திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதித் தலைவர்கள் (நீதிபதிகள் ஆகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

சிம்சோனும் தெலீலாவும் (நீத 16). ஓவியர்: ஃப்ரான்செஸ்கோ மொரோனே (1471-1529). காப்பிடம்: மிலான், இத்தாலியா.

அதிகாரம் 15

தொகு


1 சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். "நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கிறேன்" என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
2 அவள் தந்தை, "நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா? அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும்" என்றார்.
3 சிம்சோன் "இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன்" என்றார்.
4 சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார்.
5 பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன.
6 பெலிஸ்தியர் "இதைச் செய்தது யார்?" என்றனர். "இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான்" என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.
7 சிம்சோன், "நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன்" என்றார்.
8 அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.

சிம்சோன் பெலிஸ்தியரைத் தோற்கடித்தல்

தொகு


9 பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.
10 யூதா மக்கள் அவர்களிடம், "ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்?" என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் "சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம்" என்றனர்.
11 யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், "பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்?" என்றனர். அவர் அவர்களிடம், "அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன்" என்றார்.
12 அவர்கள் அவரிடம், "உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம்" என்றனர். சிம்சோன் அவர்களிடம், "என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள்" என்றார்.
13 அவர்கள் அவரிடம், "இல்லை; நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்" என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.


14 அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன.
15 அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.
16 சிம்சோன், "கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள்! கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை" என்றார்.
17 அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை 'இராமேத்து இலேகி' [1] என அழைத்தார்.


18 அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, "நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ?" என்று மன்றாடினார்.
19 கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை 'ஏன்ககோரே' [2] என அழைத்தார். அது இந்நாள் வரை இலேகியில் உள்ளது.
20 பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

குறிப்புகள்

[1] 15:17 எபிரேயத்தில் 'தாடை எலும்பின் மலை' என்பது பொருள்.
[2] 15:19 எபிரேயத்தில் 'மன்றாடுவோரின் நீரூற்று' என்பது பொருள்.

அதிகாரம் 16

தொகு

காசாவில் சிம்சோன்

தொகு


1 சிம்சோன் காசாவுக்குச் சென்றார். அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார்.
2 "சிம்சோன் இங்கு வந்துள்ளார்" என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். "பொழுது புலரும்வரை காத்திருப்போம்; பின்னர் அவனைக்கொல்வோம்" என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர்.
3 சிம்சோன் நடுச்சாமம் வரை படுத்துக்கிடந்தார். நள்ளிரவில் அவர் எழுந்து, நகர் வாயிலின் கதவுகளையும் இரண்டு கதவு நிலைகளையும் பிடித்து, அவைகளைக் குறுக்குச் சட்டங்களுடன் பிடுங்கினார். அவற்றைத் தம் தோள்களின்மீது வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றார்.

சிம்சோனும் தெலீலாவும்

தொகு


4 அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார். அவள் பெயர் தெலீலா.
5 பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம், சென்று, "நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது; எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம்" என்றனர்.
6 தெலீலா சிம்சோனிடம், "எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும்" என்றாள்.
7 சிம்சோன் அவளிடம், "ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்" என்றார்.
8 பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர். அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள்.
9 ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருக்க, அவள் அவரிடம், "சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்" என்று கத்தினாள். நெருப்புப்பட்டதும் சணல்கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார். அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை.


10 தெலீலா சிம்சோனிடம், "இதோ! நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும்" என்றாள்.
11 அவர் அவளிடம், "இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்" என்றார்.
12 தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்டிய பின்," சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்" என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருந்தனர். நுல் கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.


13 தெலீலா சிம்சோனிடம், "இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து , என்னிடம் பொய்கள் சொல்லிவிட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச் சொல்லும்" என்றாள். அவர், "என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவுநூலால் பின்னினால் போதும்" என்றார்.
14 ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, "சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்" என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார்.


15 அவள் அவரிடம், "மனம் திறந்து பேசாமல் நீர் என்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை" என்றாள்.
16 அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.
17 எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது: "சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்" என்றார்.


18 அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, "உடனே வாருங்கள்; அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார் என்று ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர்.
19 அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்.
20 அவள், "சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!" என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து "முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்" என்று சொன்னார். ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை.
21 பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்தினர்.
22 மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது.

சிம்சோனின் இறப்பு

தொகு


23 பெலிஸ்தியச் சிற்றரசர், "நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்" என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர்.
24 மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். "நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார். அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்; நம்மில் பலரைக் கொன்றவன்; என்றனர்.
25 அவர்கள் அகமகிழ்ந்திருக்க, "சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்" என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்.
26 சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் "இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்; நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன்" என்றார்.
27 ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


28 சிம்சோன் ஆண்டவரை நோக்கி, "என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே! என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும்" என்று மன்றாடினார்.
29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார்.
30 சிம்சோன், "என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்" என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார்.
31 அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர். அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித் தலைவராக விளங்கினார்.

(தொடர்ச்சி): நீதித் தலைவர்கள்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை