திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நெகேமியா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
நெகேமியா (The Book of Nehemiah)
தொகுஅதிகாரங்கள் 3 முதல் 4 வரை
அதிகாரம் 3
தொகுஎருசலேமின் மதில்கள் புதுப்பிக்கப்படல்
தொகு1 அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து 'ஆட்டு வாயிலைக்' கட்டி அர்ப்பணம் செய்தனர்; அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்; 'மேயா காவல்மாடம்' வரையும், 'அனனியேல் காவல்மாடம்' வரையும் அர்ப்பணம் செய்தனர்.
2 அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர்.
3 பின் அசனாவாவின் வழிமரபினர் 'மீன் வாயிலைக்' கட்டினர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
4 அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
5 தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை.
6 பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் 'பழைய வாயிலைப்' பழுது பார்த்தனர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
7 யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன்-மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
8 பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் 'பெரிய மதில்' வரை புதுப்பித்தார்கள்.
9 எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
10 இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்றூசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.
11 ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், 'சூளைக்காவல் மாடத்தையும்' பழுது பார்த்தனர்.
12 எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லூமும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
13 ஆனூனும், சானோவாகில் வாழ்ந்தவர்களும், 'பள்ளத்தாக்கு வாயிலைப்' பழுதுபார்த்தனர்; அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். 'குப்பைமேட்டு வாயில்' வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள்.
14 பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, 'குப்பைமேட்டு வாயிலைப்' பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.
15 மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லூம், 'ஊருணிவாயிலைப்' பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த 'சேலா குளத்துச்' சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார்.
16 அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.
மதில் பழுதுபார்ப்பில் உதவிய லேவியர்
தொகு
17 அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
18 பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பார்த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.
19 மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
20 அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார்.
21 அவருக்கு அடுத்து, ஆக்கோகின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.
மதில் பழுதுபார்ப்பில் உதவிய குருக்கள்
தொகு
22 அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.
23 இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
24 அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.
25 மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்
26 ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த 'தண்ணீர் வாயிலின்' எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.
மதில் பழுதுபார்ப்பில் உதவிய ஏனையோர்
தொகு
27 அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.
28 'குதிரை வாயில்' முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர்.
29 அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார்.
30 அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலூவும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.
31 அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.
32 மூலையிலிருந்த மேல் மாடிக்கும் 'ஆட்டு வாயிலுக்கும்' இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.
அதிகாரம் 4
தொகுஎதிர்ப்புகளை நெகேமியா மேற்கொள்ளல்
தொகு1 நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.
2 தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், "இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் சும்மா விடப்படுவார்களா? அவர்களால் பலி செலுத்த முடியுமா? ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா? எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா?" என்று எள்ளி நகையாடினான்.
3 அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா "ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்; ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும்" என்று ஏளனம் செய்தான்.
4 "எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அன்னியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.
5 அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.
6 இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் பாதி உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.
7 சன்பலாற்று, தோபியா, அரேபியர், அம்மோனியர், அஸ்தோதியர் ஆகியோர், எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை முன்னேறிச் செல்வதையும், உடைப்புகள் அடைக்கப்பட்டுவருவதையும் கேள்வியுற்று மிகவும் சீற்றம் கொண்டனர்.
8 அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.
9 நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்; அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.
10 அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்; மண்மேடோ பெரிதாய் உள்ளது; மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது" என்றனர்.
11 எங்கள் எதிரிகளோ, "நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும்" என்று சொல்லிக்கொண்டனர்.
12 அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், "எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள்" என்று அறிவித்தனர்.
13 எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி வில்களோடு நிறுத்தி வைத்தேன்.
14 தலைவர்களையும், அலுவலர்களையும், ஏனைய மக்களையும் பார்த்தேன். நான் எழுந்து அவர்களை நோக்கி, "பகைவருக்கு அஞ்சாதீர்கள். மேன்மை மிக்கவரும் அஞ்சுதற்கு உரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவியர் ஆகியோர்க்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் போராடுங்கள்" என்றேன்.
15 தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்தார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
16 அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.
17 மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்; மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.
18 கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான்.
19 பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: "வேலை மிகுந்துள்ளது; பரந்துள்ளது; நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.
20 எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார்."
21 இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்போர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.
22 அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது; "ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்."
23 நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில் [*] ஆயுதம் தாங்கியிருந்தோம்.
- குறிப்பு
[*] 4:23 'தண்ணீர்' எனவும் பொருள்படும்.
(தொடர்ச்சி): நெகேமியா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை