திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
இத்திருமுகம் ஒற்றுமை பற்றியும் மகிழ்ச்சி பற்றியும் அருமையான கருத்துகளை எடுத்துக்கூறுகிறது; கிறிஸ்து இயேசுவின் வழியாய் அவற்றைப் பெற இயலும் என அழுத்தமாக எடுத்துரைக்கிறது.
ஆசிரியர்
தொகுபவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ள இத்திருமுகம் பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாகப் பலரால் கருதப்படுகிறது.
சூழலும் நோக்கமும்
தொகுபவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது பிலிப்பியில் பலரை மனம் மாற்றினார். சிறைப்பிடிக்கப்பட்டு, வியத்தகு முறையில் சிறையிலிருந்து தப்பினார். மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போதும் அங்கு வந்தார் (திப 20:1,6).
பின்னாளில் பவுல் சிறைப்பட்டபோது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4:18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்றபின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ்வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இலங்கவேண்டும் என்பதற்காகவும் இந்நூலை எழுதுகிறார்.
அவர் எங்குச் சிறைப்பட்டிருந்தபோது இந்தத் திருமுகத்தை எழுதினார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. உரோமைச் சிறையிலிருந்து எழுதினார் என்பதே மரபுக் கருத்து. எனினும் அவரது மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது அவர் எபேசிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
உள்ளடக்கம்
தொகுஇத்திருமுகத்தில் பவுல் தன்னிலை விளக்கம் தருகிறார் (1:12-26; 4:10-19); தாம் சிறைப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கிறார்; துன்பங்களில் பிலிப்பியர் மனவுறுதியோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார் (1:27,30; 4:4); பிலிப்பியர் தாழ்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டுகின்றார்; தம்மை மிகவும் தாழ்த்திப் பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவை முன்மாதிரியாகக் காட்டுகிறார் (2:1-11; 4:2-3).
திமொத்தேயுவையும் எப்பப்பிராதித்துவையும் பிலிப்பியத் திருச்சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பவுல் விரும்புகிறார் (2:19-30); யூத மயமாக்கலைக் குறித்துப் பிலிப்பியரை எச்சரிக்கிறார் (3:1-21); தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துகிறார் (4:10-20).
பிலிப்பியர் திருமுகத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் இல்லை. இக்கடிதம் மகிழ்வின் கடிதமாகும். மகிழ்வைக் குறிக்கும் "காரா" எனும் கிரேக்கச் சொல் 16 முறை இத்திருமுகத்தில் வருகிறது. கிறிஸ்துவின் தாழ்மை உயர்வு பற்றிய கிறிஸ்தியல் பாடல் (2:5-11) மிகச் சிறப்பானது.
பிலிப்பியர்
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை
(வாழ்த்தும், நன்றியும் இறைவேண்டலும்) |
1:1-11 | 367 |
2. பவுலின் தன்னிலை விளக்கம் | 1:12-26 | 367 - 368 |
3. கிறிஸ்தவ வாழ்வு | 1:27 - 2:18 | 368 369 |
4. திமொத்தேயு, எப்பப்பிராதித்து குறித்த திட்டம் | 2:19-30 | 369 - 370 |
5. எதிரிகள் குறித்து எச்சரிக்கை | 3:1 - 4:9 | 370 - 371 |
6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும் | 4:10-20 | 371 - 372 |
7. முடிவுரை | 4:21 -23 | 372 |
பிலிப்பியர் (Philippians)
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
தொகு1. முன்னுரை
தொகுவாழ்த்து
தொகு
1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள்,
சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், [1]
2 கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுதுவது:
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும்,
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நன்றியும் இறைவேண்டலும்
தொகு
3 உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்;
4 உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன்.
5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை
நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.
6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர்,
கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார்
என உறுதியாய் நம்புகிறேன்.
7 நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.
உங்கள் எல்லாரையும் பற்றி
எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே.
ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும்
நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும்
நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்கு உண்டு.
8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு
உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.
9-11 மேலும், நீங்கள் அறிவிலும்
அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து,
அன்பால் நிறைந்து,
சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன்.
கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும்
இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று
கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக
நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.
2. பவுலின் தன்னிலை விளக்கம்
தொகுவாழ்வு என்பது கிறிஸ்துவே
தொகு
12 சகோதர சகோதரிகளே,
எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவாயின.
இதை நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறேன்.
13 ஏனெனில் கிறிஸ்துவுக்காகவே நான் சிறைப்பட்டுள்ளேன் என்பது
ஆளுநர் மாளிகைக் காவற்படையினர் அனைவருக்கும்
மற்ற யாவருக்குமே தெளிவாயிற்று. [2]
14 என் சிறைவாழ்வினால் சகோதரர் சகோதரிகளுள் பெரும்பாலோர்
ஆண்டவரை உறுதியாக நம்பிக்
கடவுள் வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க
மேலும் துணிவு பெற்றிருக்கிறார்கள்.
15 சிலர் பொறாமையும் போட்டி மனப்பான்மையும் கொண்டு
கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்;
வேறுசிலர் நன்மனத்தோடு அறிவிக்கின்றனர்.
16 இவர்களைத் தூண்டுவது அன்பே.
நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என
இவர்கள் அறிவார்கள்.
17 மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் தூண்டப்பட்டுக்
கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்.
அவர்களது நோக்கம் தூய்மையானது அல்ல;
அவர்கள் என் சிறைவாழ்வின் துன்பத்தை மிகுதியாக்கவே நினைக்கின்றனர்.
18 அதனாலென்ன?
அவர்களது நோக்கம் போலியாக அல்லது உண்மையாக இருக்கலாம்.
எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்.
இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன்.
19 இவ்வாறு உங்கள் மன்றாட்டும்
இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும்
என் விடுதலைக்கு வழிவகுக்கும் என நான் அறிவேன்.
20 என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன்.
இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும்
முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன்.
இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு.
21 ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே;
நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.
22 எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும்.
எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை.
23 இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன்.
உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். -
இதுவே மிகச் சிறந்தது.-
24 ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். -
இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.
25 நான் உங்களோடிருப்பதால்
நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.
எனவே உங்கள் அனைவரோடும்
தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன்.
26 ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால்,
கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு
இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.
3. கிறிஸ்தவ வாழ்வு
தொகுநற்செய்திக்கான போராட்டம்
தொகு
27 ஒன்றைமட்டும் மறந்துவிடாதீர்கள்:
கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.
நான் உங்களை வந்து பார்த்தாலும்,
நான் வரமுடியாத நிலையில் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும்
நீங்கள் நற்செய்தியில் கொண்டுள்ள நம்பிக்கைக்காக
ஒருமனத்தோடு போராடி,
ஒரே உள்ளத்தோடு நிலைத்து நிற்கிறீர்கள் என்றும்,
28 எதிரிகள் முன் சற்றும் மருளாமல் இருக்கிறீர்கள் என்றும்
நான் அறிய வேண்டும்.
இவ்வாறு நீங்கள் மருளாதிருப்பது
அவர்களது அழிவுக்கும் உங்களது மீட்புக்கும் அறிகுறியாகும்.
இதுவும் கடவுளின் செயலே.
29 ஏனெனில் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல,
அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் நீங்கள் அருள் பெற்றுள்ளீர்கள்.
30 நீங்கள் என் போராட்டத்தைக் கண்டீர்கள்,
இப்பொழுதும் அதுபற்றிக் கேள்விப்படுகிறீர்கள்.
உங்கள் போராட்டமும் அதுவே. [3]
- குறிப்புகள்
[1] 1:1 = திப 16:12.
[2] 1:13 = திப 28:30.
[3] 1:30 = திப 16:19-40.
அதிகாரம் 2
தொகுதாழ்மையும் ஒற்றுமையும்
தொகு
1 எனவே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா?
அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும்
பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?
2 அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும்
ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து,
ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.
3 கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.
மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.
4 நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல,
பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
5 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
6 கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை
வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றி,
8 சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்,
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும். [1]
கிறிஸ்தவச் செயல்பாடு
தொகு
12 என் அன்பர்களே,
நீங்கள் எப்பொழுதும் கீழ்படிந்து வருகிறீர்கள்;
நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல,
அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்.
எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.
13 ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்.
அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான
விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
14 முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள்.
15 அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட,
சீரழிந்த தலைமுறையினரிடையே
குற்றமும் கபடுமற்றவர்களாய்க்
கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்;
உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். [2]
16 கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில்,
வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள்.
வீணாக நான் ஓடவில்லை,
வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.
17 நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில்
நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும்
அது எனக்கு மகிழ்ச்சியே.
அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்.
18 அதுபோலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள்.
உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
4. திமொத்தேயு, எப்பப்பிராத்து குறித்த திட்டம்
தொகுதிமொத்தேயுவின் தகைமை
தொகு
19 ஆண்டவர் இயேசு அருள்கூர்ந்தால்,
திமொத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப இயலும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உளமகிழ்வேன்.
20 என் உளப்பாங்கிற்கு ஏற்ப,
உங்கள்மீது உண்மையான கவலை கொள்வதற்கு
அவரைத்தவிர வேறொருவரும் என்னிடமில்லை.
21 எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைத் தேடுகிறார்களே தவிர,
இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.
22 ஆனால் திமொத்தேயுவின் தகைமை உங்களுக்குத் தெரியும்.
தந்தையோடு சேர்ந்து மகன் பணியாற்றுவது போல்
என்னோடு சேர்ந்து அவர் நற்செய்திக்காகப் பணியாற்றியுள்ளார்.
23 என் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரிந்தவுடன்
அவரை உங்களிடம் அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.
எப்பப்பிராதித்துவின் துணிவு
தொகு
24 ஆண்டவர் அருள்கூர்ந்தால் நானே உங்களிடம் விரைவில் வருவேன்
என உறுதியாக நம்புகிறேன்.
25 என் சகோதரரும் உடன் உழைப்பாளரும்
உடன் போர் வீரருமான எப்பப்பிராதித்துவை
என் தேவைகளில் எனக்குத் துணை செய்யும்படி நீங்கள் அனுப்பி வைத்தீர்கள்.
அவரை இப்பொழுது உங்களிடம் திரும்ப அனுப்புவது தேவை எனக் கருதுகிறேன்.
26 ஏனெனில் அவர் உங்கள் எல்லாருக்காகவும் ஏக்கமாயிருக்கிறார்.
குறிப்பாக, அவர் உடல்நலம் குன்றியிருந்ததைப்பற்றி
நீங்கள் கேள்விப்பட்டதை அறிந்து மனங்கலங்கியுள்ளார்.
27 அவர் உடல்நலம் குன்றி,
இறக்கும் நிலையில் இருந்தது உண்மையே.
ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார்.
அவர்மேல் மட்டும் அல்ல,
துயரத்துக்கு மேல் துயரம் எனக்கு நேராதபடி,
என்மேலும் இரக்கம் கொண்டார்.
28 அவரை மிக விரைவில் அனுப்பிவைக்கிறேன்.
நீங்கள் அவரை மீண்டும் பார்ப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நானும் துயரின்றி இருப்பேன்.
29 எனவே முழு மகிழ்ச்சியோடு
ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்;
இத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.
30 ஏனெனில் நீங்கள் எனக்கு ஊழியம் புரிய இயலாமற்போன குறையை நீக்க
அவர் தம் உயிரையே இழக்கத் துணிந்தார்.
கிறிஸ்துவுக்காக அவர் செயலாற்றிய காரணத்தினால்தான்
இவ்வாறு அவர் சாகும் நிலைக்கு ஆளானார்.
- குறிப்புகள்
[1] 2:10,11 = எசா 45:23.
[2] 2:15 = இச 32:5.
(தொடர்ச்சி): பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை