திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 139 முதல் 140 வரை
திருப்பாடல்கள்
தொகுஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 139 முதல் 140 வரை
திருப்பாடல் 139
தொகுமுழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்
தொகு(பாடகர் தலைவர்க்கு:
தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே!
நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்;
என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்;
என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.
4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே,
அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;
உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.
6 என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;
அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.
7 உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்?
உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்!
பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீர்!
9 நான் கதிரவனின் இடத்திற்கும் [*] பறந்து சென்றாலும்
மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,
10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்;
உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.
11 'உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ?
ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?'
என்று நான் சொன்னாலும்,
12 இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை;
இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது;
இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.
13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே!
என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில்
நீர் என்னைப் படைத்ததால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;
உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை
என் மனம் முற்றிலும் அறியும்.
15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று;
மறைவான முறையில் நான் உருவானதையும்
பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும்
நீர் அறிந்திருந்தீர்.
16 உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன;
நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம்
எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே
உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.
17 இறைவா!
உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது
எத்துணைக் கடினம்!
அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!
18 அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால்,
அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன;
அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,
நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.
19 கடவுளே!
நீர் தீயோரைக் கொன்றுவிட்டால், எவ்வளவு நலம்!
இரத்தப்பழிகாரர் என்னிடமிருந்து அகன்றால்,
எத்துணை நன்று!
20 ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்
உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;
அவர்கள் தலைதூக்கி உமக்கு எதிராய்ச்
சதி செய்கின்றார்கள்.
21 ஆண்டவரே!
உம்மை வெறுப்போரை நானும் வெறுக்காதிருப்பேனோ?
உம்மை எதிர்க்க எழுவோரை
நானும் வெறுக்கின்றேன் அன்றோ?
22 நான் அவர்களை அடியோடு வெறுக்கின்றேன்;
அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.
23 இறைவா!
நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்;
என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.
24 உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்;
என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.
- குறிப்பு
[*] 139:9 "கதிரவனின் இடத்திற்கும்" என்பதற்கு
"வைகறையின் இறக்கைகளால்" என்பது எபிரேய பாடம்.
திருப்பாடல் 140
தொகுபாதுகாப்புக்காக மன்றாடல்
தொகு(பாடகர் தலைவர்க்கு:
தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்;
வன்செயல் செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
2 அவர்கள் தம் மனத்தில் தீயனவற்றை திட்டமிடுகின்றனர்;
நாள்தோறும் சச்சரவுகளைக் கிளப்பி விடுகின்றனர்.
3 அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்;
அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா) [*]
4 ஆண்டவரே! தீயோரின் கையினின்று என்னைக் காத்தருளும்;
கொடுமை செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்;
அவர்கள் என் காலை வாரிவிடப் பார்க்கின்றார்கள்.
5 செருக்குற்றோர் எனக்கெனக் கண்ணியை மறைவாக வைக்கின்றனர்;
தம் கயிறுகளால் எனக்கு சுருக்கு வைக்கின்றனர்;
6 நானோ ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டினேன்;
நீரே என் இறைவன்! ஆண்டவரே!
உம் இரக்கத்திற்காக நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.
7 என் தலைவராகிய ஆண்டவரே!
எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே!
போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீர்!
8 ஆண்டவரே!
தீயோரின் விருப்பங்களை நிறைவேற்றாதேயும்;
அவர்களின் சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும்.
இல்லையெனில், அவர்கள் ஆணவம் கொள்வார்கள். (சேலா)
9 என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன் நடக்கின்றார்கள்;
அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை அவர்கள்மேலே விழுவதாக!
10 நெருப்புத் தழல் அவர்கள்மேல் விழுவதாக!
மீளவும் எழாதபடி படுகுழியில் தள்ளப்படுவார்களாக!
11 புறங்கூறும் நாவுடையார் உலகில் நிலைத்து வாழாதிருப்பராக!
வன்செயல் செய்வாரைத் தீமை விரட்டி வேட்டையாடுவதாக!
12 ஏழைகளின் நீதிக்காக ஆண்டவர் வழக்காடுவார் எனவும்
எளியவர்களுக்கு நீதி வழங்குவார் எனவும் அறிவேன்.
13 மெய்யாகவே, நீதிமான்கள் உமது பெயருக்கு நன்றி செலுத்துவார்கள்;
நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.
- குறிப்பு
[*] 140:3 = உரோ 3:13.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 141 முதல் 142 வரை