திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 31 முதல் 32 வரை
திருப்பாடல்கள்
தொகுமுதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 31 முதல் 32 வரை
திருப்பாடல் 31
தொகுஇறைவனின் நம்பிக்கை
தொகு(பாடகர் தலைவனுக்கு; தாவீதின் புகழ்ப்பா)'
1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
2 உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்;
விரைவில் என்னை மீட்டருளும்;
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்;
என்னைப் பாதுகாக்கும் வலிமை மிகு கோட்டையாய் இரும்.
3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;
உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.
4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து
என்னை விடுவித்தருளும்;
ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே,
நீர் என்னை மீட்டருளினீர். [*]
6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து,
ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
7 உமது பேரன்பில் நான் களிகூர்வேன்;
அக்களிப்பேன்;
என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;
என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்.
8 என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை;
அகன்ற இடத்தில் என்னைக் காலூன்றி நிற்கவைத்தீர்.
9 ஆண்டவரே, எனக்கு இரங்கும்;
ஏனெனில், நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்;
துயரத்தால் என் கண்ணும் என் உயிரும்
என் உடலும் தளர்ந்து போயின.
10 என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;
ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது;
துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது;
என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.
11 என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்;
என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்;
என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;
என்னைத் தெருவில் பார்ப்போர்
என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.
12 இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்;
உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.
13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது;
எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது.
அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்;
என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள்.
14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
'நீரே என் கடவுள்' என்று சொன்னேன்.
15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும்
உமது கையில் உள்ளது;
என் எதிரிகளின் கையினின்றும்
என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும்
என்னை விடுவித்தருளும்.
16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்;
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
17 ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;
என்னை வெட்கமுற விடாதேயும்;
பொல்லார் வெட்கிப்போவார்களாக!
பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!
18 பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக!
செருக்கும் பழிப்புரையும் கொண்டு,
நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா
கட்டுண்டு கிடப்பதாக!
19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு
நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது!
உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில்
நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி
உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்!
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து
உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்!
21 ஆண்டவர் போற்றி! போற்றி!
ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,
அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்
எனக்கு விளங்கச் செய்தார்.
22 நானோ, கலக்கமுற்ற நிலையில்
'உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்' என்று சொல்லிக் கொண்டேன்;
ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது,
நீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர்.
23 ஆண்டவரின் அடியார்களே,
அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;
ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்;
ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு
அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார்.
24 ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே,
நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும்
உறுதியும் கொண்டிருங்கள்.
- குறிப்பு
[*] 31:5 = லூக் 23:46.
திருப்பாடல் 32
தொகுபாவ அறிக்கையும் மன்னிப்பும்
தொகு(தாவீதின் அறப் பாடல்)
1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,
எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,
அவர் பேறு பெற்றவர்.
2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,
அவர் பேறுபெற்றவர். [*]
3 என் பாவத்தை அறிக்கையிடாதவரை,
நாள்முழுவதும் நான் கதறி அழுததால்,
என் எலும்புகள் கழன்று போயின.
4 ஏனெனில், இரவும் பகலும்
உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது;
கோடையின் வறட்சிபோல
என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா)
5 'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;
என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும்
உம்மை நோக்கி மன்றாடுவர்;
பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது.
7 நீரே எனக்குப் புகலிடம்;
இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்;
உம் மீட்பினால் எழும் ஆரவாரம்
என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.
8 நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;
நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.
9 கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி
உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ
கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!
10 பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல;
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை
அவரது பேரன்பு சூழந்து நிற்கும்.
11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்;
நேரிய உள்ளத்தோரே,
நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.
- குறிப்பு
[*] 32:1-2 = உரோ 4:7-8.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 33 முதல் 34 வரை