திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 99 முதல் 100 வரை

"அவை கூறும் செய்தி உலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது" (திருப்பாடல்கள் 19:4). திருத்தூதர்கள் உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிப்பர் என்று தாவீது முன்னறிவித்தல். மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்

தொகு

நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 99 முதல் 100 வரை

திருப்பாடல் 99

தொகு

அனைத்து உலகின் அரசர்

தொகு

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
மக்களினத்தார் கலங்குவராக!
அவர் கெருபுகள்மீது வீற்றிருக்கின்றார்;
மண்ணுலகம் நடுநடுங்குவதாக! [1]


2 சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்;
எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார்.


3 மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான
அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக!
அவரே தூயவர்.


4 வல்லமைமிக்க அரசரே!
நீதியை நீர் விரும்புகின்றீர்;
நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்;
யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும்
நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.


5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;
அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்;
அவரே தூயவர்!


6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்;
அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்;
அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்;
அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.


7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும்
அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். [2]


8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்;
மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்;
ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய்
நீர் அவர்களைத் தண்டித்தீர்.


9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;
அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள்.
ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.


குறிப்புகள்

[1] 99:1 = விப 25:22.
[2] 99:7 = விப 33:9.


திருப்பாடல் 100

தொகு

(நன்றி நவில்தற்கான புகழ்ப்பா)


1 அனைத்துலகோரே!
ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!


2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!


3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!


4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி,
அவர் பெயரைப் போற்றுங்கள்!


5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். [*]


குறிப்பு

[*] 100:5 = 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 106:1; 107:1; 118:1; 136:1; எரே 13:11.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 101 முதல் 102 வரை