திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திமொத்தேயுவுக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

"ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்." (2 திமொத்தேயு 4:6-8)

அதிகாரம் 3

தொகு

இறுதி நாள்களில் மக்களின் போக்கு

தொகு


1 இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள்.
2 தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர்,
செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர்,
நன்றியற்றோர், தூய்மையற்றோர்,
3 அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர்,
வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர்,
4 துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர்,
கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர்
ஆகியோர் தோன்றுவர்.
5 இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள்.
ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது.
இத்தகையவர்களோடு சேராதே!
6 இத்தகையோரில் சிலர் வீடுகளில் நுழைந்து
பேதைப் பெண்களைத் தம்வயப்படுத்திக் கொள்கின்றனர்.
இப்பெண்கள் பல்வேறு தீய நாட்டங்களால் கவரப்பட்டுப் பாவங்களில் மூழ்கியுள்ளனர்.
7 இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும்
ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
8 இயன்னே, இயம்பிரே என்போர் மோசேயை எதிர்த்து நின்றது போல
இம் மனிதர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள்.
இவர்கள் சீரழிந்த மனம் கொண்டவர்கள்; விசுவாசத்தில் தேர்ச்சியற்றவர்கள். [1]
9 ஆனால் இனி இவர்கள் அதிகம் முன்னேற மாட்டார்கள்.
ஏனெனில் அவ்விருவருக்கும் நேரிட்டது போன்று இவர்களின் அறியாமை வெளியாகிவிடும்.

இறுதி அறிவுரை

தொகு


10 என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை,
அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய்.
11 அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும்
எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும்.
இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன்.
இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். [2]
12 கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து
இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர்.
13 ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள்.
ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
14 நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்;
யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே.
15 நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய்.
அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால்
உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.
16 மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது.
அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும்
நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.
17 இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று
நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.


குறிப்புகள்

[1] 3:8 = விப 7:11.
[2] 3:11 = திப 13:14-52; 14:1-7, 8-20.


அதிகாரம் 4

தொகு


1 கடவுள் முன்னிலையிலும்
வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும்
அவர் தோன்றப்போவதை முன்னிட்டும்
அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது:
2 இறைவார்த்தையை அறிவி.
வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு.
கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு;
மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
3 ஒரு காலம் வரும்.
அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள்.
மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த்
தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத்
தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.
4 உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.
5 நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு;
துன்பத்தை ஏற்றுக்கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று;
உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.


6 ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்.
நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
7 நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.
என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்.
விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.
8 இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.
அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்;
நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல,
அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

4. பவுலின் நிலைமை

தொகு


9 விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்.
10 தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னைவிட்டு அகன்று,
தெசலோனிக்கா சென்று விட்டார்.
கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்.
11 என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்.
மாற்கை உன்னுடன் கூட்டி வா.
அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்.
12 திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன்.
13 நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும்,
குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா.


14 கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான்.
அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். [*]
15 அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள்.
அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன்.


16 நான் முதன்முறை வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை;
எல்லாரும் என்னை விட்டு அகன்றனர்.
அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக.
17 நான் அறிவித்த செய்தி நிறைவுற்று,
அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று
ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்;
சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.
18 தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத்
தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார்.
அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

5. முடிவுரை

தொகு

இறுதி வாழ்த்து

தொகு


19 பிரிஸ்கா, அக்கிலா, ஒனேசிப்போர் ஆகியோரின் வீட்டாருக்கு வாழ்த்துக் கூறு.
20 எரஸ்து கொரிந்துவில் இருந்து விட்டார்.
துரோப்பிம் நோயுற்றிருந்ததால் அவரை மிலேத்துவில் விட்டு வந்தேன்.
21அ குளிர் காலத்திற்குமுன் வர முழு முயற்சி செய்.
21ஆ ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா
மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும்
உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.


22 ஆண்டவர் உன்னோடு இருப்பாராக!
இறை அருள் உங்களோடு இருப்பதாக!


குறிப்பு

[*] 4:14 = திபா 62:12; உரோ 2:6.


(திமொத்தேயுவுக்கு எழுதிய 2ஆம் திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): தீத்துக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை