திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை
திருவெளிப்பாடு (Revelation)
தொகுஅதிகாரங்கள் 21 முதல் 22 வரை
அதிகாரம் 21
தொகு9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும்
தொகு
1 பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன்.
முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன.
கடலும் இல்லாமற் போயிற்று. [1]
2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர்
கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.
தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல்
அது ஆயத்தமாய் இருந்தது. [2]
3 பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது,
"இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.
அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார்.
அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள்.
கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். [3]
4 அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார்.
இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது;
முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" என்றது. [4]
5 அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர்,
"இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார்.
மேலும், "'இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது" என்றார்.
6 பின்னர் அவர் என்னிடம் கூறியது:
"எல்லாம் நிறைவேறிவிட்டது;
அகரமும் னகரமும் நானே; தொடக்கமும் முடிவும் நானே.
தாகமாய் இருப்போருக்கு
வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து
நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். [5]
7 வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர்.
நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள். [6]
8 ஆனால் கோழைகள், நம்பிக்கை இல்லாதோர்,
அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர்,
சூனியக்காரர் சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும்,
நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும்.
இதுவே இரண்டாம் சாவு."
புதிய எருசலேம்
தொகு
9 இறுதியான அந்த ஏழு வாதைகள் நிறைந்த
ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து,
"வா, ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்"
என்று என்னிடம் கூறினார்.
10 தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே,
அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டுசென்றார்;
திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து
விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். [7]
11 அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று;
விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.
12 அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும்
அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன.
வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள்.
இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும்
அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
13 கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும்
தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன.
14 நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது.
அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின்
பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. [8]
15 என்னோடு பேசியவர் நகரையும் அதன் மதிலையும்
வாயில்களையும் அளக்கும்பொருட்டுப்
பொன்னாலான ஓர் அளவுகோலை வைத்திருந்தார்.
16 அந்நகரம் சதுரமாய் இருந்தது;
அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான்.
அவர் அந்த அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார்.
அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். [9]
அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்.
17 பின் அவர் மதிலை அளந்தார்.
அதன் உயரம் இருநூற்றுப் பதினாறு அடி.
மனிதரிடையே வழக்கில் இருந்த அளவைகளையே அவரும் பயன்படுத்தினார்.
18 அதன் மதில் படிகக் கற்களால் கட்டப்பட்டிருந்தது.
அந்நகரோ தூய்மையான, கண்ணாடி போன்ற பசும்பொன்னால் ஆனது.
19 நகர மதிலின் அடிக்கற்கள் விலையுயர்ந்த எல்லாவித
கற்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தன;
முதலாவது படிகக் கல், இரண்டாவது நீலமணி,
மூன்றாவது பலவண்ணப்படிகம், நான்காவது மரகதம்;
20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது மாணிக்கம்,
ஏழாவது பொற்கல், எட்டாவது படிகப்பச்சை,
ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம்,
பதினொன்றாவது பதுமராகம், பன்னிரண்டாவது சுகந்தி.
21 பன்னிரண்டு வாயில்களும் பன்னிரண்டு முத்துகளால் ஆனவை.
ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகையான முத்தால் ஆனது.
நகரின் தெரு தெள்ளத் தெளிவான கண்ணாடிபோன்ற பசும்பொன்னால் ஆனது.
22 நகருக்குள் கோவில் காணப்படவில்லை.
ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில்.
23 அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாலோ தேவைப்படவில்லை.
கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
24 மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்;
மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம்
அங்குக் கொண்டு செல்வார்கள்.
25 அதன் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும்.
அங்கு இரவே இராது.
26 உலகின் பெருமையும் மாண்பும் எல்லாம் அங்குக் கொண்டு செல்லப்படும்.
27 ஆனால் தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் அதில் நுழையாது.
அதுபோல் அருவருப்பானதைச் செய்வோரும்
பொய்யரும் அதில் நுழையமாட்டார்கள்.
ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில்
பெயர் எழுதப்பட்டவர்கள் மட்டுமே அதில் நுழைவார்கள்.
