திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 33 முதல் 34 வரை
திருப்பாடல்கள்
தொகுமுதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 33 முதல் 34 வரை
திருப்பாடல் 33
தொகுபுகழ்ச்சிப் பாடல்
தொகு
1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்;
நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்;
திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின;
அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.
7 அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்;
அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார்.
8 அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!
உலகில் வாழ்வோர் அனைரும் அவருக்கு அஞ்சி நடுங்குவராக!
9 அவர் சொல்லி உலகம் உண்டானது;
அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.
10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்;
மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.
11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;
அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;
மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து
உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார்.
15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே!
அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே!
16 தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெறும் அரசருமில்லை;
தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.
17 வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்;
மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது.
18 தமக்கு அஞ்சி நடப்போரையும்
தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்
ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;
ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 34
தொகுகடவுளின் கருணையைப் புகழ்தல்
தொகு(தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன்
பித்துப் பிடித்தவர் போலத்
தம்மைக் காட்டியபோது
அவன் அவரைத் துரத்திவிட,
அவர் வெளியேறினார்;
அப்போது அவர் பாடியது) [1]
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும்
அவனை விடுவித்துக் காத்தார்.
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை
அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்;
அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும்,
ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.
11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்!
ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.
12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?
வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? [2]
13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு;
வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!
14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்;
நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு.
15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;
அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது,
ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;
அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;
அவற்றுள் ஒன்றும் முறிபடாது. [3]
21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;
நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.
22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.
- குறிப்புகள்
[1] 34 தலைப்பு = 1 சாமு 21:13-15; 34:8; 1 பேது 2:3.
[2] 34:12 = 1 பேது 3:10-12.
[3] 34:20 = யோவா 19:36.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 35 முதல் 36 வரை