திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செக்கரியா/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

"படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில்...சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்." - செக்கரியா 8:4.


அதிகாரம் 7

தொகு

போலி நோன்புக்கு எதிரான கண்டனக் குரல்

தொகு


1 அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில்
கிஸ்லேவு என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாளன்று
ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.
2 பெத்தேலில் வாழ்வோர் சரேட்சரையும்
இரகேம்மெலக்கையும் மற்றும் அவனுடைய ஆள்களையும்
ஆண்டவரின் அருளைப் பெற மன்றாடுமாறு அனுப்பினார்கள். மேலும்
3 படைகளின் ஆண்டவரது கோவிலில் இருக்கும் குருக்களையும்
இறைவாக்கினர்களையும் கண்டு,
"நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்தது போல்
ஐந்தாம் மாதத்தில் நோன்பிருந்து புலம்ப வேண்டுமா?"
என்று கேட்டு வரவும் இவர்களை அனுப்பினார்கள்.


4 அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5 நாட்டின் எல்லா மக்களுக்கும் குருக்களுக்கும் நீ கூறவேண்டியது:
"இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும்
ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு அழுதீர்களே,
எனக்காகவா நோன்பிருந்தீர்கள்?
6 நீங்கள் உணவருந்தியபோதும் குடித்தபோதும்
உங்களுக்காகத்தானே உணவருந்தினீர்கள்?
உங்களுக்காகத்தானே குடித்தீர்கள்?
7 எருசலேமில் மக்கள் குடியேறிய போதும்,
அந்நகர் சீரும் சிறப்புமாய் இருந்தபோதும்,
அதைச் சூழ்ந்திருந்த நகர்கள் தென்நாடு, சமவெளி நிலம்
ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும்,
முன்னாளைய இறைவாக்கினர் வாயிலாக
ஆண்டவர் முழங்கிய சொற்கள் இவை அல்லவா?"

கீழ்ப்படியாமையே நாடுகடத்தப்பட்டதற்குக் காரணம்

தொகு


8 மீண்டும் ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.
9 "படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நேர்மையுடன் நீதி வழங்குங்கள்;
ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்;
10 கைம்பெண்ணையோ, அனாதையையோ,
அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்;
உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத்
தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்."
11 ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்;
இறுகிய மனத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள்.
12 படைகளின் ஆண்டவர் தம் ஆவியால்
முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த
திருச்சட்டத்தையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி
பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டார்கள்;
ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார்.
13 "நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல,
அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை,"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
14 "ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்;
இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று;
போவார் வருவார் எவருமே அங்கில்லை;
இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள்."


அதிகாரம் 8

தொகு

எருசலேமைக் கட்டுவதற்கு ஆண்டவரின் வாக்குறுதி

தொகு


1 படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
2 "சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்;
அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.
3 "ஆண்டவர் கூறுவது இதுவே:
சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்;
எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்;
எருசலேம் 'உண்மையுள்ள நகர்' என்றும்,
படைகளின் ஆண்டவரது மலை 'திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.
4 படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே:
எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்;
வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும்
தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;
5 நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்;
அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்."
6 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
"இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம்
அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும்,
என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
7 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
"இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும்
என் மக்களை விடுவிப்பேன்;
8 அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்;
அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்;
அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்;
உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்."
9 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
"படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி
அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய
இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் செவிசாய்ப்போரே,
உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
10 ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ
கால்நடைகளுக்கோ கூலிகிடைக்கவில்லை;
போவார் வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை.
நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன்.
11 இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்போருக்கு
முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன்,"
என்கிறார் படைகளின் ஆண்டவர். [*]
12 ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள்.
திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்;
வயல் நிலம் தன் விளைவைத் தரும்;
வானம் பனியைப் பொழியும்;
நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர்
இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன்.
13 யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே!
வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்;
இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்;
நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்;
அஞ்சாதீர்கள்; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்."


14 ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
"உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது
நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன்,"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
15 அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும்
யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்;
ஆகையால் அஞ்சாதீர்கள்.
16 நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே:
ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்;
உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு
நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்;
17 ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய
மனத்தாலும் நினைக்க வேண்டாம்;
பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்;
ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன்," என்கிறார் ஆண்டவர்.


18 படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:
19 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நான்காம் மாதத்தின் நோன்பும், ஐந்தாம் மாதத்தின் நோன்பும்,
ஏழாம் மாதத்தின் நோன்பும், பத்தாம் மாதத்தின் நோன்பும்
யூதா குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த
மாபெரும் திருவிழா நாள்களாக மாறிவிடும்.
ஆதலால் வாய்மையையும் நல்லுறவையும் நாடுங்கள்.


20 படைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும்கூட வருவார்கள்.
21 ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று,
"நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும்
படைகளின் ஆண்டவரை வழிபடவும்,
தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்;
நாங்களும் வருகிறோம்" என்று சொல்வார்கள்.
22 மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும்
படைகளின் ஆண்டவரை நாடவும்
அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
23 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
"அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும்
பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு,
'கடவுள் உங்களோடு இருக்கின்றார்' என்று நாங்கள் கேள்விப்பட்டதால்
நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்."


குறிப்பு

[*] 8:11 = எபே 4:25.


(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை