திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 3 வரை
திருவிவிலியத்தில் முதற்கண் இடம்பெறும் இந்நூல் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.
இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே ஆவார்; கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான்; ஆயினும் கடவுள் மனிதன்மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.
அனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் வழிமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்பதை இந்நூல் விரித்துரைக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப்பெறுகின்றது.
தொடக்க நூல்
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. உலகையும் மனித இனத்தையும் கடவுள் படைத்தல் | 1:1 - 2:25 | 1 - 3 |
2. மனிதனின் வீழ்ச்சி - துன்பத்தின் தொடக்கம் | 3:1 - 24 | 3 - 5 |
3. ஆதாம் முதல் நோவா வரை | 4:1 - 5:32 | 5 - 7 |
4. நோவாவும் வெள்ளப் பெருக்கும் | 6:1 - 10:32 | 7 - 13 |
5. பாபேல் கோபுரம் | 11:1 - 9 | 13 - 14 |
6. சேம் முதல் ஆபிரகாம் வரை | 11:10 - 32 | 14 |
7. மூதாதையர்:ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு | 12:1 - 35:29 | 15 - 55 |
8. ஏசாவின் வழிமரபினர் | 36:1 - 43 | 55 - 57 |
9. யோசேப்பும் அவருடைய சகோதரரும் | 37:1 - 45:28 | 57 - 74 |
10. இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் குடியேறுதல் | 46:1 - 50:26 | 74 - 82 |
தொடக்க நூல்
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 3 வரை
அதிகாரம் 1
தொகு- தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
- மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
- அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. [1]
- கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
- கடவுள் ஒளிக்குப் 'பகல்' என்றும் இருளுக்கு 'இரவு' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
- அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார்.
- கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
- கடவுள் வானத்திற்கு 'விண்ணுலகம்' என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. [2]
- அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- கடவுள் உலர்ந்த தரைக்கு 'நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் 'கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
- அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிடிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
- அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
- கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
- பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
- அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார்.
- இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார்.
- மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.
- அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார்.
- கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.[3]
- கடவுள் தம் உருவில் மானிடரைப் [4] படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். [5]
- கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.[6]
- அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
- எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
- குறிப்புகள்
[1] 1:3 = 2 கொரி 4-6.
[2] 1:6-8 = 2 பேது 3:5.
[3] 1:26 = 1 கொரி 11:27.
[4] 1:27 "ஆதாம்" என்பது எபிரேய பாடம்.
[5] 1:27 = மத் 19:4; மாற் 10:6.
[6] 1:27-28 = தொநூ 5:1-2.
அதிகாரம் 2
தொகு- விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
- மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். [1]
- கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் நாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். [2]
- இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம். ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
- மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை; ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை.
- ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது.
- அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் [3] மண்ணால் [4] மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். [5]
- ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.
- ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். [6]
- தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று.
- முதலாவதன் பெயர் பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது. அங்கே பொன் விளையும்.
- அந்நாட்டுப் பொன் பசும்பொன். அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு.
- இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். இது எத்தியோப்பியா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது.
- மூன்றாவது ஆற்றின் பெயர் திக்ரீசு. இது அசீரியாவிற்குக் கிழக்கே ஓடுகின்றது. நான்காவது ஆறு யூப்பிரத்தீசு.
- ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.
- ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.
- ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
- பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்" என்றார்.
- ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.
- கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
- ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
- ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.
- அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து [7] எடுக்கப்பட்டதால், இவள் பெண் [8] என்று அழைக்கப்படுவாள்" என்றான்.
- இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். [9]
- மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.
- குறிப்புகள்
[1] 2:2 = எபி 4:4,10.
[2] 2:2-3 = விப 20:11.
[3] 2:7 ஆதாமா என்பது எபிரேய பாடம். ஆதாமா என்பதற்கு மண் என்பது பொருள்.
[4] 2:7 ஆதாம் என்பது எபிரேய பாடம். ஆதாம் என்பதற்கு மண்ணால் ஆனவன் என்பது பொருள்.
[5] 2:7 = 1 கொரி 15:45.
[6] 2:9 = திவெ 2:7; 22:2-14.
[7], [8] 2:23 எபிரேயத்தில் ஈஷ் என்பது ஆண் எனவும், ஈஷா என்பது பெண் எனவும் பொருள்படும்.
[9] 2:24 = மத் 19:5; மாற் 10:7-8; 1 கொரி 6:16; எபே 5:31.
அதிகாரம் 3
தொகு- ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது.
- பெண் பாம்பிடம், "தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
- ஆனால் 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்," என்றாள்.
- பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்;
- ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்" என்றது.
- அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
- அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
- மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
- ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார்.
- "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.
- "நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார்.
- அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்" என்றான்.
- ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்" என்றாள்.
- ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.
- உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்.
- அவர் பெண்ணிடம், "உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்" என்றார்.
- அவர் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.
- முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய்.
- நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார்.
- மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
- ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.
- பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார்.[1]
- எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
- இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.
- குறிப்பு
[1] 3:22 = திவெ 22:14
(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 4 முதல் 6 வரை