- குறிப்புகள்
[1] 21:1 = எசா 65:17; 66:22; 2 பேது 3:13.
[2] 21:2 = திவெ 3:12; எசா 61:10.
[3] 21:3 = எசே 37:27; லேவி 26:11,12.
[4] 21:4 = எசா 25:8; 35:10; 65:19.
[5] 21:6 = எசா 55:1.
[6] 21:7 = 2 சாமு 7:14; திபா 89:26,27.
[7] 21:10 = எசே 40:2.
[8] 21:12,13 = எசே 48:30-35.
[9] 21:16 - "பன்னிரண்டு ஆயிரம் ஸ்தாதியம்" என்பது கிரேக்க பாடம்.
அதிகாரம் 22
தொகு
1 பின்பு அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த
ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார்.
அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. [1]
அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,
2 நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது.
ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தது.
மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும்.
அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. [2] [3]
3 சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது.
கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும்.
கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; [4]
4 அவரது முகத்தைக் காண்பார்கள்.
அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
5 இனி இரவே இராது.
விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது.
ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்;
அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். [5]
கிறிஸ்துவின் வருகை
தொகு
6 பின்னர் அந்த வானதூதர் என்னிடம்,
"இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை.
விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு,
இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர்
தம் வானதூதரை அனுப்பினார்.
7 இதோ! நான் விரைவில் வருகிறேன்" என்றார்.
இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
8 யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன்.
அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு
அவருடைய காலடியில் விழுந்தேன்.
9 அவரோ என்னிடம்,
"வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும்,
இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே.
கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார்.
10 அவர் தொடர்ந்து என்னிடம் பின்வருமாறு கூறினார்:
"இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே;
இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.
11 இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்;
இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்;
தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும். [6]
12 "இதோ! நான் விரைவில் வருகிறேன்.
அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான்
அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. [7]
13 அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே. [8]
14 "தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர்.
வாழ்வு தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு.
அவர்கள் வாயில்கள் வழியாக நகருள் நுழைவார்கள்.
15 நடத்தைகெட்டோர், [9] சூனியக்காரர், பரத்தைமையில் ஈடுபடுவோர்,
கொலையாளிகள், சிலைவழிபாட்டினர்,
பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர்
ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள்.
10. முடிவுரை
தொகு
16 "திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு
இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன்.
தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே!
ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே!" [10]
17 தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து,
"வருக! வருக!" என்கிறார்கள்.
இதைக் கேட்போரும், "வருக! வருக!" எனச் சொல்லட்டும்.
தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்;
விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்." [11]
18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும்
யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்:
இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால்,
இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது
யாரேனும் எடுத்து விட்டால்,
இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும்
திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார். [12]
20 இவற்றுக்குச் சான்று பகர்பவர்,
"ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமென்.
ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
21 ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!
- குறிப்புகள்
[1] 22:1 = எசே 47:1; செக் 14:8.
[2] 22:2 - "நகரின் தெரு நடுவிலும் ஆற்றின் இரு மருங்கிலும்
வாழ்வு தரும் மரங்கள் இருந்தன" என்றும் மொழி பெயர்க்கலாம்.
[3] 22:2 = தொநூ 2:9.
[4] 22:3 = செக் 14:11.
[5] 22:5 = எசா 60:19; தானி 7:18.
[6] 22:11 = தானி 12:10.
[7] 22:12 = எசா 40:10; 62:11; திபா 28:4; எரே 17:10.
[8] 22:13 = திவெ 1:8, 17; 2:8; எசா 44:6; 48:12.
[9] 22:15 - "நாய்கள்" என்பது மூல பாடம்.
[10] 22:16 = எசா 11:1, 10.
[11] 22:17 = எசா 55:1.
[12] 22:18-19 = இச 4:2, 12:32.
(திருவெளிப்பாடு நிறைவுற்றது)
(புதிய ஏற்பாடு நிறைவுற்றது)
(திருவிவிலிய நூல்கள் நிறைவுற்றன)
(தொடர்ச்சி): பிற்சேர்க்கைகள்:விவிலிய வரலாற்றின் கால அட்டவணை