திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 15 முதல் 16 வரை
திருப்பாடல்கள்
தொகுமுதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 15 முதல் 16 வரை
திருப்பாடல் 15
தொகுகடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை
தொகு(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
2 மாசற்றவராய் நடப்போரே! -
இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுவர்;
3 தம் நாவினால் புறங்கூறார்;
தம் தோழருக்குத் தீங்கிழையார்;
தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;
தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்;
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; -
இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
திருப்பாடல் 16
தொகுபற்றுறுதியும் நம்பிக்கையும்
தொகு(தாவீதின் கழுவாய்ப் பாடல்)
1 இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.
3 பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்!
அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
4 வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்
தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில்
நான் கலந்து கொள்ளேன்;
அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.
5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
6 இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன;
உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.
7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; [1]
அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
9 என் இதயம் அக்களிக்கின்றது;
என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; [2]
உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
- குறிப்புகள்
[1] 16:8 = திப 2:25-28.
[2] 16:10 = திப 13:35.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 17 முதல் 18 வரை