திருவிவிலியம்/பொது முன்னுரை


கிறித்தவர்களின் புனித நூலாகப் போற்றப்பெறுகின்ற திருவிவிலியம் (The Holy Bible) பல தனி நூல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். திருவிவிலிய நூல்கள் எல்லாம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்கும். பழைய ஏற்பாட்டு நூல்களை யூத சமயத்தைச் சார்ந்தவர்களும் தம் புனித நூலாகக் கொள்வர். அவை பெரும்பாலும் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.

1723இல் தரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலியம். "மோசேசென்கிறவர் எழுதிவைத்த முதலாம் பொஷ்த்தகம்" = தொடக்க நூல் (Genesis).

திருவிவிலியம் தொகு

திருவிவிலியம் - பொது முன்னுரை

இயேசு கிறித்துவின் பிறப்புக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல்கள் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. இவை கிரேக்க மொழியில் எழுதப்பட்டன.

விவிலிய நூல்களை உருவாக்கியோர் மனிதர்களே என்றாலும் அவற்றின் மூல ஆசிரியர் கடவுளே என்பது யூத மற்றும் கிறித்தவ நம்பிக்கை. எனவே, விவிலியத்தை மனிதர்களால் எழுதப்பட்ட, கடவுளின் வார்த்தை என்றும் கூறுவர்.

கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட இணைய நூலகமாக விளங்குகின்ற விக்கிமூலத்தில் திருவிவிலிய நூல்களை வெளியிடுவதில் கீழ்வரும் அளவீடுகள் கருத்தில் கொள்ளப்பட்டன:

  • பல்வேறு திருச்சபை மரபுகளைச் சேர்ந்த அறிஞர்கள் எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூல மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்து 1995இல் வெளியிட்ட பொது மொழிபெயர்ப்பு இவண் தரப்படுகிறது. இதுவே திருவிவிலியம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.
  • இம்மொழிபெயர்ப்பில் இயல்பான, தரமான, எளிய தமிழ்மொழிநடை இடம் பெற்றுள்ளது. தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு (Dynamic Equivalence) முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வழக்கற்ற சொற்களும், திசைச் சொற்களும் இயன்றவரை தவிர்க்கப்பட்டுள்ளன.
  • கவிதைப்பகுதிகள் முடிந்தவரை கவிதை நடையில் அமைக்கப்பெற்றாலும் பொருள்தெளிவே இன்றியமையாததாகக் கருதப்பட்டுள்ளது.
  • பெயர்ச்சொற்கள் அனைத்தும் ஒலிபெயர்ப்பே (transliteration) செய்யப்பட்டுள்ளன. அவை தமிழில் ஒலிப்பதற்கு எளிமையான, இனிமையான வடிவம் பெற்றுள்ளன.
  • நீட்டலளவைகளுக்கும் நிறுத்தலளவைகளுக்கும் பல இடங்களில் தற்கால வழக்கிலுள்ள மெட்ரிக் இணை வழங்கப்பட்டுள்ளது.
  • மரபு காரணமாக முதல் ஐந்து நூல்கள் கிரேக்கவழி தலைப்புகளையும், மற்ற எல்லா நூல்களும் எபிரேயவழி தலைப்புகளையும் கொண்டுள்ளன.
  • அனைத்து நூல்களின் வசன எண்கள் உலகப் பொது வழக்கு மொழிபெயர்ப்புகளின் (Standard Versions) அடிப்படையில் அமைந்துள்ளன.
  • தமிழின் சிறப்புப் பண்பான மரியாதைப் பன்மையை (Honorific Plural) மனதிற்கொண்டு விவிலியத்தில் பெரும்பாலோர்க்கும் மரியாதைப் பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது. இறைத்திட்டத்திற்கு எதிரானவரைக் குறிப்பிடும்போதும், பழித்துரைக்கும் சூழலிலும், நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்தும் போதும் மரியாதைப் பன்மை தவிர்க்கப்படுகிறது.
  • இரு பாலார்க்கும் பொதுவான கருத்துக்கள் மூலநூலில் ஆண்பால் விகுதி பெற்று வந்தாலும் இரு பாலார்க்கும் பொருந்தும் முறையில் (Inclusive Language) மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மூல மொழியிலும் தமிழ் மொழியிலும் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வு களையப்படுகிறது.
  • பொருள் துல்லியம், தெளிவு, எளிமை, மக்கள் மொழிநடை, மனித நேயம், இருபால் சமத்துவநோக்கு ஆகியவற்றைக் கண்முன் கொண்டு செய்யப்பட்ட இம்மொழியாக்கம் கிறித்தவ சமுதாயத்திற்கும் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதற்கும் பயன் நல்கும்.

(தொடர்ச்சி): திருவிவிலிய நூல்கள் வரிசை