திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 127 முதல் 128 வரை

"ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்" - திருப்பாடல் 127:1. விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல் 127

தொகு

கடவுளின் அருளும் நலன்களும்

தொகு

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்;
சாலமோனுக்கு உரியது
)


1 ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்,
அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்;
ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில்,
காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.


2 வைகறையில் விழித்தெழுந்து
நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர்
தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே!
உறங்கும்போதும் கடவுளின் அன்பர்
தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.


3 பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்;
மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.


4 இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர்
வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.


5 அவற்றால் தம் அம்பறாத் தூணியை
நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்;
நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது,
அவர் இகழ்ச்சியடையமாட்டார்.


திருப்பாடல் 128

தொகு

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்

தொகு

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)


1 ஆண்டவருக்கு அஞ்சி
அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!


2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!


3 உம் இல்லத்தில் உம் துணைவியார்
கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்;
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்
ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.


4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்
இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.


5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!
உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின்
நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!


6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக!
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 129 முதல் 130 வரை