திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபேசியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள்." (எபேசியர் 5:8-11)

அதிகாரம் 5

தொகு


1 ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய்
அவரைப்போல் ஆகுங்கள்.
2 கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக்
கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல,
நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். [1]


3 பரத்தைமை, அனைத்து ஒழுக்கக்கேடுகள்,
பேராசை ஆகியவற்றின் பெயர் கூட உங்களிடையே சொல்லப்படலாகாது.
இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.
4 அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு,
பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும்.
5 ஏனெனில் பரத்தைமையில் ஒழுக்கக் கேடாக நடப்போர்,
சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும்
கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை
நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

ஒளிபெற்றவர்களாய் நடந்து கொள்ளுங்கள்

தொகு


6 வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள்.
ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது
கடவுளின் சினம் வருகின்றது.
7 எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம்.
8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள்
இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள்.
ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
9 ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும்
உண்மையையும் விளைவிக்கிறது.
10 ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
11 பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம்.
அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள்.
12 அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது.
13 அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது
அவற்றின் உண்மைநிலை வெளியாகிறது.
14 அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது.
ஆதலால்,
'தூங்குகிறவனே, விழித்தெழு;
இறந்தவனே, உயிர்பெற்றெழு;
கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்'
என்று கூறப்பட்டுள்ளது.
15 ஆகையால் உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள்.
ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்.
16 இந்த நாள்கள் பொல்லாதவை.
ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; [2]
17 ஆகவே அறிவிலிகளாய் இராமல்,
ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்.


18 திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள்.
இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும்.
மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள்.
19 உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள்,
ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும்.
உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
20 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால்
எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். [3]

கணவர் மனைவியர் நடத்தை

தொகு


21 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22 திருமணமான பெண்களே,
ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். [4]
23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக்
கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார்.
கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர்.
24 திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல,
மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.
25 திருமணமான ஆண்களே,
கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல
நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
26 வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்.
27 அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல்
தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.
28 அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி
அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்.
29 தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார்.
அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.
30 ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.


31 "இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு


தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்;


இருவரும் ஒரே உடலாயிருப்பர்" [5]


என மறைநூல் கூறுகிறது.
32 இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது.
இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
33 எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல
தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.
மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.


குறிப்புகள்

[1] 5:2 = விப 29:18; திபா 40:6.
[2] 5:16 = கொலோ 4:5.
[3] 5:19,20 = கொலோ 3:16,17.
[4] 5:22 = கொலோ 3:18; 1 பேது 3:7.
[5] 5:31 = தொநூ 2:24.


அதிகாரம் 6

தொகு

பெற்றோர் பிள்ளைகள் நடத்தை

தொகு


1 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்.
ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. [1]


2 "உன் தந்தையையும் தாயையும் மதித்து நட"


என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை.


3 "இதனால் நீ நலம் பெறுவாய்;
மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்"


என்பதே அவ்வாக்குறுதி. [2]
4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்.
மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி,
அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். [3]

தலைவர்கள் அடிமைகள் நடத்தை

தொகு


5 அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல்
இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு
அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்.
6 மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு,
வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல்
கிறிஸ்துவின் பணியாளராய்க்
கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்.
7 மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வதுபோல
நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.
8 அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும்,
நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர்.
இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! [4]


9 தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம்
அவ்வாறே நடந்து கொள்ளுங்கள்.
அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள்.
அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும்
அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். [5]

கிறிஸ்தவ வாழ்வில் போராட்டம்

தொகு


10 இறுதியாக, நீங்கள் ஆண்டவரோடு இணைந்து,
அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்.
11 அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி
கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.
12 ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை.
ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர்,
இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர்,
வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.


13 எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று,
அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமைபெறும்படி,
கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14 ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு,
நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்; [6]
15 அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை
உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். [7]
16 எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.
17 மீட்பைத் தலைச்சீராவாகவும்,
கடவுளின் வார்த்தையைத்
தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். [8]


18 எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்;
எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள்.
இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்;
இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.
19 நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத்
துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக்
கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள்.
20 நான் விலங்கிடப்பட்டிருந்தும்
இந்த நற்செய்தியின் தூதுவனாக இருக்கிறேன்.
நான் பேச வேண்டிய முறையில் அதைத்
துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.

4. இறுதி வாழ்த்தும் முடிவுரையும்

தொகு


21 என்னைப்பற்றிய செய்திகளையும்,
நான் என்ன செய்கிறேன் என்பதையும் நீங்களும் அறிந்திருக்கும்படி,
என் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பார்.
அவர் ஆண்டவரது பணியில் நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர். [9]
22 எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து
உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். [10]


23 தந்தையாகிய கடவுளிடமிருந்தும்,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
நம்பிக்கையோடு கூடிய அன்பும் அமைதியும்
சகோதரர் சகோரரிகள் அனைவருக்கும் உரித்தாகுக!
24 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது
அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!


குறிப்புகள்

[1] 6:1 = கொலோ 3:20.
[2] 6:2,3 = விப 20:12; இச 5:16.
[3] 6:4 = கொலோ 3:21.
[4] 6:5-8 = கொலோ 3:22-25.
[5] 6:9 = கொலோ 4:1; இச 10:17; கொலோ 3:25.
[6] 6:14 = எசா 11:5; 59:17.
[7] 6:15 = எசா 52:7.
[8] 6:17 = எசா 59:17.
[9] 6:21 = திப 20:4; 2 திமொ 4:12.
[10] 6:21,22 = கொலோ 4:7,8.


(எபேசியருக்கு எழுதிய திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை