திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை
யோபு (The Book of Job)
தொகுஅதிகாரங்கள் 33 முதல் 34 வரை
அதிகாரம் 33
தொகுயோபின் மட்டுமீறிய நம்பிக்கை
தொகு
1 ஆனால் இப்பொழுது, யோபே!
எனக்குச் செவிகொடும்;
என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.
2 இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்;
என் நாவினால் பேசுகிறேன்.
3 என் உள்ளத்தின் நேர்மையை
என் சொற்கள் விளம்பும்;
அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.
4 இறைவனின் ஆவி என்னைப் படைத்தது;
எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.
5 உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்;
என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.
6 இதோ! இறைவன் முன்னிலையில் நானும் நீவிரும் ஒன்றே;
உம்மைப்போல் நானும் களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!
7 இதோ! நீர் எனக்கு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை;
நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.
8 உண்மையாகவே என் காதுகளில் விழ நீர் கூறினீர்;
நானும் அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்:
9 'குற்றமில்லாத் தூயவன் நான்;
மாசற்ற வெண்மனத்தான் யான்.
10 இதோ! அவர் என்னில் குற்றம்காணப் பார்க்கின்றார்;
அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.
11 மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்;
என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்'. [1]
12 இதோ! இது சரியன்று;
பதில் உமக்குக் கூறுகிறேன்:
கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.
13 'என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை'
என ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?
14 ஏனெனில், இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார்;
இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்;
அதை யாரும் உணர்வதில்லை.
15 கனவில், இரவின் காட்சியில் ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;
படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில், [2]
16 அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்;
எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.
17 இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்;
மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார்.
18 அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும்,
உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார்.
19 படுக்கையில் படும் வேதனையினாலும்
எலும்பில் வரும் தீரா வலியினாலும்
அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.
20 அப்போது அவர்களின் உயிர் உணவையும்,
அவர்களின் ஆன்மா அறுசுவை உண்டியையும் அருவருக்கும்.
21 அவர்களின் சதை கரைந்து மறையும்;
காணப்படா அவர்களின் எலும்புகள் வெளியே தெரியும்.
22 அவர்களின் ஆன்மா குழியினையும்
அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.
23 மனிதர் சார்பாக இருந்து,
அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும்
ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்
24 அவர்களின் மீது இரங்கி,
"குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்;
ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;
25 இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்;
இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும்"
26 என்று கடவுளிடம் மன்றாடினால்,
அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்;
அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்;
அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.
27 அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்:
'நாங்கள் பாவம் செய்தோம்;
நேரியதைக் கோணலாக்கினோம்;
இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை;
28 எங்கள் ஆன்மாவைக் குழியில் விழாது அவர் காத்தார்;
எங்கள் உயிர் ஒளியைக் காணும்.'
29 இதோ இறைவன் இவற்றையெல்லாம் மனிதர்க்கு
மீண்டும் மீண்டும் செய்கிறார்.
30 இவ்வாறு குழியிலிருந்து அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்;
வாழ்வோரின் ஒளியை அவர்கள் காணச் செய்கின்றார்.
31 யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்;
பேசாதிரும்; நான் பேசுவேன்.
32 சொல்வதற்கு இருந்தால், எனக்குப் பதில் சொல்லும்; பேசுக!
உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே நான் விழைகின்றேன்.
33 இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்; பேசாதிரும்;
நான் உமக்கு ஞானத்தைக் கற்பிப்பேன்.
- குறிப்புகள்
[1] 33:11 = யோபு 13:27.
[2] 33:15 = யோபு 4:13.
அதிகாரம் 34
தொகுஎலிகூவின் இரண்டாம் சொற்பொழிவு
தொகு
1 எலிகூ தொடர்ந்து கூறினான்:
2 ஞானிகளே! என் சொற்களைக் கேளுங்கள்;
அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.
3 நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,
காது சொற்களைப் பகுத்துணர்கின்றது. [1]
4 நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம்;
நல்லது எதுவோ அதை நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.
5 ஆனால் யோபு சொல்லியுள்ளார்:
"நான் நேர்மையானவன்;
ஆனால் இறைவன் என் உரிமையைப் பறித்துக் கொண்டார்,
6 நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார்;
நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று.'
7 யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?
நீர்குடிப்பதுபோல் அவர் இறைவனை இகழ்கின்றார்;
8 தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்;
கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.
9 ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்:
'கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்
எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.'
10 ஆகையால், அறிந்துணரும் உள்ளம் உடையவர்களே!
செவிகொடுங்கள்!
தீங்கிழைப்பது இறைவனுக்கும்,
தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும் தொலைவாய் இருப்பதாக!
11 ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப அவர் கைம்மாறு செய்கின்றார்;
அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார். [2]
12 உண்மையாகவே, கொடுமையை இறைவன் செய்யமாட்டார்;
நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.
13 பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்?
உலகனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தவர் யார்?
14 அவர்தம் ஆவியைத் தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால்,
தம் உயிர் மூச்சை மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,
15 ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்;
மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;
16 உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;
என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.
17 உண்மையில், நீதியை வெறுப்பவரால் ஆட்சி செய்ய இயலுமா?
வாய்மையும் வல்லமையும் உடையவரை நீர் பழிப்பீரோ?
18 அவர் வேந்தனை நோக்கி 'வீணன்' என்றும்
கோமகனைப் பார்த்து 'கொடியோன்' என்றும் கூறுவார்.
19 அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்;
ஏழைகளை விடச் செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்;
ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?
20 நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்;
நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்;
ஆற்றல் மிக்காரும் மனித உதவியின்றி அகற்றப்படுவர்.
21 ஏனெனில், அவரின் விழிகள் மனிதரின் வழிகள்மேல் உள்ளன;
அவர்களின் அடிச்சுவடுகளை அவர் காண்கிறார்.
22 கொடுமை புரிவோர் தங்களை ஒளித்துக்கொள்ள இருளும் இல்லை;
இறப்பின் நிழலும் இல்லை.
23 இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க,
எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.
24 வலியோரை நொறுக்குவதற்கு அவர்
ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை,
அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.
25 அவர்களின் செயலை அவர் அறிவார்;
ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;
அவர்களும் நொறுக்கப்படுவர்.
26 அவர்கள் கொடுஞ்செயலுக்காக
அவர் மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.
27 ஏனெனில், அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகினர்;
அவர்தம் நெறியனைத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை;
28 ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;
அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.
29 அவர் பேசாதிருந்தால்,
யார் அவரைக் குறைகூற முடியும்?
அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால்,
யார்தான் அவரைக் காணமுடியும்?
நாட்டையும் தனி மனிதரையும் அவரே கண்காணிக்கின்றார்.
30 எனவே, இறைப்பற்றில்லாதவரோ
மக்களைக் கொடுமைப்படுத்துபவரோ ஆளக்கூடாது.
31 எவராவது இறைவனிடம் இவ்வாறு கேட்பதுண்டா:
'நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;
இனி நான் தவறு செய்யமாட்டேன்.
32 தெரியாமல் செய்ததை எனக்குத் தெளிவாக்கும்;
தீங்கு செய்திருந்தாலும், இனி அதை நான் செய்யேன்.'
33 நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது,
கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா?
நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்; நான் அல்ல;
ஆகையால் உமக்குத் தெரிந்ததைக் கூறும்.
34 புரிந்துகொள்ளும் திறன் உடையவரும்
எனக்குச் செவி சாய்ப்பவர்களில் ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்:
35 யோபு புரியாமல் பேசுகின்றார்;
அவர் சொற்களும் பொருளற்றவை.
36 யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா?
ஏனெனில், அவரின் மொழிகள் தீயோருடையவைபோல் உள்ளன.
37 யோபு தாம் பாவம் செய்ததோடு கிளர்ச்சியும் செய்கின்றார்;
ஏளனமாய் நம்மிடையே அவர் கைதட்டுகின்றார்;
இறைவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.
- குறிப்புகள்
[1] 34:3 = யோபு 12:11.
[2] 34:11 = திபா 62:12.
(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 35 முதல் 36 வரை