திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

தாவீது அரசரும் அவருடைய மகன் சாலமோன் அரசரும். கண்ணாடி நிறப்பதிகை ஓவியம். காப்பிடம்: ஸ்ட்ராஸ்பர்க் மறைமாவட்டக் கோவில், பிரான்சு.

நீதிமொழிகள் (The Book of Proverbs)

தொகு

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11

தொகு


1 கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது;
முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.


2 இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே;
தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.


3 நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்;
நம்பிக்கைத் துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.


4 கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது;
நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.


5 குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்;
பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.


6 நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்;
நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.


7 பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்;
அவர்கள் எதிர்நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.


8 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்;
பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.


9 இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்;
நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்பெறுவர்.


10 நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்;
பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.


11 நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்;
பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.


12 அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்;
நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;


13 வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவர்;
நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.


14 திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்;
அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.


15 அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்;
பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.


16 கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்;
முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.


17 இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்;
இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.


18 பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல;
நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.


19 நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்;
தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.


20 வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்;
மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.


21 தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி;
கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.


22 மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு
பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.


23 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்;
எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.


24 அளவின்றிச் செலவழிப்போர் செல்வராவதும் உண்டு;
கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு.


25 ஈகை குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்;
குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.


26 தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்;
தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.


27 நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்;
தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.


28 தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்;
கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.


29 குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே;
அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.


30 நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்;
ஆனால், வன்செயல் [1] உயிராற்றலை இழக்கச் செய்யும்.


31 நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில்,
பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ! [2]


குறிப்புகள்

[1] 11:30 - "வன்செயல்" என்பது "ஞானி" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
[2] 11:31 = 1 பேது 4:18.


அதிகாரம் 12

தொகு


1 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்;
கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.


2 நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர்;
தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.


3 பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை;
நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.


4 பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்;
இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.


5 நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை;
பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.


6 பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்;
நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.


7 பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித்தோன்றலின்றி அழிவர்;
நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.


8 மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்;
சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.


9 வீட்டில் உணவில்லாதிருந்தும்
வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட,
தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.


10 நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர்.
பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.


11 உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்;
வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.


12 தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும்.
நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.


13 தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்;
நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.


14 ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்;
வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.


15 மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்;
ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.


16 மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்;
விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.


17 உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்;
பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.


18 சுpந்தனையற்ற பேச்சு வாள்போலப் புண்படுத்தும்;
ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.


19 ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்;
பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.


20 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்;
பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.


21 நல்லாருக்கு ஒரு கேடும் வராது;
பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.


22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்;
உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.


23 விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்;
மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.


24 ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்;
சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.


25 மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்;
இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.


26 சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்;
பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.


27 சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்;
விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.


28 நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்;
முரணானவரின் வழி சாவில் தள்ளும்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை