தில்லைப் பெருங்கோயில் வரலாறு/மூர்த்தியும் தீர்த்தமும்

3. மூர்த்தியும் தீர்த்தமும்

எல்லாம் வல்ல இறைவன் ஆன்மாக்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் பெருங்கருணைத் திறத்தால் அன்பர்கள் தம் உள்ளத்து எண்ணிய பலவேறு திருவுருவங்களாகிய மூர்த்தியாகவும், அம்மூர்த்தி கோயில் கொண்டெழுந்தருளிய திருத்தலங்களாகவும், அங்கு வழிபடவரும் அன்பர்களின் அகத்தையும் புறத்தையும் தூய்மை செய்யும் தீர்த்தங்களாகவும் திகழ்கின்றான் என்பது நம் முன்னோர் தம் வாழ்வியலிற் கண்டுணர்ந்த பேருண்மையாகும். சிவநெறிச் செல்வர்களாற் கோயில் எனச் சிறப்பித்தும் போற்றப்பெறும் பெரும் பற்றப்புலியூராகிய தில்லைப்பதி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முத்திறத்தாலும் சிறந்து விளங்குகின்றது. இவ்வுண்மையினை,

"தீர்த்த மென்பது சிவகங் கையே
ஏத்த குந்தலம் எழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே"

(சிதம்பரச்செய்யுட்

கோவை)


எனவரும் பாடலிற் குமரகுருபர அடிகளார் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.

தில்லைப் பெருங் கோயிலில் பழமையான மூர்த்தி அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்க உருவில் எழுந்தருளிய திரு மூலட்டானேச்சுரர். பாதாளத்திலிருந்து தோன்றிய மலையின் கொழுந்தாக முளைத்தெழுந்த மூர்த்தி இச்சிவலிங்கத் திருவுருவமாகும். மத்தியந்தன முனிவருடைய மைந்தராகிய வியாக்கிரபாதர் தில்லை வனத்திற்கு வந்து சிவலிங்கப் பெருமானைத் தமது பெரும் பற்றாகக் கொண்டு வழிபாடு செய்தார். அது பற்றியே இத்தலம் பெரும்பற்றப்புலியூரெனவும், இங்கு எழுந்தருளிய சிவலிங்கத் திருமேனியின் சந்நிதி திருமூலட்டானம் எனவும். வழங்கப் பெறுவன ஆயின. கண்களால் காண இயலாத இறைவனது அருவத்திருமேனிக்கும் கண்களாற் காணக்கூடிய உருவத்திருமேனிக்கும் மூலகாரணமாய்த் திகழ்வது அருவுருவமாகிய இச் சிவலிங்கத் திருமேனியே. இந்நுட்பம்,

"காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்"

(பெரிய சாக்கிய:)

எனவரும் சேக்கிழார் நாயனார் வாய் மொழியால் நன்கு புலனாகும். இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் தன்னை அன்பினால் வழிபடும் அடியார்கள் எல்லோர்க்கும் அவரவர் நினைந்த உருவில் தோன்றி அருளும் எல்லாத் திருவுருவங்களுக்கும் மூலமாய்த் திகழ்வது சிவலிங்கத் திருமேனியேயாதலால், ஒங்வொரு திருக்கோயிவிலும் சிவலிங்கத்திருவுருவம் அமைந்த கருவறை மூலஸ்தானம் என வழங்கப்பெறுவதாயிற்று. மூலஸ்தானம். என்னும் வடசொற்றொடர் தமிழொலிக்கேற்ப, மூலட்டானம் எனத் திரிந்து திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருமூலட்டானம் என வழங்கப்பெறுவதாயிற்று. திருமுறை ஆசிரியர்களால் பரவிப் போற்றப் பெற்று எல்லாத் திருத்தலங்களிலும் இறைவன் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத் திருவுருடேனேயே எழுந்தருளியிருக்கக் காண்கின்றோம் ஆயினும் தில்லைவனமாகிய பெரும்பற்றப்புலியூரிலும் திருவாரூரிலும் உள்ள சிவலிங்கப் பெருமான் சந்நிதிகள் இரண்டினை மட்டும் திருமூலட்டானம் என்றபெயரால் வழங்கி வருகின்றோம்.

"பெரும்பற்றப்புலியூர் திருமூலட்டானத்தார்” எனவும்,

"திருவாரூரில் திருமூலட்டானத்தெஞ் செல்வன் தானே" (6-30-1-10)

எனவும் திருநாவுக்கரசர் சிறப்பித்துப் போற்றியுள்ளமையால் இவ்வழக்கின் தொன்மை புலனாகும்.

சிவத்தலங்கள் எல்லாவற்றிலும் தாவரம் (நிலைத்த திருவுருவம்) ஆகச் சிவலிங்கமும், திருவீதிக்கு எழுந்தருளும் திருமேனியாகச் சோமாஸ்கந்தர் சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களும் வழிபாடு செய்யப்பெற்று வருவதனைக் காண்கின்றோம். இங்குக் கூறப்பெற்ற எழுந்தருளும் திருமேனிகள் அனைத்தும் தாவரம் என மேற்சொல்லப்பட்ட சிவலிங்கத் திருமேனியின் திருவுலாத் திருவுருவங்களாகவே அடங்குவன. தில்லைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள, கூத்தப் பெருமான் திருமேனியும் திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தியாகராசப் பெருமான் திருமேனியும் அங்குள்ள சிவலிங்கத் திருமேனியையொத்து மூலட்டான அமைப்பில் அமைந்தனவாகவே போற்றப்பெறுவனவாகும். சைவ, சமய ஆசிரியர்கள் நால்வரும் தில்லைத் திருமூலட்டானப் பெருமானைப் போற்றிப் பரவும் முறையில் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் முன்னே நின்று செந்தமிழ்ப்பனுவல்களால் பரவிப் போற்றியுள்ளார்கள். "சிற்றம்பலமேய முற்றாவெண்டிங்கள் முதல்வன் பாதமே, பற்றா நின்றாரைப் பற்றா பாவமே” எனத் திருஞானசம்பந்தரும்,

"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே" (4-81-4)


எனத் திருநாவுக்கரசரும், "புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே" எனச் சுந்தரரும் 'தென்பாலு கந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்' என மணிவாசகப் பெருமானும், தில்லைச் சிற்றம்பவத்தில் ஆடல்புரியும் அம்பலவாணர் திருவுருவத்தினையே சிறப்பாகப் பாடிப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறே, திருவாரூரில் திருமூலட்டானத்தில் எழுந்தருளிய புற்றிடங்கொண்ட பெருமானைப் பரவிப்போற்றிய சுந்தரர், "வீதிவிடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்" (பெரிய தடுத்தாட்-129) எனச் சேக்கிழாரடிகள் கூறுவதாலும், திருநாவுக்கரசர் அருளிய 'முத்து விதானம் மணிப் பொற் கவரி' எனத்தொடங்கும் திரு ஆதிரைத் திருப்பதிகத்தில் வீதி விடங்கப் பெருமானாகிய தியாகராசப்பெருமான் அடியார் புடைசூழத் திருவீதிக்கெழுந்தருளும் திருவுலாக்காட்சியைப் பரவிப் போற்றியிருத்தலாலும், திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமான் எழுந்தருளிய திருமூலட்டானம் என்னும் சந்நிதியைப் போலவே தியாகராசப் பெருமான் எழுந்தருளிய சந்நிதியும் முதன்மையுடையதாகப் போற்றப் பெற்று வந்தமை புலனாகும். ஆசுவே தில்லை, திருவாரூர் ஆகிய இவ்விரு தலங்களிலுமுள்ள சிறப்புடைய சந்நிதிகளாகவுள்ள இவற்றைக் குறிப்பிற் புலப்படுத்தும் வகையில் இங்குள்ள மூலத்தானமுடையார் சந்நிதி 'பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானம்' எனவும், திருவாரூர்த் திருமூலட்டானம் எனவும், இனமுள்ள அடைமொழி கொடுத்து வழங்கப் பெறுவதாயிற்று.

தில்லைப் பெரும்பற்றப்புலியூரில் எல்லாம்வல்ல சிவபெருமான் பதஞ்சலியும் புலிமுனியும் வேண்டிக் கொண்ட வண்ணம் தில்லைப் பொன்னம்பலத்திலே சிவகாமியம்மை கண்டுகளிக்க வானோர்கள் போற்ற ஆனந்தத் திருக்கூத்து ஆடியருள்கின்றார். இத்தெய்வக்காட்சியினை,

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனை கழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி,
வருமானத் திரள் தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணித்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா னமர்ந்து காண
அமரர்கணம் முடி வணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

என வரும் திருப்பாடலில் திருநாவுக்கரசர் சொல்லோவியஞ் செய்து காட்டியுள்ளார்.

எல்லாம் வல்ல இறைவனைக் கூத்தப்பெருமான் திருவுருவில் வைத்து வழிபடும் முறை எக்காலத்தில் தோன்றியது என்பது இங்குச் சிந்தித்தற்கு உரியதாகும். மொகஞ்சதரோ, அரப்பா என்ற இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள சிவலிங்கம் முதலிய தெய்வ உருவங்களின் ஆண்சிலையொன்று இடதுகாலைத் தூக்கி வலதுகாலை யூன்றி நின்று நடம்புரியும் நிலையில் காணப்பெறுகின்றது. இதனைச் சிவபெருமானுக்குரிய திருவுருவங்களில் ஒன்றாகிய நடராசர் - திருவுருவத்தின் பழைய உருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர். சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களையெல்லாம் படைத்தும், காத்தும் ஒடுக்கியும் ஆடவல்ல கூத்தப்பெருமானாகத் திகழ்கின்றான் என்பதும், அம்முதல்வனது ஆடலாலே உலகவுயிர்கள் இயங்குகின்றன என்பதும், அவன் ஆடியருளும் திருக்கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிர்களுக்கு நலஞ்செய்பவள் அவனிற்பிரியாத திருவருட்சத்தியாகிய உமையம்மையென்பதும், சைவ நூல்களின் துணிபாகும். இவ்வாறு உமையம்மை காண ஆடல்புரியும் இறைவனை முன்னிலையாக்கிப்பரவிப் போற்றுவதாக அமைந்தது 'ஆற்றி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து' எனத் தொடங்கும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

முனிவர்களுக்கு அருமறைகளை அருளிச்செய்து பெருகிவரும் கங்கைவெள்ளத்தைத் தன் சடையில் ஏற்று முப்புரத்திலே தீயைச் செலுத்தி வாக்கு மனங்கடந்து நிற்கும் நீலமணிபோலும் மிடற்றினையுடைய இறைவன், தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பலவடிவுகளையும் மீண்டும் தன்னிடத்தே ஒடுக்கிக்கொண்டு உமையம்மையார் சீர் என்னும் தாள முடிவினைத் தர, கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடியருளினான் எனவும், அவன் முப்புரங்களை வென்று அந்த வன்மையினாலே முப்புரத்து அவுணர்கள் வெந்து வீழ்ந்த சாம்பராகிய நீற்றினை அணிந்து கொண்டு பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடியபொழுது பராசக்தியாகிய, அம்மை இடை நிகழும் தூக்கு என்னும் தாளத்தைத் தருவாள் எனவும், கொலைத் தொழிலையுடைய புலியைக் கொன்று அதன் தோலையுடுத்து, கொன்றைப்பூமாலை தோளிலே புரண்டசைய அயனுடைய தலையினை அகங்கையிலே ஏந்திச்சிவபெருமான் காபாலம் என்னும் கூத்தினை ஆடியருளிய பொழுது மலைமகளாகிய உமையம்மையார் தாளத்தின் முதலெடுப்பாகிய பாணியைத் தருவாள் எனவும், இவ்வாறு தாளத்தின் தொடங்கும் காலமாகிய பாணியும் இடை நிகழுங்காலமாகிய தூக்கும் முடியுங்காலமாகிய சீரும் ஆகிய தாளக் கூறு பாட்டை உமாதேவியார் உடனிருந்து காப்ப, எல்லாம் வல்ல இறைவன் மன்னுயிர்கள் உய்திபெற ஆடல்புரிகின்றான் எனவும் மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலில் நல்லந்துவனார் என்னும் புலவர் இறைவன் ஆடிய கொடு கொட்டி பாண்டரங்கம் காபாலம் என்னும் மூவகைக் கூத்துக்களையும் முறையே விளக்கிக் கூறியுள்ளார். வாக்கால் கூறப்படாமல் மனத்தால் குறித்த எவ்வகைப் பொருட்கும் எட்டாமல் சொல்லின் வரம்பையும் பொருளின் எல்லையையும் கடந்து நின்ற இறைவன், தன்னை அன்பினால் வழிபடுவோரது உள்ளத்தின்கண் எண்தோள் வீசி நின்று ஆடும் பிரானாகத் தோன்றி அருள்புரிகின்றான் என்பது இக்கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடலால் உணர்த்தப் பெறும் உண்மையாகும். இப் பாடலில் குறிக்கப்பெற்ற மூவகைக் கூத்துக்களுள் கொடு கொட்டி என்பது, இறைவன் எல்லா உலகங்களையும் அழித்து நின்று ஆடுதலின் கொடுங் கொட்டி என்னும் பெயருடையதாயிற்று. எல்லாத்தேவரினும் உயர்ந்தவராகிய மகாதேவன் என்னும் இறைவன் அவுணரது முப்புரங்களைத் தீயூட்டி வெற்றிக் களிப்பால் கை கொட்டி நின்று ஆடியது கொடு கொட்டி என்னும் ஆடலாகும். “திரிபுரம் தீமடுத்து எரியக் கண்டு இரங்காது நின்று கைகொட்டி ஆடுதலின் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்" என்பர் அடியார்க்கு நல்லார். இக்கூத்தினைப் சேரநாட்டிற் பறையூர் என்னும் ஊரில் வாழ்ந்த கூத்தச் சாக்கையன் என்பான் சேரன் செங்குட்டுவன் முன் ஆடிக்காட்டினான் என்ற செய்தியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் நடுகற் காதையில் விளக்கியுள்ளார். தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி இறைவன் வெண்ணீற்றையணிந்து ஆடியது பாண்டரங்கம் என்னும் கூத்தாகும். முப்புரங்களை வென்று அந்தவலியாலே முப்புரத்து அவுணர்கள் வெந்துவீழ்ந்த வெண்ணீற்றை (சாம்பலை} அணிந்து இறைவன் ஆடுதலினாலே இக்கூத்து பாண்டரங்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனவும், பாண்டரங்கம் என்பதே பண்டரங்கம் எனத் திரிந்தது எனவும் கருதுவர் நச்சினார்க்கினியர், பாண்டரம் வெண்மை; இங்கு வெண்ணீற்றைக் குறித்தது. வெண்மை வாய்ந்த திருநீற்றை யணிந்து ஆடுதலால் பாண்டரங்கம் என்னும் பெயருடையதாயிற்று. திருவெண்ணீறு பராசக்தியின் வடிவமாம் என்பது, ‘பராவணமாவது நீறு' என வரும் சம்பந்தர் வாக்கால் புலனாகும்.

காபாலம் என்பது சிவபெருமான் பிரமனது தலையைக் கிள்ளி அகங்கையில் ஏந்தி ஆடிய கூத்தாகும். அயனது, மண்டை ஓடாகிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஆடுதலின் இது காபாலம் என்னும் பெயர்த்தாயிற்று. இம்மூன்று கூத்துக்களும் இறைவன் அழித்தற்றொழிலை, நிகழ்த்துங்காலத்தில் ஆடப் பெறுவனவாகும். இச்செய்தி,


"பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி யாடுங்கால்"
“மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால்"
"தலை அங்கை கொண்டு நீகாபாலம் ஆடுங்கால்" என

வரும் கலித்தொகைத் தொடர்களாலும், அழித்தற்றொழிலை நிகழ்த்துகின்ற காலங்களிலே பாணியும் தூக்கும் சீரும் என்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப்பட்ட அணியினையுடைய உமாதேவி காப்ப ஆடி" என வரும் நச்சினார்க்கினியர் உரையாலும் நன்கு புலனாகும்.

ஆடல்மகளாகிய மாதவி, சிவபெருமான் முதலிய தெய்வங்களால் நிகழ்த்தப்பெற்ற கொடுகொட்டி முதலிய பதினொரு ஆடல்களையும், ஆடிக்காட்டிய செய்தியினைச் சிலப்பதிகாரம் கடலாடுகாதையில் இளங்கோவடிகள் குறித்துள்ளார். தெய்வங்களின் ஆடல்களாக அமைந்த பதினொரு ஆடல்களில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டியும் பாண்டரங்கமும் இடம்பெற்றிருத்தல் காணலாம்.

தன் அருள் வழி நில்லாதவர்களை அச்சுறுத்திப் பின்னர் அடிமை கொள்ளும் முறையில் இறைவன் இயற்றியருளும் திருக் கூத்துக்களும், அன்புடைய அடியார்களுக்கு அமைதி நல்கும் முறையில் ஆடும் திருக்கூத்துக்களும் என இறைவன் ஆடியருளும் தாண்டவத்தினை இருவகையாகப் பகுத்துரைக்கலாம். தேவதாரு வனத்து முனிவர்கள் மீமாம்சை நூலை, உண்மை நூலெனக் கொண்ட மயக்கத்தினாலே வேதம் விதித்த கரும காண்டம் ஞான காண்டம் என்னும் இரண்டினுள் கரும காண்டத்தையே மேற்கொண்டு ஞான காண்டத்தை ஒதுக்கிவிட்டுக் கருமங்களை மட்டும் செய்து, தம் மனைவியர்களுக்கும் அக்கொள்கையைப் போதித்து, கடவுள் வழிபாட்டை இகழ்ந்திருந்தனர் என்பதும் அவர்களைத் திருத்துதற்பொருட்டே சிலபெருமான் பிச்சைக் கோலத்தையுடையராய், திருமாலை அழகிய பெண்னுருவில் தம்முடன் அழைத்துச் சென்று அம்முனிவர்களது தவத்திண்மையினையும், அம் முனிவர் மனைவியரது கற்பின் திண்மையினையும், நிலை கலங்கச் செய்தனர். அந்நிலையிலே அம்முனிவர்கள் வெகுண்டு ஆபிசார வேள்வியைச் செய்து அவ் வேள்வியினின்றும் புலி பாம்பு பூதங்கள் தீ முயலகன், மந்திரங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்க ஏவிய போது சிவபெருமான் அவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டு ஆடல் செய்யத்தொடங்கினார். அவ்வாடலைக்காணப்பெறாது அஞ்சிய முனிவர்கள், தம் பிழையினைப்பொறுத்துக் கொள்ளும்படி இறைவனைப் பணிந்து வேண்டினார். அந்நிலையில் சிவபெருமான் உமாதேவியும் திருமாலும் கண்டு மகிழ ஐந்தொழில் திருக்கூத்தாகிய ஆனந்தத் தாண்டலத்தை ஆடியருளினார் என்பதும், உலகில் மன்னுயிர்கள் அமைதியடைய ஆடிய அவ்வானந்தத் திருக்கூத்தினையே பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் வேண்டிக் கொண்டபடி, தில்லைச்சிற்றம்பலத்திலே ஆடியருளினார் என்பதும் முன்னர்க்கூறப்பெற்றன. இத்தாண்டவங்களுள் படைத்தற் றொழிலை நிகழ்த்தும் காளிகாதாண்டவம் திருநெல்வேலி தாமிர சபையிலும், காத்தற்றொழிலை நிகழ்த்தும் கவுரிதாண்டவம் திருப்புத்தூர்ச் சிற்சபையிலும், சந்தியா தாண்டவம், மதுரை வெள்ளியம் பலத்திலும் அழித்தற் தொழிலை நிகழ்த்தும் சம்கார தாண்டவம் உலகமெல்லாம் ஒடுங்கிய ஊழிக்காலமாகிய நள்ளிரவிலும், மறைத்தற்றொழிலை நிகழ்த்தும் திரிபுர தாண்டவம் திருக்குற்றாலச் சித்திரசபையிலும், அருளல் தொழிலை திகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும், மேற்கூறிய ஐந்தொழில்களையும் ஒருங்கே நிகழ்த்தும் ஆனந்தத் தாண்டவம் தில்லைச்சிற்றம்பலத்திலும் நிகழும் எனத் திருப்புத்தூர்ப் புராணம் கூறும்.

தில்லையில் கூத்தப்பெருமானை வழிபாடு செய்யும் மூவாயிரவராகிய தில்லைவாழந்தணர் என்னும் தொகையடியார்களைப்பற்றிய வரலாறு கூறுவது பெரியபுராணத்திலுள்ள தில்லைவாழந்தணர் புராணமாகும். இப்புராணத் தொடக்கத்திலே அமைந்த முதலிரண்டு பாடல்கள் தில்லைச்சிற்றம்பலத்தைப் போற்றிப் பரவுவன.

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

எனவரும் முதற்பாடல், உலகங்களையெல்லாம் தோற்றுவித்து நிலைபெறச்செய்து பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் நிலையில் உயிர்க்குயிராய் எல்லாப் பொருள்களோடும் கலந்து நின்றருளும் இறைவன் சிவகாமியம்மை கண்டு மகிழ ஆனந்தத்திருக்கூத்து ஆடியருளும் உருவத்திருமேனியைப் போற்றும் முறையில் அமைந்ததாகும்.

கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி”

எனவரும் பாடல் அருமறைச் சிரத்தின் மேலாம் ஞானவெளியிலே கற்பனைக்கெட்டாத சோதிப்பொருளாய்த் திருநடம்புரிந்தருளும் இறைவனது அருவநிலையினைக் குறிப்பதாகும். தில்லைச்சிற்றம்பலத்திலே சிவகாமியம்மை காண ஆடியருளும் நடராசப்பெருமான் திருவுருவம், அம் முதல்வனது உருவத் திருமேனியையும், நடராசர்க்கு அருகே மேற்குப்பக்கத்திலுள்ள திருவம்பலச் சக்கரமாகிய சிதம்பர ரகசியம் இறைவனது அருவத் திருமேனியையும் குறிப்பனவாகும். பொன்னம்பலத்திலே நாள் தோறும் ஆறு காலங்களிலும் திருமஞ்சனப் பூசை கொண்டு அருளுகிற சந்திரமௌளீஸ்வரராகிய படிகலிங்கம் இறைவனது அருவுருவத் திருமேனியையும் குறிப்பதாகும். ஆகவே தில்லைச் சிற்றம்பலத்தே உருவம், அருவம், அருவுருவம் என மூவகைத் திருமேனிகளாக இறைவன் அமர்ந்திருந்து, அன்பர்களது வழி பாட்டினையேற்று அருள் புரிகின்றான் என்பர் பெரியோர். தில்லைவாழந்தணருள் ஒருவரும் சைவசமய சந்தான ஆசாரியருள் நான்காமவரும். ஆகிய உமாபதி சிவாசாரியார் தாமியற்றிய கோயிற் புராணத்தில்,

"ஓங்கும்ஒளி வெளியேநின்று உலகுதொழ நடமாடும்
தேங்கமழும் பொழில்தில்லைத் திருச்சிற்றம் பலம் போற்றி"

எனவும், :"காரணங் கற்பனை கடந்த கருணைதிரு வுருவாகிப்

பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூர்சேர்
சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம்பலம் போற்றி"

எனவும்,

"சிற்பரமாம் அம்பரமாம் திருச்சிற்றம்பலம் போற்றி"

எனவும் இறைவனுக்குரிய அருவுருத்திருமேனி, உருவத்திருமேனி, அருவத்திருமேனி ஆகிய மூவகைத் திருமேனிகளையும் முறையே போற்றியுள்ளார்.

இங்கு எடுத்துக்காட்டிய மூன்று பாடற்றொடர்களும் தில்லைச்சிற்றம்பலத்தில் நாள்தோறும் நிகழ்ந்து வரும் வழிபாட்டு முறையினை நன்கு புலப்படுத்துவனவாகும்.

வளமார்ந்த தில்லைச்சிற்றம்பலத்தில் இறைவன் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக்கூத்து உலக வாழ்க்கையில் மக்களுக்கு நேரும் அச்சத்தை அகற்றி ஆனந்தம் நல்குதற் பொருட்டே நிகழ்வது எனவும், இத்திருக்கூத்து நிகழாதாயின் உலகில் கொடியோர்களால் பேரிடர் விளையும் எனவும், அவ்விடையூறுகளை விலக்குதற் பொருட்டுக் கோர சத்தியாகிய காளியின் கொடுங்கூத்து நிகழவேண்டிய இன்றியமையாமை நேரும் எனவும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது.

தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு சட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.

- திருச்சாழல்-14)

என வரும் திருவாசகம் ஆகும்.

முன்பொரு காலத்தில் தாருகன் என்னும் அவுணனைக் கொல்லுதற் பொருட்டுத் துர்க்கையால் ஏவப்பட்ட காளி, அவனோடு போர் செய்து அவனது உடம்பைப் பிளந்த பொழுது, கீழே சிந்திய இரத்தத்திலிருந்து பின்னும் பல அவுணர்கள் தோன்றினர். அது கண்டு, அவனது உடம்பின் இரத்தம் கீழே சிந்தாதபடி அதனை முற்றும் பருகினாள். அதனால் இரத்த வெறி பிடித்த காளி உலக உயிர்களை எல்லாம் அழிக்கத் தொடங்கினாள். அந்நிலையில் எவ்வுயிர்க்குந் தந்தை ஆகிய இறைவன், அவள் முன்னே தோன்றிக் கொடுங்கூத்து இயற்றினான். அக்கூத்தின கடுமையைக் காணப்பெறாத காளி தனது வெறியடங்கி இறைவன் அருளைப் பெற்று அமைதியுற்றாள் என்பது புராண வரலாறாகும். இச் செய்தியினை,

“வென்றிமிகு தாரகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஒவ
நின்று நடம் ஆடியிடம் நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே”

எனவரும் பாடலில் ஞானசம்பந்தப் பிள்ளையாரும்;

"ஆடினார் காளி காண ஆலங்காட் டடிகளாரே" (4--68-8)

எனத் திருநாவுக்கரசரும் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறு காளியின் இரத்தவெறி தணிய இறைவன் ஆடிய திருக்கூத்து திருவாலங்காட்டில் மட்டுமன்றித் தில்லையிலும் நிகழ்ந்துள்ளது.

தில்லைவன முடையாளாகிய காளி, அவுணரை அழித்த பின்பும் கோபம் தணியாது மன்னுயிர்களை அழிக்கத் தொடங்கவே தில்லைச்சிற்றம்பலப்பெருமான், ஊர்த்துவ தாண்டம் செய்து, காளியின் சினத்தை அடக்கி நீ தில்லையின் வட எல்லையிலே அமர்ந்திருப்பாயாக, என ஆணை தந்தனர் எனவும், ஆடலில் தோற்று நாணிய தில்லைவன முடையாளாகிய காளி இறைவன் பணித்தவாறே தில்லையின் வட வெல்லையிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாள் எனவும், தில்லைக் காளியைக் குறித்துப் புராண வரலாறு ஒன்று வழங்கி வருகின்றது. இவ்வரலாறு மாணிக்கவாசகர் காலத்திற்கு முன்பிருந்தே வழங்கும் தொன்மையுடையது என்பது, 'தேன் புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்' என முன் எடுத்து காட்டிய திருச்சாழற் பாடலாலும்,

“எழில் பெறும் இமயத்து இயல்புடை அம்பொற்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்
கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கிளி தருளினள்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே."


என வரும் கீர்த்தித் திரு அகவல் பகுதியாலும் நன்கு விளங்கும். தில்லையைப் பற்றிய இப்புராணச் செய்தியைப் புலப்படுத்தும் நிலையில் தில்லைப் பொன்னம்பலத்தில் தென்புறத்திலமைந்த நிருத்த சபையில் காளி காண ஆடிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்.

எல்லாம்வல்ல இறைவன் மக்களது அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்தி நலம் புரியும் தீர்த்த வடிவாகத் திகழ்கின்றான் என்பதனை, ஆர்த்தபிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்' என வரும் திருவெம்பாலைத் தொடரால் திருவாதவூரடிகளும், 'சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே' - ( 6-78-1} எனவரும் திருத்தாண்டகத் தொடரால் திருநாவுக்கரசரும் அறிவுறுத்தியுள்ளனர். அம்முறையில் தங்கண் மூழ்கு வாரது மனமாசினையும் உடற்பிணியையும் அறவே நீக்கி வீடுபேற்று இன்பத்தினை வழங்கும் தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களாகச் சிவகங்கை முதலிய பத்துத் தீர்த்தங்கள் தில்லைப் பெருங்கோயிலைச் சூழ அமைந்துள்ளன. அவையாவன

1. சிவகங்கை:- 'தீர்த்தமென்பது சிவகங்கையே' எனக் குமரகுருபர சுவாமிகளால் போற்றப்பெற்ற இத்தீர்த்தம், தென்புறத்தில் திருமூலட்டானக் கோயிலையும், மேற்புறத்தில், நூற்றுக் கால் மண்டபம், சிவகாமியம்மை திருக்கோயிலையும் வடபுறத்தில் நவலிங்கத் திருக்கோயிலையும், கீழ்ப்புறத்தில் ஆயிரக்கால் மண்டபத்தையும் எல்லையாகக் கொண்டு அவற்றிடையே அமைத்துள்ள தடாகமாகும். உடற்பிணியால் வருந்திய சிங்கவர்மன் என்ற வேந்தன் இச்சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி உடற்பிணி நீங்கிப் பொன்னிறம் பெற்று இரணியவர்மன் ஆயினமை, இத்தீர்த்தத்தின் சிறப்பினை நன்கு புலப்படுத்துவதாகும்.

சிவகங்கைத் தீர்த்தத்தின் நாற்புறமும் அமைக்கப் பெற்ற மண்டபங்களும் கற்படிகளும் சோழமன்னர் காலத்துத் திருப்பணிகளாகும். சிவகங்கை மண்டப உட்சுவர்களிலே பளிங்குக் கற்களைப் பதித்துத் திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் ஆகிய எட்டாந் திருமுறை முழுவதனையும் கல்வெட்டில் வரையச் செய்து பொருத்தியவர் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் காசிவாசி தவத்திரு அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவர்.

2. கும்ப தீர்த்தம்: இது தில்லைப்பதிக்கு வடகிழக்கே, வெள்ளாறு கடலொடு கலக்குமிடத்தில் அமைந்த கடற்றுறையாகும் ஓர் அசுரனைப் போரில் வெல்லும் உபாயத்தினைக் கற்பிக்கும்படி தேவ குருவானவர் வருண்னிடத்திலே இருட் பொழுதிலே வந்தார். வருணன் அவரைத் தவறாகப் பகைவன் என நினைத்து அவர்மேல் பாசத்தை விடுத்தான். அதனால் குரு இறந்தார். அக்கொலைப்பாவம் காரணமாக ஒரு பிசாசு வடிவம் தோன்றி இரண்டு கால்களிலும் இருகைகளிலும் பொருந்தக் கழுத்தொடு கூடும்படி அவனைக் கட்டிக் கடலில் வீழ்த்தியது, நெடுநாள் கடலிடையே வருந்திக் கிடந்த வருணலுக்குச் சிவபெருமான் மாசிமகத்தில் வெளிப்பட்டு அவனது பாசக்கட்டு அற்றுப்போம்படி அருள் புரிந்தார். அதனால் அக்கடற்றுறை பாசமறுத்த துறை எனப் பெயர் பெற்றது. அத்துறையிலே மாசிமகத்திலே நீராடுபவர்கள் பாசம் நீங்கி முத்தியடையும்படி வருணன் சிவபெருமானிடத்தே வரம் பெற்றான். மகாபாதகனாகிய துர்க்கடன் என்னும் வணிகன் படகில் ஏறிக்கொண்டு மாசிமக நாளில் பாசமறுத்த துறைத்தே வரும் பொழுது படகுடன் தாழ்ந்து முத்திபெற்றான் எனப் புராணம் கூறும்.

3. புலிமடு:- இது தில்லைப் பெருங் கோயிலின் தென் திசையில் அமைந்துள்ள நீர் நிலையாகும். புலிக்கால் முனிவர்க்குத் தந்தையாகிய மத்தியந்தன முனிவர் வழிபட்ட மத்தியந்தனேசுரம் என்னும் திருக்கோயில் இம்மடுவின் மேற்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில், கல்வெட்டுக்களில் சுடலை யமர்ந்தார் கோயில் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயிலின் எதிரே அமைந்த புலிமடுவில் இறந்தோர் நற்கதி அடைதற் பொருட்டு அவர்தம் எலும்பினை இடுதல் நெடுநாளைய மரபாக நிலை பெற்று வருகிறது. இங்கு இடப்படும் எலும்பு கரைந்து போதல் பலரும் அறிந்த செய்தி.

4. வியாக்கிரபாதத் தீர்த்தம்:- இது தில்லைப் பெருங் கோயிலின் மேற்றிசையில் வியாக்கிரபாத முனிவர் தம் ஆன்மார்த்தமாகக் கொண்டு வழிபாடு செய்த திருப்புலீச்சுரர் திருக்கோயிலுக்கு எதிரே அமைந்த தீர்த்தமாகும். திருத்தொண்டத்தொகை அடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்டக் குயவநாயனார் இன்பத்துறையில் எளியராய் ‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்' என மனைவியார் கூறிய ஆணைமொழியினை மதித்து மற்றை மாதரார் தம்மையும் மனத்தினும் தீண்டாது ஐம்புலன்களை வென்று விளங்கினார். திருநீலகண்டக்குயவரும் அவர் மனைவியாரும், முதுமை அடைந்த நிலையில் சிவபெருமான் சிவயோகியாராக வந்து ஓர் ஓட்டினைத் தந்து அதனை மறையச் செய்து மீண்டும் வந்து கேட்க அதனைத் தர இயலாத நிலையில் திருநீலக்கண்டக்குயவனார் முதுமைப் பருவமுற்ற தாமும் தம்மனைவியும் ஆக இத்திருக்குளத்தில் மூழ்கி இளமை பெற்று எழுந்தனர் என்பது வரலாறு. முதுமைப் பருவத்தினராகிய திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியாரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி இளமைபெற்று எழுந்தமையால், இத்தீர்த்தம் இளமை ஆக்கினார் குளம் என்றும், இக்குளத்தின் மேற் கரையிலுள்ள திருப்புலீச்சுரர் திருக்கோயில் இளமை ஆக்கினார் கோயில் என்றும் வழங்கப் பெறுவன ஆயின.

5. அனந்த தீர்த்தம்;- இது தில்லைப் பெருங் கோயிலுக்கு மேற்றிசையில் பதஞ்சலி முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த அனந்தீச்சுரத் திருக்கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள தீர்த்தமாகும்.

6. நாகசேரி தீர்த்தம்:- பதஞ்சலி முனிவர் நாகலோகத்தினின்றும் பிலத்துவார வழியாகத் தில்லைக்கு ஏறிவந்த இடத்திலுள்ள தீர்த்தமாதலின் இது நாகசேரி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இத்தீர்த்தம் அனந்தீச்சுரர் திருக்கோயிலுக்கு வட மேற்கே அமைந்துள்ளது.

7. பிரமதீர்த்தம்:- இது தில்லைப்பெருங் கோயிலுக்கு வட மேற்கு மூலையில் சிங்காரத் தோப்பு என வழங்கும் திருக்களாஞ்சேரியில் உள்ளது. இக்குளத்தின் மேற்கே வசிட்டமுனிவரால் வழிபாடு செய்யப்பெற்ற திருகளாஞ்செடிவுடையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் பிரமபுரீசர் என்னும் திருப்பெயருண்டு. பிரமபுரீசர் சந்நிதியில் இத்தீர்த்தம் அமைந்திருத்தலால் இது பிரமதீர்த்தம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

8. சிவப் பிரியை:- இத்தீர்த்தம் தில்லைப் பெருங் கோயிலுக்கு வடதிசையில், தில்லைவன முடையாளாகிய தில்லைக் காளியின் திருக்கோயிலுக்கு முன்னே உள்ளது.

9. திருப்பாற்கடல்:- இத்தீர்த்தம் தில்லைப்பெருங்கோயிலின் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. வியாக்கிரபாத முனிவருடைய இளங்குழந்தையாகிய உபமன்யு காமதேனுவின் பாலை உண்ணப்பெறாது வருந்தி அழுத நிலையில், தில்லைத் திருமூலட்டானப் பெருமான் உபமன்யு வாகிய குழந்தை உண்டு பசி தீரும்படி திருப்பாற் கடலையே தில்லைக்கு வரவழைத்தருளினான் என்பது புராண வரலாறு. 'பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்' எனத் தில்லை இறைவனைப் போற்றுவர் சேந்தனார். உபமன்யுவின் பொருட்டுத் திருப்பாற்கடல் வந்த பொய்கையாகத் திகழ்வது இத்தீர்த்தமாதலின் இது திருப்பாற்கடல் என வழங்கப் பெறுவதாயிற்று. இத் தீர்த்தத்தினையொட்டி வடகரையில் அமைந்தது திருப்பெருந்துறை என்னும் திருக்கோயிலாகும். சிதம்பரத்தின் கீழ்த்திசையில் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் சிவயோகம் புரிந்திருக்கும் நிலையில் பாண்டிய நாட்டில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய ஆன்மநாதரையும் சிவயோகாம்பிகையையும் திருப்பெருந்துறையில் திருவடி உருவில் வைத்து வழிபாடு செய்தது போலவே, தில்லையிலும் பெருந்துறைப் பெருமானைத் திருவடி உருவில் வைத்து வழிபட்டு மகிழ்ந்தார். இச்செய்தியைப்புலப்படுத்தும் முறையில் தெற்கு நோக்கிய சந்நிதியாக இத்திருப்பெருந்துறைத் திருக் கோயில் அமைந்து உன்ளது. இக்கோயில் விமானத்திலுள்ள கல் வெட்டில் இது திருப்பெருந்துறை எனக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

10. பரமானந்த கூவம்:- இது தில்லைச் சிற்றம்பலத்தின் கீழ்ப்பக்கத்தில் சண்டேசுரர் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ள திருமஞ்சனக் கிணறு ஆகும்.

சிவ வடிவாகிய சிவகங்கை முதல் பேரின்ப வடிவாகிய பரமானந்த கூவம் ஈறாக உள்ள இப் பத்துத் தீர்த்தங்களிலும் தில்லைப் பெருமானாகிய சிவபெருமான் தை அமாவாசை தோறும் தீர்த்தம் கொடுத்து அருள்வர். இப் பத்துத் தீர்த்தத்திலும் சிபெருமானை வழிபட்டு உடன் சென்று நீராடியவர்கள் இம்மை மறுமை நலங்களை ஒருங்கு பெற்று இன்புறுவர்.