திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 75 முதல் 76 வரை
திருப்பாடல்கள்
தொகுமூன்றாம் பகுதி (73-89)
திருப்பாடல்கள் 75 முதல் 76 வரை
திருப்பாடல் 75
தொகுநீதி வழங்கும் கடவுள்
தொகு(பாடகர் தலைவர்க்கு;
'அழிக்காதே' என்ற மெட்டு;
ஆசாபின் புகழ்ப்பாடல்
1 உமக்கு நன்றி செலுத்துகின்றோம்;
கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்;
உமது பெயரைப் போற்றுகின்றோம்;
உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.
2 நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகோண்டு,
நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.
3 உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும்
நிலைகுலைந்து போகலாம்;
ஆனால், நான் அதன் தூண்களை
உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)
4 வீண் பெருமை கொள்வோரிடம்,
'வீண் பெருமை கொள்ள வேண்டாம்' எனவும்
பொல்லாரிடம்,
'உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;
5 உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்;
தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்'
எனவும் சொல்வேன்.
6 கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ,
பாலைவெளியிலிருந்தோ, மலைகளிலிருந்தோ,
உங்களுக்கு எதுவும் வராது.
7 ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்;
அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்;
இன்னொருவரை உயர்த்துகின்றார்.
8 ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த
திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம்
ஆண்டவர் கையில் இருக்கின்றது;
அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்;
உலகிலுள்ள பொல்லார் அனைவரும்
அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர்.
9 நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்;
யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்;
10 பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்;
நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.
திருப்பாடல் 76
தொகுவெற்றிப் பாடல்
தொகு(பாடகர் தலைவர்க்கு;
நரம்பிசைக்கருவிகளுடன்
ஆசாபின் புகழ்ப்பாடல்
1 யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்;
இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது.
2 எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது;
சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது.
3 அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார்.
கேடயத்தையும் வாளையும்
படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார். (சேலா)
4 ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்;
உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது.
5 நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்;
அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்;
அவர்களின் கைகள் போர்க்கலன்களைத்
தாங்கும் வலுவிழந்தன.
6 யாக்கோபின் கடவுளே!
உமது கடிந்துரையால் குதிரைகளும்
வீரர்களும் மடிந்து விழுந்தனர்.
7 ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்;
நீர் சினமுற்ற வேளையில்
உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?
8-9 கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது,
மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது,
வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;
பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)
10 மாறாக, சினமுற்ற மாந்தர்,
உம்மைப் புகழ்தேத்துவர்;
உமது கோபக் கனலுக்குத் தப்பியோர்
உமக்கு விழாக்கொண்டாடுவர்;
11 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்
பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்;
அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும்
அஞ்சுதற்குரிய அவருக்கே
காணிக்கைகளைக் கொண்டுவருவராக!
12 செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்;
பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 77 முதல் 78 வரை