திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்."- உரோமையர் 6:3-5

அதிகாரம் 5

தொகு

4. கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதுவாழ்வு

தொகு

கடவுளுக்கு ஏற்புடையவராதலால் விளையும் பயன்

தொகு


1 ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம்
கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம்,
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க்
கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்.
2 நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்.
இந்நிலையை அடையும் உரிமை
இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால்தான்
அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது.
கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில்
நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.
3 அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும்
பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும்,
4 மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும்
என அறிந்திருக்கிறோம்.
5 அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது;
எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க்
கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.


6 நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே,
குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
7 நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது.
ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும்
தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.
8 ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். [1]
9 ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால்
கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி,
அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என
மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? [2]
10 நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும்
அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால்
கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.
அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம்,
வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என
மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!
11 அது மட்டும் அல்ல,
இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்
நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

ஆதாமும் கிறிஸ்துவும்

தொகு


12 ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது;
அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது.
அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால்,
எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. [3]
13 திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது;
ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை.
14அ, ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள்
ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும்
சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று;


14ஆ, இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
15 ஆனால், குற்றத்தின் தன்மை வேறு,
அருள்கொடையின் தன்மை வேறு.
எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் [4] இறந்தனர்.
ஆனால் கடவுளின் அருளும்
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும்
பலருக்கும் [5] மிகுதியாய்க் கிடைத்தது.
16 இந்த அருள்கொடையின் விளைவு வேறு,
அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு.
எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத்
தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை.
பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ
அருள்கொடையாக வந்த விடுதலை.
17 மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச்
சாவு ஆட்சி செலுத்தினதென்றால்
அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும்
இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள்
வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என
இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?


18 ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும்
தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல்,
ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல்
எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.
19 ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் [6] பாவிகளானதுபோல்,
ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் [7] கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.


20 குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது;
ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. [8]
21 இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல்,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது;
அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி,
நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.


குறிப்புகள்

[1] 5:8 = யோவா 15:13.
[2] 5:9 = 1 தெச 1:10.
[3] 5:12 = தொநூ 3:6; 1 கொரி 15:21,22.
[4], [5], [6], [7] - "பலர்" என்னும் இச்சொல்லை இவ்விடத்தில்
"அனைவர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
[8] 5:20 = கலா 3:19.

அதிகாரம் 6

தொகு

பாவத்தைவிட்டு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்தல்

தொகு


1 அப்படியானால் என்ன சொல்வோம்?
அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?
2 ஒருபோதும் கூடாது.
பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம்
எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்?
3 திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும்
அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்
என்பது உங்களுக்குத் தெரியாதா? [1]
4 இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி
திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். [2]


5 அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில்,
அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.
6 நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி,
நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.
இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும்.
7 ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?
8 கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே
நாம் கொண்டுள்ள நம்பிக்கை.
9 இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்;
இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.
10 அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார்.
இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.


11 அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்;
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள்
என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
12 ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம்
சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.
13 நீங்களோ உங்கள் உறுப்புக்களைத்
தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்;
மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்;
கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய்
உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.
14 பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது;
ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல;
மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறி

தொகு


15 அதனால் என்ன?
சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல்,
அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா?
ஒருபோதும் கூடாது.
16 எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ
அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ?
அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்;
நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள்.
17 முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள்
பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை
உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள்.
18 பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள்
கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள்.
அதற்காகக் கடவுளுக்கு நன்றி.
19 நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு
எளிய முறையில் பேசுகிறேன்.
முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும்
நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள்.
அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும்
ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.
20 நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது
கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை.
21 அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி
இப்போது நீங்களே வெட்கப்படுகிறீர்கள்.
அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா?
22 ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக்
கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்;
இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு.
இதன் முடிவு நிலைவாழ்வு. [3]
23 பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு;
மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை
நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு. [4]


குறிப்புகள்

[1] 6:3 = கலா 3:27.
[2] 6:4 = கொலோ 2:12.
[3] 6:21-22 = இச 30:15-20.
[4] 6:23 = கலா 6:7-9; யாக் 1:15.


(தொடர்ச்சி):உரோமையர்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை