திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திமொத்தேயுவுக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
பவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல்முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (1:16; 2:9; 4:13) என்றும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம்.
சூழலும் நோக்கமும்
தொகுஉள்ளடக்கம்
தொகுஇத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறா; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.
2 திமொத்தேயு
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை | 1:1-2 | 400 |
2. திமொத்தேயுவுக்கு அறிவுரை | 1:3 - 2:13 | 400 - 401 |
3. தவறான போதனை குறித்து அறிவுரை | 2:14 - 4:8 | 401 - 403 |
4. பவுலின் நிலைமை | 4:9-18 | 403 - 404 |
5. முடிவுரை | 4:19-22 | 404 |
2 திமொத்தேயு (2 Timothy)
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
தொகு1. முன்னுரை
தொகுவாழ்த்து
தொகு
1-2 என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு,
கடவுளின் திருவுளத்தால்
கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப
அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:
தந்தையாம் கடவுளிடமிருந்தும்
நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும்
அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! [1]
2. திமொத்தேயுவுக்கு அறிவுரை
தொகுநம்பிக்கையில் நிலைத்திருத்தல்
தொகு
3 என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன்
கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.
இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன்.
4 உன் கண்ணீரை நினைவிற் கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்;
கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்.
5 வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.
இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி
மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது.
இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். [2]
6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது
உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.
7 கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல,
வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.
8 எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ
அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ
வெட்கமடையத் தேவை இல்லை;
கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத்
துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.
9 அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல,
காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி,
கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்;
நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார்.
10 நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம்
இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது.
அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
11 அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும்
போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன்.
12 இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்;
எனினும் வெட்கமுறுவதில்லை.
ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன்.
அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர்
என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
13 கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு
என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். [3]
14 நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட
நல்ல போதனையைக் காத்துக் கொள்.
15 பிகல், எர்மொகேன் உட்பட ஆசியாவிலுள்ள அனைவரும்
என்னிடமிருந்து விலகிவிட்டனர் என்பதை நீ அறிந்திருக்கிறாய்.
16 ஒனேசிப்போரின் வீட்டாருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக!
ஏனெனில் அவர் பன்முறை என் உளம் குளிரப் பண்ணினார்.
விலங்கிடப்பட்டிருக்கும் என்னைக் குறித்து அவர் வெட்கமடையவில்லை.
17 அவர் உரோமைக்கு வந்தபோது ஆர்வமாக என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்.
18 இறுதி நாளில் ஆண்டவரிடம் இரக்கத்தைக் கண்டுகொள்ள
அவருக்கு ஆண்டவர் அருள்வாராக!
எபேசில் அவர் எவ்வாறு தொண்டாற்றினார் என்பதை நீ நன்கு அறிவாய்.
- குறிப்புகள்
[1] 1:2 = திப 16:1.
[2] 1:5 = திப 16:1.
[3] 1:13 = 1 திமொ 2:7.
அதிகாரம் 2
தொகுகிறிஸ்துவின் நல்லதொரு படைவீரன்
தொகு
1 என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு.
2 சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை,
மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும்
நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.
3 கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள்.
4 படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபடமாட்டார்.
தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராய் இருக்கவேண்டும் அன்றோ!
5 விளையாட்டு வீரர் எவரும் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே
வெற்றிவாகை சூட முடியும்.
6 நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளரே
விளைச்சலில் முதற்பங்கு பெற வேண்டும்.
7 நான் கூறுபவற்றைக் கருத்தில் கொள்.
ஆண்டவர் உனக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறமையைத் தருவாராக.
8 தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து
இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி.
இதனை நினைவில் கொள்.
9 இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச்
சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன்.
ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.
10 தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும்
அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும்
கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
11 பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது:
'நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;
12 அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்;
நாம் அவரை மறுதலித்தால்
அவர் நம்மை மறுதலிப்பார். [*]
13 நாம் நம்பத்தகாதவரெனினும்
அவர் நம்பத்தகுந்தவர்.
ஏனெனில் தம்மையே மறுதலிக்க
அவரால் இயலாது.'
இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
3. தவறான போதனை குறித்து அறிவுரை
தொகுகடவுளுக்கு ஏற்புடைய பணியாளர்
தொகு
14 வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது;
அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக்
கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு.
15 நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்;
உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ
வெட்கமுற வேண்டியதில்லை.
16 உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு;
ஏனெனில் அதனால் அவர்கள் மேன்மேலும் இறைப்பற்று அற்றவர்களாவார்கள்.
17 அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும்.
இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.
18 உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி,
உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்;
சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள்.
19 கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது.
அதில் 'ஆண்டவர் தம்முடையோரை அறிவார்' என்றும்,
'ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்'
என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
20 ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல,
மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன.
அவற்றுள் சில மதிப்புடையவை; சில மதிப்பற்றவை.
21 ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால்,
அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார்.
அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்;
தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.
22 எனவே நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு.
தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன்
நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.
23 மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து,
அவற்றை விட்டுவிடு.
24 ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்;
அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும்,
கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும்,
25 மாற்றுக் கருத்துடையோருக்கும்
பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து
மனம் மாறக் கடவுள் அருள்கூரலாம்.
26 அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள்
அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும்.
- குறிப்பு
[*] 2:12 = மத் 10:33; லூக் 12:9.
(தொடர்ச்சி): திமொத்தேயுவுக்கு எழுதிய 2ஆம் திருமுகம்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை