திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 131 முதல் 132 வரை
திருப்பாடல்கள்
தொகுஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 131 முதல் 132 வரை
திருப்பாடல் 131
தொகுபணிவுமிகு மன்றாட்டு
தொகு(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்;
தாவீதுக்கு உரியது)
1 ஆண்டவரே!
என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை;
என் பார்வையில் செருக்கு இல்லை;
எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,
செயல்களில் நான் ஈடுபடுவதில்லை;
2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும்
அமைதியும் கொண்டுள்ளது;
தாய்மடி தவழும் குழந்தையென
என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.
3 இஸ்ரயேலே!
இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!
திருப்பாடல் 132
தொகுதிருக்கோவில் வாழ்த்து
தொகு(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும்
நினைவு கூர்ந்தருளும்.
2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை,
யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த
பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும்.
3 "ஆண்டவருக்கு ஓர் இடத்தை,
யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை
நான் அமைக்கும் வரையில்,
4 என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்ல மாட்டேன்;
படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்;
5 என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;
என் இமைகளை மூடவிடமாட்டேன்" என்று அவர் சொன்னாரே.
6 திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;
வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
7 "அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்;
அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!" என்றோம்.
8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன்
உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
9 உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக!
உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!
10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை,
உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். [1]
11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;
அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்கமாட்டார்; [2]
"உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி
உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.
12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும்,
நான் அவர்களுக்குக் கற்பிக்கும்
என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,
அவர்களுடைய மைந்தரும் என்றென்றும்
உன் அரியணையில் வீற்றிருப்பர்."
13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்;
அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14 "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்;
இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.
15 இங்கே என் ஆசியால் உணவுப் பொருள்
தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;
அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன்.
16 இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்;
இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.
17 இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச்செய்வேன்;
நான் திருப்பொழிவு செய்தவனுக்காக
ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன். [3]
18 அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும்
உடையை உடுத்துவேன்;
அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்".
- குறிப்புகள்
[1] 132:6-10 = 2 குறி 6:41-42.
[2] 132:11 = 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 89:3-4; திப 2:30.
[3] 132:17 = 1 அர 11:36.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 133 முதல் 134 வரை