திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

"நீதிமொழிகள்" நூலின் முகப்பு. சாலமோன் ஞானம் வழங்குதல். அணிசெய்யப்பட்ட விவிலிய பதிப்பின் பகுதி. காலம்: 9ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: தூய பவுல் பெருங்கோவில், உரோமை.

அதிகாரம் 9

தொகு

ஞானமும் மதிகேடும்

தொகு


1 ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது;
அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது.
2 அது தன் பலிவிலங்குகளைக் கொன்று,
திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து,
விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது;
3 தன் தோழிகளை அனுப்பிவைத்தது;
நகரின் உயரமான இடங்களில் நின்று,
4 "அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்"
என்று அறிவிக்கச் செய்தது;
மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது;
5 "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்;
நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்;
6 பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்;
உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்" என்றது.
7 இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே;
பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே.
8 இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே;
அவர்கள் உன்னைப் பகைப்பார்கள்.
ஞானிகளை நீ கடிந்து கொண்டால்,
அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்.
9 ஞானிகளுக்கு அறிவுரை கூறு;
அவர்களது ஞானம் வளரும்;
நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு;
அவர்களது அறிவு பெருகும்.
10 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்;
தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு. [*]
11 என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்;
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
12 நீங்கள் ஞானிகளாய் இருந்தால்,
அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்;
நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால்,
அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள்.


13 மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத,
எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.
14 அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ,
நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,
15 தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து,
16 "அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்" என்பாள்;
மதிகேடரைப் பார்த்து,
17 "திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது;
வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது" என்பாள்.
18 அந்த ஆள்களோ,
அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்;
அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர்
என்பது அவர்களுக்குத் தெரியாது.


குறிப்பு

[*] 9:10 = யோபு 28:28; திபா 111:10; நீமொ 1:7.


அதிகாரம் 10

தொகு

சாலமோனின் நீதிமொழிகள்

தொகு


1 சாலமோனின் நீதிமொழிகள்:
ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்;
அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.


2 தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது;
நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.


3 நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார்.
ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.


4 வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்;
விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.


5 கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்;
அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.


6 நேர்மையாளர்மீது ஆசி பொழியும்;
பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.


7 நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்;
பொல்லாரின் பெயரோ அழிவுறும்.


8 ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்;
பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.


9 நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்;
கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.
10 தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்;
பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.


11 நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்;
பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.


12 பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்;
தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும். [*]


13 விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்;
மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.


14 ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்;
மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.


15 செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்;
ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.


16 நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்;
பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.


17 நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்;
கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.


18 உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யர்;
வசைமொழி கூறுவோர் மடையர்.


19 மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்;
தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.


20 நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்;
பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.


21 நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்;
செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.


22 ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்;
அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.


23 தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு;
ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.


24 பொல்லார் எதற்கு அஞ்சுவரோ,
அதுவே அவர்களுக்கு வரும்;
கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ,
அது அவர்களுக்குக் கிடைக்கும்.


25 சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்;
கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ
என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.


26 பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,
அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.


27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்;
பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.


28 நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்;
பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.


29 ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்;
தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.


30 கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது;
பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.


31 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்;
வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.


32 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்;
பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.


குறிப்பு

[*] 10:12 = யாக் 5:20; 1 பேது 4:8.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை