திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 129 முதல் 130 வரை

"என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்" - திருப்பாடல் 129:1. விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல் 129

தொகு

இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது

தொகு

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)


1 "என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்" -
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!


2 "என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்;
எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.


3 உழவர் என் முதுகின்மீது
உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்."


4 ஆண்டவர் நீதியுள்ளவர்;
எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.


5 சீயோனைப் பகைக்கும் அனைவரும்
அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!


6 கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;
வளருமுன் அது உலர்ந்துபோகும்.


7 அதை அறுப்போரின் கைக்கு,
ஒரு பிடிகூடக் கிடைக்காது;
அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.


8 வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,
'ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!' என்றோ
'ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்' என்றோ சொல்லார்.


திருப்பாடல் 130

தொகு

உதவிக்காக மன்றாடல்

தொகு

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)


1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான்
உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;


2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள்
கவனத்துடன் கேட்கட்டும்.


3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்க முடியும்?


4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.


5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்;
என் நெஞ்சம் காத்திருக்கின்றது;
அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.


6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட,
ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.


7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.


8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! [*]


குறிப்பு

[*] 130:8 = மத் 1:21; தீத் 2:14


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 131 முதல் 132 வரை