திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 125 முதல் 126 வரை

"கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்" (திருப்பாடல் 126:5).

திருப்பாடல்கள்

தொகு

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 125 முதல் 126 வரை

திருப்பாடல் 125

தொகு

இறைமக்களைப் பாதுகாப்பவர்

தொகு

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்)


1 ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர்
சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்.


2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல,
ஆண்டவர் இப்போதும் எப்போதும்
தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.


3 நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்
பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;
இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்ய நேரிடும்.


4 ஆண்டவரே! நல்லவர்களுக்கும்
நேரிய இதயமுள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும்.


5 கோணல் வழிநோக்கித் திரும்புவோரை
ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார்.
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!


திருப்பாடல் 126

தொகு

விடுதலைக்காக மன்றாடல்

தொகு

(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்)


1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.


2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;
"ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்"
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.


4 ஆண்டவரே!
தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக
வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.


5 கண்ணீரோடு விதைப்பவர்கள்
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.


6 விதை எடுத்துச் செல்லும்போது -
செல்லும்போது -
அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது -
வரும்போது -
அக்களிப்போடு வருவார்கள்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 127 முதல் 128 வரை