திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 97 முதல் 98 வரை
திருப்பாடல்கள்
தொகுநான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 97 முதல் 98 வரை
திருப்பாடல் 97
தொகுஅனைத்து உலகின் தலைவர்
தொகு
1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக!
திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக!
2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
3 நெருப்பு அவர்முன் செல்கின்றது;
சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
4 அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன;
மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது.
5 ஆண்டவர் முன்னிலையில்,
அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,
மலைகள் மெழுகென உருகுகின்றன.
6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும்
அவரது மாட்சியைக் காண்கின்றன.
7 உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப்
பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்;
அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.
8 ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை
சீயோன் கேட்டு மகிழ்கின்றது;
யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.
9 ஏனெனில், ஆண்டவரே!
உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே!
10 தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார்.
அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்;
பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.
11 நேர்மையாளருக்கென ஒளியும்
நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.
திருப்பாடல் 98
தொகுஅனைத்து உலகின் தலைவர்
தொகு
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்.
உலகெங்குமுள அனைவரும்
நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே!
அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
யாழினை மீட்டி
இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி
கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,
7 கடலும் அதில் நிறைந்தவையும்
உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8 ஆறுகளே! கைகொட்டுங்கள்;
மலைகளே! ஒன்றுகூடுங்கள்;
9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்;
ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;
பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;
மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 99 முதல் 100 வரை