திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோனா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
யோனா (The Book of Jonah)
தொகுஅதிகாரம் 3 முதல் 4 வரை
அதிகாரம் 3
தொகுநினிவேயில் யோனா
தொகு
1 இரண்டாம் முறையாக யோனாவுக்கு
ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர்,
2 "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்,
நான் உன்னிடம் சொல்லும் செய்தியை
3 அங்குள்ளோருக்கு அறிவி" என்றார்.
அவ்வாறே யோனா புறப்பட்டு
ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார்.
நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக்
4 கடக்க மூன்றுநாள் ஆகும்.
யோனா நகருக்குள் சென்று,
ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில்,
"இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்று அறிவித்தார்.
5 நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி,
எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள்.
பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். [*]
6 இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது.
அவன் தன் அரியணையை விட்டிறங்கி,
அரச உடையைக் களைந்துவிட்டு,
சாக்கு உடை உடுத்திக்கொண்டு,
சாம்பல் மீது உட்காhந்தான்.
7 மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து
அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான்.
இதனால் அரசரும் அரச அவையினரும்
மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது:
எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது.
ஆடு, மாடு முதலிய விலங்குகளும்
தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.
8 மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை
உடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்;
தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும்
கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
9 இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை
தம் மனத்தை மாற்றிக் கொள்வார்;
அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது."
10 கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார்.
அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு,
தம் மனத்தை மாற்றிக் கொண்டார்;
தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த
தண்டனையை அனுப்பவில்லை.
- குறிப்பு
[*] 3:4-5 = மத் 12:41; லூக் 13:32.
அதிகாரம் 4
தொகுயோனாவின் சினமும் கடவுளின் இரக்கமும்
தொகு
1 ஆனால் இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
அவர் கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார்.
2 "ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே
இதைத்தானே சொன்னேன்?
இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன்.
நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர்,
மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள்
என்பது எனக்குத் தெரியும்.
அழிக்க நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக் கொள்வீர்
என்பதும் எனக்கு அப்போதே தெரியும். [1]
3 ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்கொள்ளும்.
வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது"
என்று வேண்டிக் கொண்டார். [2]
4 அதற்கு ஆண்டவர்,
"நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார்.
5 யோனாவோ நகரைவிட்டு வெளியேறினார்;
நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்துகொண்டார்.
பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக்கொண்டு,
நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக
அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.
6 கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி
ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது.
அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து
அவரது மனச்சோர்வை நீக்கியது.
அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு
யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
7 ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி
மறு நாள் பொழுது விடியும் நேரத்தில்
ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே,
செடி உலர்ந்து போயிற்று.
8 கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி,
கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று.
கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே
அவருக்கு மயக்கம் உண்டாயிற்று.
"வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது" என்று அவர் சொல்லி,
தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.
9 அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி,
"ஆமணக்குச் செடியைக் குறித்து நீ
இவ்வாறு சினங் கொள்வது முறையா?" என்று கேட்டார்.
அதற்கு யோனா, "ஆம், முறைதான்;
செத்துப்போகும் அளவுக்கு நான்
சினங் கொள்வது முறையே" என்று சொன்னார்.
10 ஆண்டவர் அவரை நோக்கி,
அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து,
மறு இரவில் முற்றும் அழிந்தது.
நீ அதற்காக உழைக்கவும் இல்லை,
11 அதை வளர்க்கவுமில்லை.
அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே!
இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும்
மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.
வலக்கை எது, இடக்கை எது என்று கூடச்
சொல்லத் தெரியாத இத்தனை மக்களும்,
அவர்களோடு எண்ணிருந்த கால்நடைகளும்
உள்ள இந்த மாநகருக்கு
நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?" என்றார்.
- குறிப்பு
[1] 4:2 = விப 34:6.
[2] 4:3 = 1 அர 19:4.
(யோனா நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): மீக்கா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை