தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தலபுராணச் செய்திகள்
முன்னொருகாலத்தில் மத்தியந்தன முனிவர் என்பவர், தாம் தவஞ் செய்து பெற்ற புதல்வருக்குக் கல்விப்பயிற்சி நிரம்பிய பின்னர் அறிவு நூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினார். தந்தையார்பால் அறிவு நூற்பொருளை உணர்ந்த அப்புதல்வர், சிறப்புடைய திருத்தலம் ஒன்றிலே சென்று இறைவனை வழிபாடு செய்தற்கு விரும்பினார். பிள்ளையின் விருப்பத்தையுணர்ந்த மத்தியந்தன முனிவர் அவரைத் தில்லைப்பதிக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். தந்தை சொல்வழி நடக்கும் அப்புதல்வர், தில்லைவனத்தையடைந்து, அவ்விடத்தே ஓர் அழகிய தடாகமும் அதன் தென் பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் சிவலிங்கத் திருவுருவமும் இருத்தலைக் கண்டு பெருமகிழ்வு கொண்டார். அங்கே ஒரு தவச்சாலை அமைத்துக்கொண்டு சிவலிங்கப் பெருமானைப் பூசித்து வருவாராயினர். தாம் நாள்தோறும் இறைவனை வழிபாடு செய்தற்கென்று பறிக்கும் பலநறுமண மலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தார். அம் மலர்களுள் பழையனவும் பழுது பட்டனவுமான மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தினார்.
பொழுது விடிந்தபின் மலர்களைக் கொய்தால் அவை வண்டுகள் ஊதியனவாக ஆகிவிடுகின்றன. இரவிலேயே சென்று பறிப்போம் என்றால், மரம் செறிந்த இக்காட்டிலே வழிதெரியவில்லை. மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்குகின்றது. ஆதலால், என் செய்வோம் என அவ்விளைய முனிவர் பெரிதும் வருந்தினார். அந்நிலையில் எல்லாம்வல்ல சிவபெருமான் அம்முனிவர் முன்னே தோன்றினார். அவ்விளைய முனிவர் இறைவனை வணங்கி வாழ்த்தி, ஐயனே தேவரீரை வழிபடுதல் வேண்டி அடியேன் விடியற் பொழுதில் சென்று மரங்களில் வழுக்காமல் ஏறவேண்டியிருத்தலால் என்னுடைய கைகால்கள் புலியின் வலிய நகங்களையுடையனவாதல் வேண்டும். வழி தெரிந்து செல்லுதற்கும், பழுதற்ற நறுமலர்களைத் தெரிந்து கொய்வதற்கும் கால்களிலும் கைகளிலும் கண்கள் உண்டாதல் வேண்டும்" எனக் குறையிரந்து வேண்டினார். எல்லாம்வல்ல இறைவனும் அவர் வேண்டியவண்ணமே ஆகுக என்று வரத்தினைத் தந்து மறைந்தருளினார். அன்று முதல் அவ்விளைய முனிவர், வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்ணம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார். இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவேநீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் புலியூர் என்னும் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடைய அடைமொழியுடன் திருநாவுக்கரசுப் பெருமானால் போற்றப்படும் சிறப்புடையதாயிற்று.
தில்லைப்பதியாகிய புலியூரில் வியாக்கிரபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தன முனிவர் தில்லையை யடைந்து, தம் மைந்தர்க்கு நற்குடிப்பிறந்த ஒரு மங்கையை மணஞ் செய்து வைத்தல் வேண்டும் என்னும் தமது விருப்பத்தை வெளியிட்டார். வியாக்கிரபாதரும் தம் தந்தையார் விருப்பத்திற்கு உடன்பட்டார். மத்தியந்தன முனிவர், வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச் சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார்.
பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் தம் குழந்தையைத் தம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால், உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்து இனிய தின்பண்டங்களும் தீம்பாலும் ஊட்டினர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு ஆகிய அக்குழந்தை, அவ்வுணவையுண்ணாது உமிழ்ந்து விட்டுப் பசிதாங்காது அழுவதாயிற்று. அது கண்டு வருந்திய வியாக்கிரபாதரும் அவர் மனைவியாறும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து கிடத்தினர், எவ்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற் கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார். உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது. தில்லைப்பெருமான் உபமன்யு ஆகிய குழந்தையின் பசி தீரப் பாற்கடலையழைத்தருளிய அருட்செயலைப் 'பாவனுக் காயன்றுபாற்கடலீந்து' (4-107-6) என அப்பரடிகளும், 'பாலுக்குப்பாலகன்வேண்டியழுதிடப் பாற்கடலீந்தபிரான், {திருப்பல்லாண்டு-) எனச்சேந்தனாரும் குறித்துப் போற்றியுள்ளனர். புலிக்கால் முனிவரும் கவலை நீங்கித் திருமூலட்டானப் பெருமான் சந்நிதியில் சிவயோகத்திலமர்ந்து அப்பெருமான் திருவடியில் கருத்தொன்றுபட்டு இருந்தார். அப்பொழுது' அவருள்ளத்தே, சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தின் வரலாறு நினைவில் தோன்றியது. அதனைத் தெரிந்த அளவிலே சிவபெருமான் திருக்கூத்தியற்றிய தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இந்தவிடத்தில் இருக்கப் பெற்றேனே. இறைவன் ஆடிய திருக்கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார். இத்தில்லையம்பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன் கண்ணேதான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்த்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார்.
தேவதாரு வனத்தில் வாழ்ந்த நாற்பத்தெண்ணாயிர முனிவர்களும் தம்முடைய தவவன்மையினையும் தம் மனைவியரது கற்பின் திண்மையினையும் எண்ணி எல்லாவகையாலும் தாமே உயர்ந்தோர் எனச் செருக்குற்று இறைவனை வழிபடாதிருந்தனர். அப்பொழுது சிவபெருமான், திருமால் மோகினியாய்த் தம்முடன் வர, தாம் பிச்சைத் தேவராய்த் தேவதாரு வனத்திற்குச் சென்று அங்குவாழும் முனிவர்களின் தவவுறுதியினையும் அவர்தம் மனைவியரது மனத்திண்மையையும் நெகிழச் செய்தனன். அதுகண்ட முனிவர்கள் எக்காலத்தும் அழிவின்றியுள்ளவன் இறைவன் என்பதனையுணராமல் அம் முதல்வனை யழித்தல் வேண்டித் தீய வேள்வியினைச் செய்தனர். அவ்வேள்வியிலிருந்து தோன்றிய புலி இறைவன் மேற் பாய்ந்தது. அதனை இறைவன் அழித்து அதன் தோலை யுரித்து உடுத்துக் கொண்டனன். வேள்வியிலிருந்து சீறிவந்த பாம்பினைத் தன்கைக்குக் கங்கணமாக அணிந்து கொண்டனன். பின்னர் இவ்வேள்வியிலிருந்து முயலகன் என்னும் கொடியோன் தோன்றி எதிர்த்தனன். இறைவன் அவன் முதுகினை நெரியும்படி வலத்திருவடியால் மிதித்துக்கொண்டனன். அது கண்ட முனிவர்கள் இறைவன் மேற் சாபமொழிகளடங்கிய மந்திரங்களை ஏவினர். இறைவன் அம்மந்திரங்களைச் சிலம்புகளாகத் தொகுத்துத் தன் திருவடியில் அணிந்து கொண்டான். பின்பு! அம் முனிவர்களால் கண்டு தாங்கவொண்ணாத கடுங்கூத்தினை ஆடியருளினான்.. அந்நிலையில் அக்கூத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ள இயலாத முனிவர் அனைவரும் மயங்கி வீழ்ந்தனர். அதுகண்டு இறைவனருகே நின்ற திருமாலும் நடுக்க முற்றார். பேரருளாளனாகிய இறைவன், அம் முனிவர்களின் துயரங்களைப் போக்கி அவர்கட்கு அருள் செய்யத் திருவுளங் கொண்டு, எவ்வுயிர்க்கும் இன்னருள் சுரக்கும் ஆனந்தத் திருக்கூத்தை அவர்கள் கண்டு மெய்யுணர்வு பெறும்படி ஆடியருளினான். அதனைக் கண்ட உமையம்மையும், திருமாலும் ஏனைத் தேவர்களும் பேரின்பக் கடலில் திளைத்து மகிழ்ந்தனர். தேவதாரு வனத்து முனிவர்களும் தம் செருக்கடங்கி இறைவனைப் பணிந்து, தமது பிழையினைப் பொறுத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானும் முனிவர்களது ஆணவ வலியெலாம் திருவடிக்கீழ் அடங்கிக்கிடக்கும் முயலகன் பால் வந்து ஒடுங்கும்படி அருள் செய்து மறைந்தருளினார்.
பின்பு, திருமால், தம் இருக்கையாகிய பாற்கடலையடைந்து பாம்பணையிற் பள்ளிகொண்டு தாம் கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப் புடையராய்த் துயிலாதிருந்தார். அந்நிலையில் அவர்க்குப் படுக்கையா யிருந்த ஆதிசேடன் திருமாலைப் பணிந்து அவர் கொண்ட பெருமகிழ்ச்சிக்குக் காரணம் யாது என வினவினான். திருமாலும் தேவதாரு வனத்தில் சிவபெருமான் ஆடிய ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட ஆதிசேடன் அத்திருக்கூத்தினைத் தானும் காணும் பெரு வேட்கை மீதூர்ந்து காதலாகிக் கண்ணீர் மல்கி நின்றான். அவனது பெருவேட்கையையறிந்த திருமால், அவனை நோக்கி 'நீர் சிவ பெருமானுக்கு அன்பராயினமையின் இனி எமக்குப் படுக்கைப்பணி செய்தல் தகாது. நீர் தவஞ் செய்தலே ஏற்பு டையது' என்று கூறினார். அது கேட்ட ஆதிசேடன் தன் மகன் அனந்தன் என்பவனைத் திருமாலுக்குப் பாம்பணையாக்கி விட்டு வடகயிலை மருங்கு சென்று சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தனன். அவனது பேரன்பின் திறத்தைப் பலரும் அறியச்செய்யத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அவன் முன்னே தோன்றி, "யாம் தேவ தாருவனத்தில் திருக்கூத்து ஆடியபோது அவ்விடம் எமது கூத்தினைத் தாங்கப் பொறாது அசைவுற்றது. அதனால் அக்கூத்தினை அங்கு நிகழ்த்தாது விடுத்தோம். இப்போது அதனைச் செய்தற்கு இதுவும் இடமன்று. எமது திருக்கூத்தினைப் பொறுத்தற்கு ஏற்ற இடம் தில்லைவனமே. அத்தகைய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத்திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அதற்குரிய காரணம் இங்கு அறியத்தகுலதாகும்.
மன்னுயிர்களின் உடம்பும் அவ்வுயிர்கள் வாழ்வதற்கு இடமாகிய உலகமும் அமைப்பால் ஒத்துள்ளன. இடைகலை பிங்கலை சுழுமுனை என உடம்பினுள்ளே ஓடும் மூன்று நாடிகளிற் சுழுமுனை நாடியென்பது நடுவில் ஓடும் நாடியாகும். இந்நிலவுலகத்திற்கு இலங்கையின் நேரே இடை நாடியும் இமயத்தின் நேரே பிங்கலை நாடியும் செல்லும். மற்றை நடுநாடியாகிய சுழுமுனை நாடி தில்லைக்கு நேரே செல்வதாகும் உடம்ப னுள்ளே செல்லும் நடுநாடியாகிய சுழுமுனையின் நடுவே விளங்கும் நெஞ்சத் தாமரையின் அகத்தேயுள்ள, அருள் வெளியிலே இடைவிடாது யாம் அருட்கூத்து நிகழ்த்துகின்றோம். அது போலவே உலகத்தின் நடுவே தில்லைப்பதியின் கண் மூல இலிங்கம் உள்ள திருமூலட்டானத்தின் தெற்கே நால்வேதங்களும் காணாத அம்பலம் ஒன்றுள்ளது. அத்தகைய ஞானமயமான அருளம்பலத்திலே யாம் எக்காலத்தும் இடைவிடாது திருக்கூத்து நிகழ்த்தி அருள்வோம். அத்திருக்கூத்தினை அங்கே காணும் அறிவுக் கண்ணுடையோர் பிறவித்துன்பம் நீங்கிப் பேரின்பமாகிய வீடு பேற்றினைத் தலைப்படுவர். ஆதலால் நீ இவ்வுருவினை நீத்து முன்னொருகால் அத்திரி முனிவர் மனைவியின் தொழுத கையின் கண்ணே ஐந்தலைச் சிறுபாம்பாகி வந்தமையால் நீ அவ்வுருவுடனேயே நாகலோகத்துக்குப் பொருந்திய வழியே போவாயாக. அந்நாகலோகத்தின் நடுவே ஒரு மலையுளது; அதற்குத் தெற்குப் பக்கத்தே ஒருபிலத்துவாரமும், இருக்கிறது. அப்பிலத்துவாரத்தின் வழியே தில்லையை அடைந்தால் அதன் வடபக்கத்திலேயுள்ள ஆலமர நிழலிலே மலைக்கொழுந்தாகிய, இலிங்கத்திருமேனி உள்ளமை காணலாம். அங்கு வியாக்கிரபாத முனிவன் அவ்விலிங்கத்தைப் பூசித்துக் தோண்டு, உள்ளான். உன்னைப்போன்றே எனது திருக்கூத்தினைக்காணும் பெருவேட்கையுடன் என்னை வழிபாடு செய்து கொண்டிருக்கும் அவனுடன் நீயும் இருப்பாயாக; உங்கள் இருவர்க்கும் தைப்பூசம் குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளில் உச்சிக்காலத்தில் எமது ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தரிசிக்கும்படி ஆடியருள் புரிவோம்" என்று கூறி மறைந்தருளினார்.
சிவபெருமான் பணித்த வண்ணம் ஆதிசேடனும் பதஞ்சலி முனிவராகி நாகலோகத்தையடைந்து பிலத்துவாரத்தின் வழியே தில்லைப்பதியையடைந்தான். புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும் திருக்கோயிலில் இறைவனைப் பூசித்தான். பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானத்தில் இறைவனை வழிபட்டு இருவரும் இருந்தனர். சிவபெருமான் தாம் குறித்தருளியவண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத்திருக் கோயிலிலே பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் தொழுது போற்றக் கூத்தப்பெருமானாகத் தோன்றி, சிவகாமியம்மையார் காண ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை ஆடியருளினார். முனிவர் இருவரும் கண்களில் நீர்மல்க நெஞ்சம் நெகிழ்ந்துருகித் தலை மேற் கைகுவித்து வணங்கிப் போற்றினார்கள். காத்தற் கடவுளாகிய திருமாலும் படைத்தற் கடவுளாகிய நான்முகனும் இந்திரன் முதலிய தேவர்களும் மூவாயிரவராகிய முனிவர்களும் இறைவன் ஆடியருளிய ஆனந்த நிருத்தத்தினைக்கண்டு மகிழ்ந்து போற்றினார்கள். அத்திருக் கூத்தினைக்கண்டு மகிழ்ந்த பதஞ்சலியும் புலிமுனியும் தாம்பெற்ற பேரின்பத்தினை எல்லோரும் பெறும்படி அருள்புரிதல் வேண்டும் என்று இறைவனை இறைஞ்சி வேண்டிக்கொண்டார்கள். அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக (போது செய்யா நடமாக) நிகழ்ந்து வருகின்றது.
வியாக்கிரபாத முனிவரும் நாகராசாவாகிய பதஞ்சலி முனிவரும் கூத்தப்பெருமான் சந்நிதியிலே பரவசராய்க் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். அப்பொழுது கூத்தப்பெருமான் அவர்கள் பாற் கருணை கூர்ந்து 'உங்களுக்கு வேண்டும் வரங்கள் யாவை' எனத் திருவாய் மலர்ந்தருளினார். அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் அன்பினால் மனங்கசிந்து தலை மேற் கைகுவித்து நின்று, 'பெருமானே, அடியேன் சிவாகமத்திற் கண்டபடியே முன்புபோல நாள் தோறும் யான் செய்கின்ற பூசனையை உண்மையாக ஏற்றருளுதல் வேண்டும். இது தவிர அடியேன் வேண்டும் வரம் வேறொன்றுமின்று' என விண்ணப்பம் செய்தார். பதஞ்சலி முனிவர் இறைவனை வணங்கி நின்று, ‘எல்லாம் வல்ல பெருமானே, நிலையில்லாத வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினாலே நின்னை இங்குத் தரிசிக்குந்தோறும் நிறைந்த ஞானவெளியாகிய இச்சபையிலே அன்புருவாகிய உமையம்மையாருடனே இன்று முதல் எக்காலமும் ஆனந்தத் திருக்கூத்தினையாடியருளத் திருவுளம் இரங்குதல் வேண்டும்', என வேண்டிக் கொண்டார். தேவர்கள் தேவனாகிய கூத்தப்பெருமான், முனிவர் இருவரும் வேண்டியவண்ணமே வரமளித்தருளினார். முனிவர் இருவரும் எல்லையில்லாத பெருமகிழ்ச்சியில் திளைத்தார்கள். உடனிருந்த எல்லா முனிவர்களும் ஆனந்த ஆரவாரம் செய்து பரவசமுற்றனர். வானோர் பூமழை பொழிந்தனர்.
நமக்கு விளக்கம் பொருந்திய ஞானமே அம்பலம், மெய்யுணர்வாகிய அது நம்மிற்பிரிவின்றி ஒன்றாயுள்ளது. பேரறிவாகிய அவ்வறிவு பூமியை விட்டுப்பிரியாது பூமிக்கு இதயத்தான மாகிய இத்தில்லைப்பதியாக அமைந்திருக்கும் உடம்பினுள்ளே தங்கிய ஆன்மாவிலே நாம் பிரியாதிருத்தல் போலவே, பூமியிலே ஞான வெளியாகிய இப்பதியிலே நாம் நீக்கமறத் தங்கியிருப்போம். ஆதலால், தேவர்களே இத்தில்லைப்பகுதியை வளைத்து ஒரு சபையாக அமையுங்கள்' எனக் கூத்தப் பெருமான் அங்குள்ள தேவர்களை நோக்கிப் பணித்தருளினார். அது கேட்ட தேவர்கள் அத்தகைய சபையை அமைப்பதற்கு வேண்டிய பொருள் யாது என்று அறியும் பொருட்டு இறைவன் சந்நிதியிலே மலர்களைத் தூவி வணங்கினார்கள். அப்பொழுது நடராசப்பெருமான் தேவர்களை நோக்கி 'பழைய வேதாகம நூல்களிலே ஞானமயமாகிய சபைக்கு இரண்மய கோசம் என்று ஒரு பெயருண்டு. அது பூவுலகத்தார் காணும் பொழுது முழுமையும் பொன்மயமாகும்' எனத்திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட தேவர்கள் மாற்றற்ற உயர்ந்த செம்பொன்னைக் கொண்டு அவ்விடத்தில் இறைவன் ஆடல் புரிதற்கேற்ற கனகசபையை அமைத்தார்கள்.
அன்று தொடங்கி அருளாளனாகிய நடராசப் பெருமான் சிவகாமியம்மையாரோடும் பொன்னம்பலத்திலே தேவர் முனிவர் முதலிய யாவரும் தம்முடைய திருக்கூத்தினைத் தரிசித்து உய்யும்படி அருள் புரிந்து விளங்குகின்றார்.
இறைவனது அனவரத தாண்டவத்தை இடைவிடாது தரிசித்து மகிழும் பெருவேட்கையால் திருமால் நான்முகன் இந்திரன் முதலிய தேவர்களும் வியாக்கிரபாதர், பதஞ்சலி மூவாயிர முனிவர் முதலியோரும் முத்தியை நல்கும் தில்லைப்பதியிலே தங்கிச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து நடராசப்பெருமானை நாள்தோறும் வழிபட்டிருந்தார்கள். நான்முகன் கங்கைக் கரையிலுள்ள அந்தர்வேதி என்னுமிடத்தே ஒரு வேள்வி செய்யத் தொடங்கினான் அவ்வேள்விக்குத் தில்லைவாழந்தணர்களையும் தேவர்களையும் அழைத்து வரும்படி நாரத முனிவரைத் தில்லைக்கு அனுப்பினான். நாரத முனிவரது சொல்லைக் கேட்ட முனிவர்களும் தேவர்களும் “இங்கே இறைவனது ஆனந்தத் திருக்கூத்தின் அமுதத்தைப்பருகும் நாங்கள் வேள்வியின் அவியை உண்ணவரமாட்டோம்" என்றனர். நாரதரும் திரும்பிச் சென்று பிரமதேவர்க்கு விண்ணப்பம் செய்தார். அது கேட்ட பிரமதேவர் தில்லை வனத்தையடைந்து சிவகங்கையில் நீராடிக் கூத்தப்பெருமானை வழிபட்டுத் திருமூலட்டானரை வணங்கி வியாக்கிரபாதரையடைந்து அவர் வாயிலாகத் தில்லை வாழந்தணர்களையும் தேவர்களையும் தம்வேள்விக்கு வருமாறு இசைவித்து அந்தர்வேதிக்கு அழைத்துச் சென்று தமது வேள் வியை நிறைவு செய்தார்.
இமயமலைக்குத் தெற்கே கௌடதேசத்தையாண்டு கொண்டிருந்த அரசனாகிய ஐந்தாவது மனுவுக்கு மனைவியர் இருவர். அவர்களில் மூத்த மனைவிக்கு ஒரு மைந்தனும் இளைய மனைவிக்கு மைந்தர் இருவரும் பிறந்தனர். மூத்தவள் மைந்தன் சிங்கம் போல் வெண்ணிறமுடைய சிங்கவன்மன் ஆவன். இளையவள் மைந்தர் வேதவன்மன், சுவேதவன்மன் என்போர் அழகிய வடிவினர். மூத்தோனாகிய சிங்கவன்மன் என்பவன் தான் உடற் குற்றமுடைமையால் தன்னுடைய தம்பியர் இருவருள் ஒருவர் அரசுபுரிதற்குரியர் என்றும், தலயாத்திரை செய்து தீர்த்தங்களில் நீராடிச் சிலபெருமானை வழிபடுதலே தான் செய்தற்குரிய தென்றும் தெளிந்து தன் விருப்பத்தினைத் தந்தையிடம் விண்ணப்பஞ்செய்து காசி முதலிய தலங்களை வழிபட்டு, வழியிலே ஒரு வேடனைத் துணையாகக் கொண்டு காஞ்சியை அடைந்து திருவேகம்பரை வணங்கினான். தென்னாடெங்கும் யாத்திரை செய்ய எண்ணிய சிங்கவன்மன், வழிபார்த்து வரும்படி வேடனை முன்னே அனுப்பினான். முன் சென்ற வேடன் "தில்லைவனத்திலே ஒரு பொற்றாமரை வாவிக்கரையிலே ஒரு புலியன் நித்திரை செய்து கொண்டிருக்கின்றான்" என்று கூறினான்.
அதனைக் கேட்ட சிங்கவன்மன் தில்லை வனத்தையடைந்து சிவகங்கைக்கரையிலே சிவனைத் தியானித்துக்கொண்டிருக்கும் புலிக்கால் முனிவர் திருவடிகளில் விழுந்து வணங்கி நின்று, சிவனை நோக்கித் தவம் செய்யும் விருப்பினைத் தெரிவித்துக் கொண்டான். அவனது வரலாறனைத்தையும் தமது யோகக் காட்சியால் அறிந்து கொண்ட வியாக்கிரபாதர், அவனை நோக்கி 'உன் தந்தை மிக முதிர்ந்தவயதினன், அரசாளும் கடமை உனக்குரியது. ஆகவே நீ தவஞ் செய்ய எண்ணுதல் தகாது' என்றார். அதுகேட்ட சிங்கவன்மன் தனது உடல் நோய் அரசாட்சியினை மேற்கொள்ளுதற்குத் தடையாயிருத்தலை முனிவரிடம் தெரிவித்துக் கொண்டான். அப்பொழுது வியாக்கிரபாதர் 'நாம் வரும் வரையிலும் இங்கேநில்' என்று சிங்கவன்மனைச் சிவகங்கைக்கரையில் நிற்கச்செய்து பதஞ்சலி முனிவருடன் கூத்தப் பெருமான் சந்நிதியை யடைந்து அவ்விருவரும் இறைவனை வேண்டி நிற்க, அம்முதல்வன் அருள் புரிந்தவண்ணம் சிங்கவன்மளைச் சிவகங்கையில் நீராடச் செய்தனர். அவ்வாறே சிங்கவன்மன் சிவகங்கையில் நீராடிய நிலையில் உடல் நோய் முற்றும் நீங்கிப் பொன்னிறம் பெற்று இரணியவன்மனாக எழுந்தான். அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனுக்குத் திருவைந்தெழுத்து உபதேசித்து நடராசப் பெருமான் திருமுன்னே அவனையழைத்துச் சென்று இறைவனது திருக்கூத்துத் தரிசனத்தைக் காணும்படி செய்தருளினார்.
கூத்தப்பெருமானது திருவருள் பெற்ற, இரணியவன்மன், இறைவனது எல்லையில்லா ஆனந்தத் திருக்கூத்தில் திளைத்து நெஞ்சம் கசிந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் மல்கிப் பலமுறை விழுந்து வணங்கினான். வியாக்கிரபாதர் இரணியவன மனை அழைத்துக் கொண்டு திருமூலட்டானமுடையாரையும் திருப்புலீச்சுரமுடையாரையும் திருவனந்தேச்சுரமுடையாரையும் வணங்குலித்துத் தம் ஆசிரமத்தையடைந்து தம் மனைவியாரை நோக்கி 'நீ உபமன்னியுவுக்குப்பின் பெறாது பெற்றபிள்ளை இவ்விரணியவன்மன்' என்றார். உடனே இரணியவன்மனும் அன்னையின் திருவடிகளை வணங்கினான். அம்மையாரும், 'சபாநாதர் தமக்குத் தந்தருளிய இரத்தினம் இப்பிள்ளை' என அன்புடன் தழுவிக் கொண்டார். இரணியவன்மனும் நாள்தோறும் சிவகங்கையில் நீராடித் தில்லைப் பெருமானை வழிபட்டு வியாக்கிரபாதருக்கும் பதஞ்சலி முனிவர்க்கும் தொண்டு செய்துகொண்டு இருந்தனன்.
இவ்வாறிருக்கும் நாளில் கௌட தேச மன்னன் மனு தன் னுடைய அரசினை மூத்த குமாரனாகிய இரணியவன்மனைக் கொண்டு நடத்துவிக்கும்படி வசிட்ட முனிவரிடம் வேண்டிச் சுவர்க்கமடைந்தான். மனுவுக்குச் செய்யவேண்டிய ஈமச்சடங்கினை இளைய மைந்தர் இருவரும் செய்து முடித்தனர். வசிட்ட முனிவர் இரணியவன்மனை அழைத்து வருதற்பொருட்டுத் தில்லை வனத்தையடைந்து அதன் வடமேற்குத் திசையிலுள்ள திருக்களாஞ் செடி நிழலில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசரைப் பூசனை புரிந்தார். அதனையுணர்ந்த வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி, 'நாம் பூசையை முடித்துக்கொண்டு வருவோம்; நீ முன் செல்க', எனப்பணித்தருள அவன் முன் சென்று வசிட்ட முனிவரை வணங்கினான்; தன் தந்தை மனு சுவர்க்கமடைந்த செய்தியை வசிட்ட முனிவர் சொல்லக் கேட்டு வருத்தமுற்றான். அந்நிலையில் வியாக்கிர பாதரும் பதஞ்சலியும் அங்கு வந்தனர். முனிவர் மூவரும் இரணியவன்மனுக்கு ஆறுதல் கூறியருளினர்.
வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் வசிட்ட முனிவரை அழைத்துக் கொண்டு சென்று சிவகங்கையில் நீராடச் செய்வித்துக் கூத்தப் பெருமானையும் திருமூலட்டான முடையாரையும் திருப்புலீச்சுரமுடையாரையும் திருவனந்தீச்சுரமுடையாரையும் வணங்குவித்தனர், வியாக்கிரபாதர் தமது இல்லத்தில் வசிட்டரை அமுது செய்வித்தார்.
மறுநாள் வசிட்ட முனிவருடன் வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் கூடியிருந்தபொழுது இரணியவன்மன் அவர்கள் மூவரையும் வணங்கி இருந்தனன். அப்போது வசிட்ட முனிவர் வியாக்கிரபாதரை நோக்கி, 'இரணியவன்மனை அழைத்துக் செல்லுவதற்கு இங்கு வந்தேன்' என்றார். அதுகேட்ட வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி 'உன் கருத்து யாது?' என வினவினார். அவனும் முனிவரை வணங்கி நின்று, 'அடியேன் பொன்னம்பல வாணர்க்கும் உமக்கும் செய்யும் வழிபாட்டினை யன்றிப் பிறிதொன் றினையும் விரும்பேன்' என்றான். அதுகேட்ட வியாக்கிரபாதர் 'உன் கருத்து இதுவாயின் நீ வசிட்ட முனிலருடனே சென்று அரச முடியையும் இரத்தினம் பொன் முதலிய அரசுடைமைகளையும் யானை குதிரை தேர் காலாள் ஆகிய சேனைகளையும் அமைச்சர்களையும் கொண்டு விரைவில் இங்கு வருவாயாக, அவ்வாறு வரும் வழியில் அந்தர்வேதியில் வேள்விக்குச் சென்றிருக்கும் தில்லை மூவாயிரவர்களையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு வருவாயாக' எனப் பணித்தருளினார்.
இரணியவன்மன் கூத்தப் பெருமானையும் வியாக்கிரபாதரையும் அவர் மனைவியாரையும் பதஞ்சலி முனிவரையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு வசிட்ட முனிவருடன் கௌட தேசத்தை அடைத்தான். தம்பிமார்களும் நகரமக்களும் எதிர்கொள்ளத் தன் நகரத்திற் சென்று, 'தாய் முதலியோரை வணங்கி, சில நாள் அங்கே தங்கியிருந்தான். பின்பு தம்பிமார் அமைச்சர் முதலியோருடன் தில்லைக்குப் புறப்பட்டு, வழியில் அந்தர்வேதியை அடைந்து அங்கிருந்த தில்லை மூவாயிரவரையும் தேர்களில் ஏற்றிக்கொண்டு தில்லை வனத்தினை அடைந்தான். அவனுடன் வந்த அந்தணர்கள் தாங்கள் ஏறி வந்த தேர்களைக் கனகசபையின் வடமேற்குப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டு இறங்கினர். மூவாயிரவரும் வியாக்கிரபாத முனிவர்க்குத் தங்களை எண்ணிக் காட்டிய பொழுது அவருள் ஒருவரைக் கானவில்லை. அந்நிலையில் இரவனியவன்மன் திகைத்து நின்றான். அப்பொழுது அங்குள்ள எல்லாரும் கேட்கும்படி, 'இவ் அந்தணர்கள் எல்லோரும் நம்மை ஒப்பாவர்; நாம் இவர்களில் ஒருவர்' என்றதொரு அருள்மொழி
தில்லையம்பலவாணர் திருவருளால் தோன்றியது. அது கேட்ட அந்தணர்கள் அச்சமும் நடுக்கமும் உடையவராய் தங்களுக்குள்ளே, ஒருவர் ஒருவரை வணங்கி எழுந்து பொன்னம்பலத்தை வலம் வந்து 'கூத்தப்பெருமானைப் போற்றி அம்பலத்தைச் சூழ இருந்தார்கள். உத்திரவேதியில் திகழ்ந்த வேள்விக்குச் சென்றிருந்த மூவாயிரவரும், கனகசபையின் வடமேற்குப் பகுதியில் தேரை நிறுத்தி இறங்கினர். இத்தலபுராணச் செய்தியை நினைவு கூறும் முறையில் பாண்டிய நாயகத்தூண்களில் தேர்கள் செதுக்கப் பெற்றுள்ளமை காணலாம். இரணியவன்மன் தில்லையின் கிழக்குத்திசையிலே 'கொற்றவன் குடி' என ஒரு நகரம் செய்வித்து அங்கிருந்தான். அங்கு அரசு வீற்றிருந்தான்.