திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 65 முதல் 66 வரை
திருப்பாடல்கள்
தொகுஇரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 65 முதல் 66 வரை
திருப்பாடல் 65
தொகுநன்றிப் புகழ்ப்பா
தொகு(பாடகர் தலைவர்க்கு;
தாவீதின் புகழ்ப்பாடல்)
1 கடவுளே,
சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது!
உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது!
2 மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே!
மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்.
3 எங்கள் பாவங்களின் பளுவை
எங்களால் தாங்கமுடியவில்லை;
ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர்.
4 நீர் தேர்ந்தெடுத்து
உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்;
உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்;
உமது இல்லத்தில்,
உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால்
நாங்கள் நிறைவு பெறுவோம்.
5 அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்;
எங்கள் மீட்பின் கடவுளே!
உமது நீதியின் பொருட்டு
எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்;
உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும்
தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!
6 வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர்
உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.
7 கடல்களின் இரைச்சலையும்
அவற்றின் அலைகளின் ஓசையையும்
மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்!
8 உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்
உம் அருஞ் செயல்களைக் கண்டு அஞ்சுவர்;
கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக்
களிகூரச் செய்கின்றீர்!
9 மண்ணுலகைப் பேணி
அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்!
கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது;
அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது;
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
10 அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;
அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து
மென்மழையால் மிருதுவாக்கினீர்;
அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.
11 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்;
உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
12 பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள்
செழுமை பொங்குகின்றன;
குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
13 புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன;
பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப்
போர்த்திக் கொண்டுள்ளன.
அவற்றில் எங்கும் ஆரவாரம்!
எம்மருங்கும் இன்னிசை!
திருப்பாடல் 66
தொகுநன்றிப் புகழ்ப்பா
தொகு(பாடகர் தலைவர்க்கு;
புகழ்ப்பாடல்)
1 அனைத்துலகோரே!
கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3 கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;
உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள்
உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்;
4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;
அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;
உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா)
5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!
அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள்
அஞ்சுவதற்கு உரியவை.
6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;
ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.
அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். [*]
7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்!
அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன;
கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா)
8 மக்களினங்களே!
நம் கடவுளைப் போற்றுங்கள்;
அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.
9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;
அவர் நம் கால்களை இடற விடவில்லை.
10 கடவுளே! எங்களை ஆய்ந்து,
வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;
11 கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;
பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.
12 மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்;
நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்;
ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்
கொண்டுவந்து சேர்த்தீர்.
13 எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்;
என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
14 அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது;
என் வாய் உறுதி செய்தது.
15 கொழுத்த கன்றுகளை,
செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,
உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;
காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும்
உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!
அனைவரும் வாரீர்! கேளீர்!
அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17 அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;
அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.
18 என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில்,
என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்.
19 ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;
என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.
20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி!
தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!
- குறிப்பு
[*] 66:6 = விப 14:21; யோசு 3:14-17.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 67 முதல் 68 வரை