திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 63 முதல் 64 வரை

தாவீது அரசர். ஓவியர்: காட்லீப் வெல்ட்டோ. 18ஆம் நூற்றாண்டு. செருமனி.

திருப்பாடல்கள் தொகு

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 63 முதல் 64 வரை

திருப்பாடல் 63 தொகு

கடவுளுக்காக ஏங்குதல் தொகு

(யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது,
தாவீது பாடிய புகழ்ப்பா)
[*]



1 கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.


2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.


3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.


4 என் வாழ்க்கை முழுவதும்
இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.


5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல
என் உயிர் நிறைவடையும்;
என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்
உம்மைப் போற்றும்.


6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.


7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்;
உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.


8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.


9 என்னை அழித்துவிடத் தேடுவோர்
பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.


10 அவர்கள் வாளுக்கு இரையாவர்;
நரிகளுக்கு விருந்தாவர்.


11 அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்;
அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும்
பெருமிதம் கொள்வர்;
பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்.


குறிப்பு

[*] திபா 63: தலைப்பு = 1 சாமு 23:14.


திருப்பாடல் 64 தொகு

பாதுகாப்புக்காக வேண்டல் தொகு

(பாடகர் தலைவர்க்கு;
தாவீதின் புகழ்ப்பா)


1 கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்;
என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று
என் உயிரைக் காத்தருளும்.


2 பொல்லாரின் சூழ்ச்சியினின்றும்
தீயோரின் திட்டத்தினின்றும்
என்னை மறைத்துக் காத்திடும்.


3 அவர்கள் தங்கள் நாவை
வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்;
நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்;


4 மறைவிடங்களில் இருந்துகொண்டு
மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்;
அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்;


5 தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்;
'நம்மை யார் பார்க்க முடியும்' என்று சொல்லி
மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச்
சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;


6 நேர்மையற்ற செயல்களைச் செய்யத்
திட்டமிடுகின்றார்கள்;
'எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை
உருவாக்கியுள்ளோம்' என்கின்றார்கள்;
மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை.


7 ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய,
அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.


8 தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்;
அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள்.


9 அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்;
கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்;
அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.


10 நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்;
அவரிடம் அடைக்கலம் புகுவர்;
நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 65 முதல் 66 வரை