திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 141 முதல் 142 வரை
திருப்பாடல்கள்
தொகுஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 141 முதல் 142 வரை
திருப்பாடல் 141
தொகுமாலை மன்றாட்டு
தொகு(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே!
நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.
உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது
என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
2 தூபம்போல் என் மன்றாட்டு உம் திருமுன்
ஏற்றுக்கொள்ளப்படுவதாக!
மாலைப் பலிபோல் என் கைகள்
உம்மை நோக்கி உயர்வனவாக! [*]
3 ஆண்டவரே!
என் நாவுக்குக் காவல் வைத்தருளும்;
என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
4 என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்;
தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;
தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்;
அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும்.
5 நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்;
அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்;
ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே
என் தலையில் படாமல் இருக்கட்டும்;
ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய்
நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.
6 அவர்கள் நீதிபதிகளிடம் தண்டனைக்கென
ஒப்புவிக்கப்படும் பொழுது,
நான் சொன்னது எவ்வளவு உண்மையானது
என்று ஏற்றுக் கொள்வார்கள்;
7 'ஒருவரால் பாறை பிளந்து சிதறடிக்கப்படுவதுபோல்,
எங்கள் எலும்புகளும் பாதாளத்தின் வாயிலில் சிதறடிக்கப்படும்' என்பார்கள்.
8 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே!
என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன;
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;
என் உயிரை அழியவிடாதேயும்.
9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து
என்னைக் காத்தருளும்;
தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து
என்னைப் பாதுகாத்தருளும்.
10 தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்
ஒருங்கே வந்து விழுவார்களாக!
நானோ தடையின்றிக் கடந்து செல்வேனாக!
- குறிப்பு
[*] 141:2 = திவெ 5:8.
திருப்பாடல் 142
தொகுஉதவிக்காக மன்றாடல்
தொகு(தாவீதின் அறப்பாடல்;
குகையில் இருந்தபொழுது மன்றாடியது) [*]
1 ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்;
உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன்.
2 என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;
அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்;
3 என் மனம் சோர்வுற்றிருந்தது;
நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்;
நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
4 வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;
என்னைக் கவனிப்பார் எவருமிலர்;
எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;
என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.
5 ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
'நீரே என் அடைக்கலம்;
உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.
6 என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;
ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்;
என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து
எனக்கு விடுதலை அளித்தருளும்;
ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்.
7 சிறையினின்று என்னை விடுவித்தருளும்;
உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்;
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்;
ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.
- குறிப்பு
[*] 142 தலைப்பு = 1 சாமு 22:1; 24:3.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 143 முதல் 144 வரை