திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை
2 சாமுவேல் (The Second Book of Samuel)
தொகுஅதிகாரங்கள் 7 முதல் 8 வரை
அதிகாரம் 7
தொகுதாவீதுக்கு நாத்தானின் செய்தி
தொகு(1 குறி 17:1-15)
1 அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
2 அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, "பாரும் நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது" என்று கூறினார்.
3 அதற்கு நாத்தான், "நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று அரசனிடம் சொன்னார்.
4 அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது:
5 "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: 'நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?
6 இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது.
7 இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது 'எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்?' என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?
8 எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.
9 நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்வேன்.
10-11 எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்ககாலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.
12 உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். [1]
13 எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.
14 நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். [2]
15 உன் முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்று அவனை விலக்கமாட்டேன்.
16 என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!" [3]
17 மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.
தாவீதின் நன்றிப் பாடல்
தொகு(1 குறி 17:16-27)
18 பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: "என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது?
19 இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே!
20 தாவீது உம்மிடம் மேலும் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.
21 உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர்.
22 ஆகவே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி, நீர் மகத்தானவர்; உம்மைப்பேன்று வேறு எவரும் இலர்; உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.
23 உம் மக்கள் இஸ்ரயேலரைப்போல் வேறு யார் உளர்? அவர்களை உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்றினங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்! [4]
24 என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்கு உரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!
25 ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் எவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!
26 உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் 'படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்' என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.
27 ஏனெனில் படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! 'நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்' என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.
28 தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே!
29 உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!"
- குறிப்புகள்
[1] 7:12 = திபா 89:3-4; 132:11; யோவா 7:42; திப 2:30.
[2] 7:14 = திபா 89:26-27; 2 கொரி 6:18; எபி 1:5.
[3] 7:16 = திபா 89:36-37.
[4] 7:23 = இச 4:34.
அதிகாரம் 8
தொகுதாவீதின் வெற்றிகள்
தொகு(1 குறி 18:1-17)
1 இதன் பிறகு தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2 அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களைத் தரையில் படுக்கச் செய்து நூலால் அளந்து இருபகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.
3 மேலும் யூப்பிரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அததேசரையும் தாவீது தோற்கடித்தார்.
4 தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத் தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.
5 தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அததேசருக்கு உதவ வந்தபோது, அவர்களுள் இருபத்து இரண்டாயிரம் பேரைத் தாவீது கொன்றார்.
6 பிறகு தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்கு கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
7 அததேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற்கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
8 அததேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்தும், பெரோத்தாவிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.
9 அததேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.
10 உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்; ஏனெனில் தோயி அததேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டு வந்தான்.
11 இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார்.
12 அந்நாடுகளாவன: ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர். சோபாவின் மன்னன் அததேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.
13 தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று. [*]
14 அவர் ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்குக் கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.
15 தாவீது அனைத்து இஸ்ரயேல் மீதும் ஆட்சிபுரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார்.
16 செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபாத்து ஆவணக் காப்பாளராகவும்
17 அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலராகவும் பணியாற்றினர்.
18 யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.
- குறிப்பு
[*] 8:13 = திபா 63 தலைப்பு.
(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை