திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"'போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே' என்றும், 'வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே' என்றும் மறைநூல் கூறுகிறது." (1 திமொத்தேயு 5:18)

அதிகாரம் 5 தொகு

திருச்சபையினருக்கு ஆற்றவேண்டிய கடமைகள் தொகு


1 முதியோரிடம் கடுமையாய் இராதே.
அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி.
இளைஞர்களைத் தம்பிகளாகவும்,
2 வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும்,
இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு.


3 கைம்பெண்களுக்கு மதிப்புக்கொடு.
ஆதரவற்ற கைம்பெண்களையே இங்குக் குறிப்பிடுகிறேன்.
4 பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ உடைய கைம்பெண்கள்
தாங்கள் கொண்டுள்ள இறைப்பற்றிற்கு ஏற்ப
முதலில் தங்கள் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும்
பெற்றோருக்கு நன்றிக்கடன் ஆற்றவும் கற்றுக் கொள்ளட்டும்.
இதுவே கடவுளின் முன்னிலையில் ஏற்புடையது.
5 ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண்
கடவுள் மேல் கொண்ட எதிர்நோக்குடன் அல்லும் பகலும் மன்றாட்டிலும்
இறைவேண்டலிலும் நிலைத்திருப்பாராக.
6 சிற்றின்பத்தில் உழல்பவர்கள் நடைப் பிணங்களே.
7 கைம்பெண்கள் யாதொரு குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு வாழ
இவற்றை அவர்களுக்குக் கட்டளையிடு.
8 தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர்
விசுவாசத்தை மறுதலிப்பவராவர்.
அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர்.


9 அறுபது வயதுக்குக் குறையாத ஒருவரே
கைம்பெண்ணாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
அவர் ஒரு கணவரைக் கொண்டவராய் இருந்திருக்க வேண்டும். [1]
10 அவர் பிள்ளைகளை வளர்த்தல், விருந்தோம்பல்,
இறைமக்களின் காலடிகளைக் கழுவுதல்,
இன்னலுற்றோருக்கு உதவி செய்தல் போன்ற
அனைத்து நற்செயல்களில் ஈடுபட்டு
அவற்றால் நற்சான்று பெற்றவராக இருக்க வேண்டும்.


11 இளம் கைம்பெண்களைப் பதிவு செய்யாதே.
ஏனெனில் கிறிஸ்துவிடமிருந்து தங்களைப் பிரிக்கக்கூடிய தீய நாட்டம் எழும்போது
அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்;
12 தாங்கள் முதலில் கொடுத்த வாக்கை மீறினால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்;
13 அதோடு வீடுவீடாய்ச் சுற்றித் திரிந்து சோம்பேறிகளாக இருக்கக் கற்றுக் கொள்வார்கள்.
சோம்பேறிகளாக இருப்பது மட்டுமின்றி,
தகாதவற்றைப் பேசி வம்பளக்கிறவர்களாகவும்,
பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
14 எனவே, இளம் கைம்பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொண்டு,
பிள்ளைகளைப் பெற்று,
வீட்டுத் தலைவிகளாய் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்;
அப்போது எதிரி பழி தூற்ற எந்த வாய்ப்பும் இராது.
15 ஏனென்றால் இவர்களுள் சிலர் ஏற்கெனவெ நெறிதவறிச்
சாத்தானுக்குப் பின் சென்றுவிட்டார்கள்.
16 நம்பிக்கை கொண்ட பெண் ஒருவரிடம் கைம்பெண்கள் இருந்தால்,
அவரே அவர்களுக்கு உதவி செய்யட்டும்.
திருச்சபையின்மீது அச்சுமையைச் சுமத்தக் கூடாது.
ஏனென்றால் அப்போதுதான் உண்மையிலேயே
ஆதரவற்ற கைம்பெண்களுக்குத் திருச்சபை உதவி செய்ய முடியும்.


17 சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள்,
சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள்
இருமடங்கு ஊதியத்திற்கு உரியவர்களாகக் கருதப்படவேண்டும். [2]
18 ஏனென்றால்,


"போர் அடிக்கும் மாட்டின்
வாயைக் கட்டாதே"


என்றும்,


"வேலையாளர் தம் கூலிக்கு
உரிமை உடையவரே"


என்றும் மறைநூல் கூறுகிறது. [3]
19 ஒரு மூப்பருக்கு எதிரான குற்றச்சாட்டை,
இரண்டு அல்லது மூன்று சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே. [4]
20 பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள்.
அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர்.
21 கடவுளின் முன்னிலையிலும்
கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும்
தேர்ந்துகொள்ளப்பட்ட வான தூதர்களின் முன்னிலையிலும்
உனக்கு நான் முன்னெச்சரிக்கையாகக் கூறுவது:
நான் சொன்னவற்றைக் கடைப்பிடித்து வா.
முன்கூட்டியே முடிவெடுக்காதே.
நடுநிலை தவறாதே.
22 அவசரப்பட்டு யார் மேலும் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தாதே.
பிறருடைய பாவங்களில் பங்கு கொள்ளாதே.
உன்னைத் தூய்மையுள்ளவனாகக் காத்துக்கொள்.
23 தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு,
உன் வயிற்றின் நலனுக்காகவும்,
உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும்
சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து.


24 சிலருடைய பாவங்கள் வெளிப்படையானவை.
அவர்களுடைய பாவங்கள் தீர்ப்புக்காக அவர்களுக்கு முன்னே சென்று சேர்கின்றன.
வேறு சிலருடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னே வந்து சேர்கின்றன.
25 அவ்வாறே நற்செயல்களும் வெளிப்படையானவையே.
வெளிப்படையாக இல்லாதவையும் என்றுமே மறைந்திருக்க முடியாது.


குறிப்புகள்

[1] 5:9 - இதனை ‘ஒரேமுறை திருமணம் செய்தவராகவும்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.
[2] 5:17 - ஊதியம் என்பதை மதிப்பு என்றும் மொழிபெயர்க்கலாம்.
[3] 5:18 = இச 25:4; மத் 10:10; லூக் 10:7.
[4] 5:19 = இச 17:6; 19:15.

அதிகாரம் 6 தொகு


1 அடிமைத்தளையில் இருப்போர் தங்கள் தலைவர்களை
முழு மதிப்புக்கு உரியவர்களாகக் கருதவேண்டும்.
அப்பொழுது கடவுளின் பெயரும் போதனையும் பழிச்சொல்லுக்கு உள்ளாகாது.
2அ நம்பிக்கை கொண்டோரைத் தலைவர்களாகக் கொண்டுள்ள அடிமைகள்,
அவர்களும் சகோதரர்கள்தானே என்று,
மதிப்புக் கொடுக்காதிருத்தல் தவறு.
மாறாகத் தங்கள் நற்செயலால் பயன்பெறுவோர்
நம்பிக்கை கொண்டவர்களும் அன்பர்களுமாய் இருப்பதால்,
இன்னும் மிகுதியாக அவர்களுக்குப் பணி செய்யவேண்டும்.

தவறான போதனை தொகு


2ஆ இவற்றை நீ கற்பித்து ஊக்குவி.
3 மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம்தரும் வார்த்தைகளுக்கும்,
இறைப்பற்றுக்குரிய போதனைக்கும் ஒத்துப் போகாதவர்கள்,
4 தற்பெருமை கொண்டவர்கள்;
ஒன்றும் தெரியாதவர்கள்;
விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள்.
பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள்,
5 ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன.
உண்மையை இழந்தவர்களிடமும்
சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன.


6 இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்;
ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்.
7 உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை.
உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.
8 எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால்
அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.
9 செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள்
சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்;
அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய
பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள்.
இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை.
10 பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்.
அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து
பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.

இறுதி அறிவுரை தொகு


11 கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு.
நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.
12 விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு.
நிலைவாழ்வைப் பற்றிக்கொள்.
அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்.
அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில்
விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.
13 அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும்,
பொந்தியு பிலாத்துவின்முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட
இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். [*]
14 நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தோன்றும் வரையில்
குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை
அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.
15 உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார்.
கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர்,
ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர்.
16 அவர் ஒருவரே சாவை அறியாதவர்;
அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்;
அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது.
அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.


17 இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு:
அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது.
நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல்
நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும்
நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும்.
18 அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக;
தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக.
19 இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று
நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால்
உண்மையான வாழ்வை அடைய முடியும்.

5. இறுதிப் பரிந்துரையும் எச்சரிக்கையும் தொகு


20 திமொத்தேயு,
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக.
உலகப் போக்கிலான வீண்பேச்சுக்களிலிருந்தும்,
ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும்
முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு.
21 அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர்
விசுவாசத்தை விட்டு விலகினார்கள்.
இறை அருள் உங்களோடிருப்பதாக!


குறிப்பு

[*] 6:13 = யோவா 18:37.


(திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): திமொத்தேயுவுக்கு எழுதிய 2ஆம் திருமுகம்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை