திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதித் தலைவர்கள் (நீதிபதிகள் ஆகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

சிம்சோன் சிங்கத்தைக் கொல்லுதல். ஓவியர்: ஃப்ரான்செஸ்கோ ஆயெஸ் (1791-1882). காப்பிடம்: இத்தாலியா.

அதிகாரம் 13

தொகு

சிம்சோனின் பிறப்பு

தொகு


1 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆண்டவர் அவர்களைப் பெலிஸ்தியர் கையில் நாற்பது ஆண்டுகள் ஒப்படைத்தார்.
2 சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.
3 ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், "நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
4 இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே.
5 ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென 'நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்" என்றார். [1]
6 அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: "கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.
7 அவர் என்னிடம், 'இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்."


8 மனோவாகு ஆண்டவரை நோக்கி, "என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும்" என்று கூறி வேண்டினார்.
9 கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார். கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார். அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார். அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.
10 அவர் தம் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று அவரிடம், "இதோ! அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.
11 மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார். அவர் அம்மனிதரிடம் வந்து, "இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் தான்" என்றார்.
12 மனோவாகு "உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்?" என்று கேட்டார்.
13 ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், "நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும்.
14 திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது. திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது. தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது. நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும்" என்றார்.
15 மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், "தயவு கூர்ந்து சற்று நேரம் காத்திரும். உமக்காக ஓர் ஆட்டுக்குட்டியைச் சமைக்கின்றோம்" என்றார்.
16 ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், "நீ என்னைக் காத்திருக்க வைத்தாலும், நான் உனது உணவை உண்ண மாட்டேன். நீ ஒரு எரி பலியைச் செலுத்துவதாக இருந்தால், அதை ஆண்டவருக்குச் செலுத்து" என்றார். ஏனெனில் மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறியவில்லை.


17 மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், "உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம்" என்றார்.
18 ஆண்டவரின் தூதர் அவரிடம், "எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது" என்றார். [2]
19 மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது, மனோவாகும் அவர் மனைவியும் காணும் வண்ணம் ஆண்டவர் வியப்பானதொன்றைச் செய்தார்.
20 பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வான்நோக்கி மேல் எழும்பியபோது, அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் அதைப்பார்த்து முகம் தரைப்பட விழுந்தனர்.
21 ஆண்டவரின் தூதர் மனோவாகிற்கும் அவர் மனைவிக்கும் மீண்டும் தோன்றவில்லை. மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறிந்து கொண்டார்.
22 மனோவாகு தம் மனைவியிடம், "நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்து விட்டோம்" என்றார்.
23 அவர் மனைவி அவரிடம், "ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார்; இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார்; இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்" என்றார்.
24 அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார்.
25 சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போது தான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

குறிப்புகள்

[1] 13:5 = எண் 6:1-5.
[2] 13:18 = தொநூ 32:29.

அதிகாரம் 14

தொகு

சிம்சோனும் திமினாவின் இளம்பெண்ணும்

தொகு


1 சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்; திமினாவில் பெலிஸ்தியர் மகளிருள் ஒருத்தியைக் கண்டார்.
2 அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், "நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்" என்றார்.
3 அவர் தந்தையும் தாயும் அவரிடம், "உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்?" என்ற கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், "அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது" என்றார்.
4 அவர் தந்தையும் தாயும் இது ஆண்டவரின் செயல் என்று அறியவில்லை. ஏனெனில் அந் நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.


5 சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர் மீது பாய்ந்தது.
6 ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை.
7 அவர் சென்று அப்பெண்ணிடம் பேசினார். சிம்சோனுக்கு அவள் பிடித்தவளாகத் தோன்றினாள்.
8 சில நாள்கள் கழித்து அவளைக் கூட்டிச் செல்ல அவர் மீண்டும் வந்தார். அவர் சிங்கத்தின் பிணத்தைக் காணத் திரும்பினார். இதோ! சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்டன.
9 அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே தொடர்ந்து நடந்தார்; தம் தந்தை தாயிடம் சென்று அவர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அருந்தினர். அவர் அவர்களிடம் சிங்கத்தின் பிணத்திலிருந்து தேனடையை எடுத்ததாகச் சொல்லவில்லை.


10 அவர் தந்தை பெண்வீட்டுக்குச் சென்றார். அங்குச் சிம்சோன் விருந்தளித்தார். ஏனெனில் இளைஞர்கள் அவ்வாறு செய்வது வழக்கம்.
11 அவர்கள் அவரைப் பார்த்து அவருடைய தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர்.
12 சிம்சோன் அவர்களிடம், "நான் உங்களுக்கு ஒரு விடுகதை கூறுகின்றேன். நீங்கள் விருந்தின் ஏழு நாள்களுக்குள் அதற்கு விடை கண்டுபிடித்து எனக்குக் கூறினால், நான் உங்களுக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் அளிப்பேன்.
13 நீங்கள் எனக்குச் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் அளிக்கவேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கின்றோம்" என்றனர்.


14 அவர் அவர்களிடம்,

"உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது; வலியவனிடமிருந்து இனியது வந்தது"

என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடு கதைக்கு விடை காணமுடியவில்லை.


15 நான்காம் [*] நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், "உன் கணவனை மயக்கி, விடுகதையின் விடையை எங்களுக்குக் கூறச் சொல். இல்லையேல், உன்னையும் உன் தந்தையின் வீட்டையும் தீக்கிரையாக்குவோம். நீங்கள் எங்களைக் கூப்பிட்டது கொள்ளையடிக்கவா?" என்றனர்.
16 சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், "நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுகதை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே" என்றாள்.
17 அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர் முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்து விட்டாள்.
18 ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம்,

"தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது?"

என்றனர். அவர் அவர்களிடம்,

"என் இளம் பசுவைக்கொண்டு நீங்கள் உழுதிருக்காவிடில், என் விடுகதைக்கு விடை கண்டு பிடித்திருக்கவே மாட்டீர்கள்"

என்றார்.


19 ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. அவர் அஸ்கலோனுக்குச் சென்று, அங்குள்ளவர்களுள் முப்பது பேரைக் கொன்று, அவர்கள் உடைகளை உரிந்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்குக் கொடுத்தார். அவருக்குச் சினம் பொங்கியெழ, அவர் தம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார்.
20 சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

குறிப்புகள்

[*] 14:15 எபிரேயத்தில் ஏழாம் என்பது பாடம்.

(தொடர்ச்சி): நீதித் தலைவர்கள்:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை