிலேயே தங்கியிருந்தான்.
- குறிப்புகள்
[1] 9:1 = 1 சாமு 20:15-17.
[2] 9:3 = 2 சாமு 4:4.
அதிகாரம் 10
தொகுஅம்மோனியரையும் சிரியரையும் தாவீது வெல்லல்
தொகு(1 குறி 19:1-19)
1 இதன் பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.
2 "நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்; ஏனெனில் அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்து கொண்டார்" என்று தாவீது கூறினார். அவனுடைய தந்தையைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும், அம்மோனியர் நாட்டுக்கு சென்றனர்.
3 "ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உன் தந்தையை மேன்மைப்படுத்துகிறார் என்று நினைக்கிறாயோ? நகரைக் கண்டு வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்!" என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.
4 எனவே ஆனூன் தாவீதின் பணியாளரைப் பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்திரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.
5 இது தாவீதுக்கு அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரைச் சந்திக்க ஆளனுப்பினார். "உங்கள் தாடிகள் வளரும் வரை எரிகோவில் தங்கி, பிறகு திரும்புங்கள்" என்று அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.
6 அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்தும் சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடு தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.
7 தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.
8 அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இருந்தனர்.
9 தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார்.
10 மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்; அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
11 மேலும் யோவாபு "சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும்.
12 நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும்" என்று கூறினார்.
13 யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்; சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.
14 சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்கு திரும்பிவந்தார்.
15 இஸ்ரயேலிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாகக் கூடினர்.
16 அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர்.
17 தாவீது இதைக் கேட்டவுடன், அனைத்து இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி, யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.
18 சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார்; மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க, அவனும் அங்கே மடிந்தான்.
19 அததேசருக்குக் கப்பம் கட்டி வந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்கு பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.
(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை