திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

துன்பத்தில் உழலும் யோபு. பிசான்சியக் கலை. காலம்: 1300. காப்பிடம்: எருசலேம்.

அதிகாரம் 31

தொகு

தாம் குற்றமற்றவர் என்பதை யோபு விளக்குதல்

தொகு


1 கண்களோடு நான் உடன்படிக்கை செய்துகொண்டேன்;
பின்பு, கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?


2 வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன?
விசும்பினின்று எல்லாம் வல்லவர் விதிக்கும் உரிமையென்ன?


3 தீயோர்க்கு வருவது கேடு அல்லவா?
கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?


4 என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா?
என் காலடிகளை அவர் கணக்கிடுவதில்லையா?


5 பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,
வஞ்சகத்தை நோக்கி என் காலடி விரைந்திருந்தால்,


6 சீர்தூக்கும் கோலில் எனை அவர் நிறுக்கட்டும்;
இவ்வாறு கடவுள் என் நேர்மையை அறியட்டும்.


7 நெறிதவறி என் காலடி போயிருந்தால்,
கண்ணில் பட்டதையெல்லாம் என் உள்ளம் நாடியிருந்தால்,
என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,


8 நான் விதைக்க, இன்னொருவர் அதனை உண்ணட்டும்;
எனக்கென வளர்பவை வேரோடு பிடுங்கப்படட்டும்.


9 பெண்ணில் என் மனம் மயங்கியிருந்திருந்தால்,
பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,


10 என் மனைவி மற்றொருவனுக்கு மாவரைக்கட்டும்.
மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.


11 ஏனெனில், அது தீச்செயல்;
நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.


12 ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும் நெருப்பு அது;
வருவாய் அனைத்தையும் அடியோடு அழிக்கும் தீ அது.


13 என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ
எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது
நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,


14 இறைவன் எனக்கெதிராய் எழும்போது நான் என்ன செய்வேன்?
அவர் என்னிடம் கணக்குக் கேட்டால் நான் என்ன பதிலளிப்பேன்?


15 கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே அவனையும் உருவாக்கினார்.
கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர் அவர் ஒருவரே அல்லவோ?


16 ஏழையர் விரும்பியதை ஈய இணங்காது இருந்தேனா?
கைப்பெண்டிரின் கண்கள் பூத்துப்போகச் செய்தேனா?


17 என் உணவை நானே தனித்து உண்டேனா?
தாய் தந்தையற்றோர் அதில் உண்ணாமல் போயினரா?


18 ஏனெனில், குழந்தைப் பருவமுதல் அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்;
என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.


19 ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ
போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ
பார்த்துக்கொண்டு இருந்தேனா?


20 என் ஆட்டுமுடிக் கம்பளியினால் குளிர்போக்கப்பட்டு,
அவர்களின் உடல் என்னைப் பாராட்டவில்லையா?


21 எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு எனக்கண்டு,
தாய் தந்தையற்றோர்க்கு எதிராகக் கைஓங்கினேனா?


22 அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு தோளிலிருந்து நெகிழ்வதாக!
முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!


23 ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர் எனக்குப் பேரச்சம்;
அவர் மாட்சிக்குமுன் என்னால் எதுவும் இயலாது.


24 தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில்,
'பசும்பொன் என்உறுதுணை' என்று பகர்ந்திருப்பேனாகில்,


25 செல்வப் பெருக்கினால், அல்லது கை நிறையப் பெற்றதால்
நான் மகிழ்ந்திருப்பேனாகில்,


26 சுடர்விடும் கதிரவனையும்
ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,


27 என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால்,
அல்லது, என் வாயில் கை வைத்து முத்திமிட்டிருந்தால்,


28 அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய பழியாய் இருக்கும்;
ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.


29 என்னை வெறுப்போரின் அழிவில் நான் மகிழ்ந்ததுண்டா?
அல்லது அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?


30 சாகும்படி அவர்களைச் சபித்து,
என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.


31 'இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர் யாரேனும் உண்டோ?'
என்று என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?


32 வீதியில் வேற்றார் உறங்கியதில்லை;
ஏனெனில், வழிப்போக்கருக்கு என் வாயிலைத் திறந்து விட்டேன்.


33 என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து,
என் குற்றங்களை மானிடர்போல் மறைத்ததுண்டா?


34 பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி,
உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி,
நான் வாளாவிருந்ததுண்டா?
கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?


35 என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால் எத்துணை நன்று!
இதோ! என் கையொப்பம்;
எல்லாம் வல்லவர் எனக்குப் பதில் அளிக்கட்டும்!
என் எதிராளி வழக்கை எழுதட்டும்.


36 உண்மையாகவே அதை என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்!
எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.


37 என் நடத்தை முழுவதையுமே அவருக்கு எடுத்துரைப்பேன்;
இளவரசனைப்போல் அவரை அணுகிச் செல்வேன்.


38 எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால்,
அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,


39 விலைகொடாமல் அதன் விளைச்சலை உண்டிருந்தால்,
அதன் உரிமையாளரின் உயிரைப் போக்கியிருந்தால்,


40 கோதுமைக்குப் பதில் முட்களும்,
வாற்கோதுமைக்குப் பதில் களையும் வளரட்டும்.
யோபின் மொழிகள் முடிவுற்றன.


அதிகாரம் 32

தொகு

எலிகூவின் முதல் சொற்பொழிவு

தொகு

(32:1-37:24)


1 யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால்
இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.


2 அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ
சீற்றம் அடைந்தான்.


3 யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால்
அவர்மீது சினம் கொண்டான்.
மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான்.
ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி,
அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.


4 எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான்.
ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.


5 அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ
இன்னும் ஆத்திரம் அடைந்தான்.


6 ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ
பேசத் தொடங்கினான்:
நான் வயதில் சிறியவன்;
நீங்களோ பெரியவர்.
ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்;
அஞ்சினேன்.


7 நான் நினைத்தேன்:
'முதுமை பேசட்டும்; வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.'


8 ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே,
மனிதரில் இருக்கும் அந்த ஆவியே
உய்த்துணர்வை அளிக்கின்றது.


9 வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;
முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.


10 ஆகையால் நான் சொல்கின்றேன்;
எனக்குச் செவி கொடுத்தருள்க!
நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.


11 இதோ! உம் சொற்களுக்காகக் காத்திருந்தேன்,
நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை,
அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.


12 உங்களைக் கவனித்துக் கேட்டேன்;
உங்களுள் எவரும் யோபின் கூற்று தவறென எண்பிக்கவில்லை.
அவர் சொற்களுக்குத் தக்க பதில் அளிக்கவுமில்லை.


13 எச்சரிக்கை!
'நாங்கள் ஞானத்தைக் கண்டு கொண்டோம்;
இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்;
மனிதரால் முடியாது' என்று சொல்லாதீர்கள்!


14 என்னை நோக்கி யோபு தம்மொழிகளைக் கூறவில்லை;
உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.


15 அவர்கள் மலைத்துப் போயினர்;
மீண்டும் மறுமொழி உரையார்;
அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்வதற்கில்லை.


16 அவர்கள் பேசவில்லை;
நின்று கொண்டிருந்தாலும் பதில் சொல்லவில்லை;
நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?


17 நானும் எனது பதிலைக் கூறுவேன்;
நானும் எனது கருத்தை நவில்வேன்.


18 ஏனெனில், சொல்லவேண்டியவை என்னிடம் நிறையவுள்ளன;
என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.


19 இதோ! என் நெஞ்சம்
அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;
வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.


20 நான் பேசுவேன்; என் நெஞ்சை ஆற்றிக் கொள்வேன்;
வாய்திறந்து நான் பதில் அளிக்க வேண்டும்.


21 நான் யாரிடமும் ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;
நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.


22 ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;
இல்லையேல், படைத்தவரே விரைவில் என்னை அழித்திடுவார்.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 33 முதல் 34 வரை