தில்லையில் எல்லோரும் இறைவனது திருக்கூத்துத் தரிசனம் செய்து கொண்டிருக்கும் நாளில் வியாக்கிரபாத முனிவர் "இரணியவன்மன் இந்நாட்டினை ஆளக்கடவன்: இவன் தம்பிமார் கௌட தேசத்தை ஆளக்கடவர்" என்றார். அதுகேட்டு மகிழ்ந்த பதஞ்சலி முனிவரும் வசிட்ட முனிவரும் ஏனைய முனிவர்களும் அப்படியேயாகுக' என்றனர். வியாக்கிரபாதர் இரணியவன்மனுக்குத் திருமணம் செய்வித்து முடிசூட்டிப் புலிக் கொடி கொடுத்துச் சோழ மன்னனாகச் செய்தார். இரணியவன்மனுடைய தம்பிமார் விடைபெற்றுக்கொண்டு நால்வகைச் சேனைகள் சூழச்சென்று கௌட தேசத்தை அடைந்து அந்நாட்டினை ஆட்சி புரிந்தனர். இரணியவன்மன் வியாக்கிரபாத முனிவர் பணித்த வண்ணம் கூத்தப் பெருமானுக்குத் திருவம்பலமும், திருமூலட்டானேசுரர்க்குத் திருக்கோயிலும் பிற திருப்பணிகளும் செய்து நாள் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்கும் வேண்டிய நிபந்தங்களைச் செய்தனன். இத்தொன்மை வரலாறு உமாபதி சிவாசாரியார் பாடிய கோயிற் புராணத்தில் விரித்துக் கூறப்பெற்றுள்ளது.
கண்ணபிரானுக்குச் சிவ தீக்கை செய்த உபமன்யு முனிவரும் தில்லைக்கு வந்து கூத்தப் பெருமானது திருநடனத்தைக் கண்டு வணங்கி நல்வாழ்வு பெற்றார். சாமவேதத் தலைவர்களுள் ஒருவராகிய சைமினி முனிவர் என்பவர் வேதம் ஒருவராற் செய்யப்படாது சுயம்புவாயுள்ளது. அது கரும காண்டம் ஞான காண்டம் என்னும் இருபகுதிகளையுடையது. இவ்விரு பகுதிகளுள் கருமகாண்டம் ஒன்றினையே பிரமாணமாகக் கொண்டு வேத வேள்விகளாகிய கிரியைகளையே வற்புறுத்தி மீமாஞ்சக நூலை இயற்றியவர் சைமினி முனிவர். வேதம் எல்லாம் விதி, புனைந்துரை, மந்திரம், குறியீடு என நால்வகையுள் அடங்கும். இந்நான்கினுள் விதிவாக்கியங்களே பிரமாணமாகக் கொள்ளப்படும். வேதத்துள் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமே செய்யத்தக்கன. உயிர்களுக்கு வேறாகக் கடவுள் என்பதொரு பொருளில்லை. காணப்படும் உலகமே மெய்ப்பொருள் என்பன மீமாஞ்சை நூலிற் கூறப்படும் பொருள்களாகும். சிவபெருமான் பிட்சாடனராகவும் திருமால் மோகினியாகவும் சென்று ஆட்கொள்வதற்கு முன் தாருகா வனத்து முனிவர்கள் இந்த மீமாஞ்சை மதத்தையே மேற்கொண்டு ஒழுகினர் என்பதும், தாங்கள் செய்த அபிசார வேள்வியால் அழிவுறாது சிவபெருமான் நிகழ்த்தியருளிய தாண்டவத்தினைக் கண்டு உள்ளந்திருந்தி இறைவனைவழி பட்டுய்தி பெற்றனர் என்பதும் முன்னர்க்கூறப்பட்டன. மீமாஞ்சை நூல் செய்த சைமினி முனிவர் தமது கொள்கை தவறுடையதென்றுணர்ந்து இச்சிதம்பரத்திலே வந்து தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வேத பாதஸ்தவம் என்ற பனுவலால் இறைவனைத் துதித்துப் போற்றினர். ஸ்தலம்- தோத்திரம்- வேதபாதம்- வேதத்தினடி முதல் மூன்றடிகள் தமது வாக்காகவும் நான்காமடி வேதத் தொடராகவும் அமைய சைமினி முனிவராலே செய்யப்பெற்ற தோத்திரமாதலின் இந்நூல் வேதபாதஸ்தவம் என்னும் பெயருடைய தாயிற்று.