திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 13 முதல் 14 வரை

தாவீது அரசர் யாழ் இசைக்கிறார். பாரிசு விவிலியப் பாடல் நூல். ஆண்டு: சுமார் 960. காப்பிடம்: காண்ஸ்டாண்டிநோபுள்.

திருப்பாடல்கள்

தொகு

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 13 முதல் 14 வரை

திருப்பாடல் 13

தொகு

உதவிக்காக மன்றாடல்

தொகு

(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்?
இறுதிவரை மறந்துவிடுவீரோ?
இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?


2 எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்?
நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;
எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?


3 என் கடவுளாகிய ஆண்டவரே,
என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்;
என் விழிகளுக்கு ஒளியூட்டும்.


4 அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்;
என் எதிரி, 'நான் அவனை வீழ்த்திவிட்டேன்' என்று சொல்லமாட்டான்;
நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.


5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்;
நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.


6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.


திருப்பாடல் 14

தொகு

இறைப்பற்று இல்லார்

தொகு

(பாடகர் தலைவர்க்கு; தாவீதுக்கு உரியது)
(திபா 53)


1 'கடவுள் இல்லை' என அறிவிலிகள்
தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்;
அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நல்லது செய்வார் எவருமே இல்லை.


2 ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்;
மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ
எனப் பார்க்கின்றார்.


3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;
ஒருமிக்கக் கெட்டுப் போயினர்; [*]
நல்லது செய்வார் யாரும் இல்லை;
ஒருவர்கூட இல்லை.


4 தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ?
உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்களே!
அவர்கள் ஆண்டவரைநோக்கி மன்றாடுவதுமில்லை.


5 அவர்கள் அஞ்சி நடுங்குவர்;
ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.


6 எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்;
ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.


7 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக!
ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும்
வளமான வாழ்வை அருளும்போது,
யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!
இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!


குறிப்பு

[*] 14:1-3 = உரோ 3:10-12.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 15 முதல் 16 வரை