திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நெகேமியா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

'நெகேமியா' என்னும் இந்நூல் 'எஸ்ரா' நூலைப் போன்று 'குறிப்பேட்டின்' தொடர்ச்சியாகும். நெகேமியா, பாரசீகத் தலைநகரான சூசாவில் மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். சொந்த நாடு திரும்பிய இசுரயேல் மக்களின் இழிநிலையைக் கண்டு அவர் வருத்தமுற்றார். பாரசீக மன்னரால் யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்றார். பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளுக்கிடையே மனம் தளராது கட்டியெழுப்பினார். சமய, சமூகச் சீர்திருத்தங்களை இசுரயேல் மக்களிடையே செய்தார்.

தகர்க்கப்பட்ட எருசலேம் நகர்ச் சுவர்களை நெகேமியா பார்வையிடுகிறார். விவிலிய வரைவு ஓவியம். கலைஞர்: குஸ்தாவ் டோரே. ஆண்டு: 1866

இவரது காலத்தில் சட்டவல்லுநரான எஸ்ரா திருச்சட்டத்தை மக்கள் முன் வாசிக்க, மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உடன்படிக்கையின்படி வாழ உறுதி பூண்டனர். இறைவனின் உதவியின்றித் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நெகேமியா உணர்ந்திருந்தார். எனவே, அவர் பலமுறை இறைவனிடம் மன்றாடினார். அவர் உள்ளத்தினின்று எழுந்த மன்றாட்டுகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நெகேமியா நூலின் உள்ளடக்கம்

தொகு

நெகேமியா

தொகு

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. நெகேமியா எருசலேமுக்கு வருதல் 1:1 - 2:20 730 - 732
2. எருசலேம் நகரின் மதில்கள் திரும்பக் கட்டப்படுதல் 3:1 - 7:7-3 732 - 738
3. திருச்சட்டம் வாசிக்கப்பட்டு உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல் 8:1 - 10:39 738 - 746
4. நெகேமியாவின் பிற செயற்பாடுகள் 11:1 - 13:31 746 - 752

நெகேமியா

தொகு

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

தொகு

எருசலேம் குறித்து நெகேமியா கவலைப்படல்

தொகு

1 அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.
2 அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும் யூதர்களைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன்.
3 அதற்கு அவர்கள், "அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன; அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன" என்று கூறினர்.
4 இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்; பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்; மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:


5 "விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே! பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே! தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே!
6 உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடுகிறேன்; இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக! உன் கண்கள் விழித்திருப்பதாக! நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம்.
7 நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை.
8 உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும்: 'நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்; [1]
9 இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்'. [2]


10 உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.
11 ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும்".


அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.

குறிப்புகள்

[1] 1:8 = லேவி 26:33.
[2] 1:9 = இச 30:1-5.

அதிகாரம் 2

தொகு

நெகேமியா எருசலேமுக்கு வருதல்

தொகு

1 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.
2 மன்னர் என்னைப் பார்த்து, "ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை" என்றார். நானோ மிகவும் அஞ்சினேன்.
3 நான் மன்னரை நோக்கி, "மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?" என்றேன். [*]


4 அதற்கு மன்னர் என்னை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.
5 நான் மன்னரைப் பார்த்து, "நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்" என்று கூறினேன்.
6 அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, "உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?" என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.


7 மீண்டும் மன்னரைப் பார்த்து, "உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.
8 கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்" என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.


9 யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார்.
10 ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.


11 நான் எருசலேமுக்கு வந்து அங்கே மூன்றுநாள் தங்கி இருந்தேன்.
12 நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் தூண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை.
13 நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று 'நரி' நீருற்றைக் கடந்து, 'குப்பைமேட்டு' வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.
14 அங்கிருந்து 'ஊருணி வாயிலுக்கும்', 'அரசனின் குளத்திற்கும்' சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.
15 எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், 'பள்ளத்தாக்கு வாயில்' வழியாகத் திரும்பி வந்தேன்.


16 நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.
17 பின்னர் நான் அவர்களைப் பார்த்து, "எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைச் கட்டியெழுப்புவோம், வாருங்கள்" என்று சொன்னேன்.
18 என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் "வாரும் கட்டுவோம்" என்றனர்; நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.


19 ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். "நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா?" என்று கேட்டனர்.
20 நானோ அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை" என்றேன்.

குறிப்பு

[*] 2:2 = 2 அர 25:8-10; 2 குறி 36:19; எரே 52:12-14.


(தொடர்ச்சி): நெகேமியா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை