திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 73 முதல் 74 வரை
திருப்பாடல்கள்
தொகுமூன்றாம் பகுதி (73-89)
திருப்பாடல்கள் 73 முதல் 74 வரை
திருப்பாடல் 73
தொகுகடவுளின் நீதிமுறை
தொகு(ஆசாபின் புகழ்ப்பா)
1 உண்மையாகவே,
இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்!
தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!
2 என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின;
நான் அடிசறுக்கி விழப்போனேன்.
3 ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்;
பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்.
4 அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை;
அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.
5 மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை.
மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
6 எனவே, மணிமாலைபோல்
செருக்கு அவர்களை அணி செய்கிறது;
வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.
7 அவர்களின் கண்கள்
கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன;
அவர்களது மனத்தின் கற்பனைகள்
எல்லை கடந்து செல்கின்றன.
8 பிறரை எள்ளி நகையாடி
வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;
இறுமாப்புக்கொண்டு
கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.
9 விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது;
மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.
10 ஆதலால், கடவுளின் மக்களும்
அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;
இவ்வாறு, கடல் முழுவதையும்
உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.
11 'இறைவனுக்கு எப்படித் தெரியும்?
உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?' என்கின்றார்கள்.
12 ஆம்; பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்;
என்றும் வளமுடன் வாழ்ந்து
செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
13 அப்படியானால், நான் என் உள்ளத்தை
மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?
குற்றமற்ற நான் என் கைகளைக்
கழுவிக்கொண்டதும் வீண்தானா?
14 நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்;
காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.
15 "நானும் அவர்களைப்போல் பேசலாமே"
என்று நான் நினைத்திருந்தால்,
உம் மக்களின் தலைமுறைக்கு
நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.
16 ஆகவே, இதன் உண்மை என்னவென்று
கண்டறிய முயன்றேன்;
ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.
17 நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான்
அவர்களுக்கு நேரிடப்போவது
என்ன என்பதை உணர்ந்துகொண்டேன்.
18 உண்மையில் அவர்களை
நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்;
அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர்.
19 அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்!
அவர்கள் திகில் பிடித்தவர்களாய்
அடியோடு அழிந்து போகிறார்கள்!
20 விழித்தெழுவோரின் கனவுபோல்
அவர்கள் ஒழிந்து போவார்கள்;
என் தலைவராகிய ஆண்டவரே,
நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.
21 என் உள்ளம் கசந்தது;
என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின.
22 அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்;
உமது முன்னிலையில்
ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.
23 ஆனாலும், நான் எப்போதும்
உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்;
என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.
24 உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்;
முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்.
25 விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்?
மண்ணுலகில் வேறுவிருப்பம்
உம்மையன்றி எனக்கேதுமில்லை.
26 எனது உடலும் உள்ளமும் நைந்து போயின;
கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்
என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.
27 உண்மையிலேயே,
உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;
உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும்.
28 நானோ கடவுளின் அண்மையே
எனக்கு நலமெனக் கொள்வேன்;
என் தலைவராகிய ஆண்டவரை
என் அடைக்கலமாய்க்கொண்டு
அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.
திருப்பாடல் 74
தொகுநாட்டின் விடுதலைக்காக மன்றாடல்
தொகு(ஆசாபின் அறப்பாடல்)
1 கடவுளே!
நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்?
உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல்
உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?
2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச்
சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும்;
நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட
இனத்தாரை மறந்துவிடாதேயும்;
நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும்
நினைவுகூர்ந்தருளும்.
3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும்
பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக!
ஏதிரிகள் உமது தூயகத்தில்
அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.
4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில்
வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;
தங்கள் கொடிகளை
வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள்.
5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட
மரப்பின்னல் வேலைப்பாடுகளைக்
கோடரிகளால் சிதைத்தார்கள்.
6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும்
சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
7 அவர்கள் உமது தூயகத்திற்குத் தீ வைத்தார்கள்;
அவர்கள் உமது பெயருக்குரிய
உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
8 "அவர்களை அடியோடு அழித்து விடுவோம்" என்று
தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டார்கள்;
கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம்
நாடெங்கும் எரித்தழித்தார்கள்.
9 எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை
இப்போது நாங்கள் காண்பதில்லை;
இறைவாக்கினரும் இல்லை;
எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்குமென்று
அறியக் கூடியவரும் எங்களிடையே இல்லை.
10 கடவுளே!
எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்?
எதிரிகள் உமது பெயரை எப்போதுமா
பழித்துக் கொண்டிருப்பார்கள்?
11 உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்?
உமது வலக்கையை ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்?
அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.
12 கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்;
நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.
13 நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்தீர்;
நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலைகளை நசுக்கிவிட்டீர். [1]
14 லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே;
அதைக் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கொடுத்தவர் நீரே; [2]
15 ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே;
என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே.
16 பகலும் உமதே; இரவும் உமதே;
கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே.
17 பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்;
கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.
18 ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும்
மதிகெட்ட மக்கள் உமது பெயரைப் பழிப்பதையும் நினைத்துப்பாரும்!
19 உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப்
பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்!
சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை
ஒரேயடியாக மறந்து விடாதேயும்!
20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்!
நாட்டின் இருளான இடங்களில்
கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.
21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்;
எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக!
22 கடவுளே! எழுந்துவாரும்;
உமக்காக நீரே வழக்காடும்;
மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும்
இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.
23 உம்முடைய பகைவர் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்;
உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும் அமளியைக் கேளும்.
- குறிப்புகள்
[1] 74:13 = விப 14:21.
[2] 74:14 = யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 75 முதல் 76 வரை