தில்லைப் பெருங்கோயில் வரலாறு/திருக்கோயில் அமைப்பு


4. திருக்கோயில் அமைப்பு

தில்லை நகரத்தின் நடு நாயகமாகத் திகழும் தில்லைச் சிற்றம்பலவர் திருக்கோயில் ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எழுநிலைக் கோபுரங்கள் நான்கினையும் அதன் புறத்தே அமைந்த நந்தவனப் பரப்பையும் உள்ளடக்கிய நிலையில் வெளிப் புறத்தே பெரு மதில் சூழப் பெற்றுள்ளது. கோயிற்புறமதிலாகிய இது, வீரப்ப நாயக்கர் மதிலென வழங்கப் பெறுகின்றது. எனவே இது மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கர் என்பவரால் பழுது பார்த்துத் திருப்பணி செய்யப் பெற்றதெனத் தெரிய வருகின்றது. இம்மதிலின் நாற்புறமும் எழுநிலைக் கோபுரங்களுக் கெதிரே நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இவ்வாயில்களின் வழியே கோயிலினுள் சென்றால் எழுநிலைக் கோபுரங்களைத் தொடர்ந்து அமைந்த பெருமதில்கள், கோயிலின் உட்புறத்தே திருமாளிகைப் பத்தியினை உடையனவாய் விளங்குதல் காணலாம். எழுநிலைக் கோபுரங்களின் உட்புறத்தே அமைந்த மூன்றாம் பிரகாரம் இராஜாக்கள் தம்பிரான் திருவீதி என்னும் பெயருடையது. இராஜாக்கள் தம்பிரான் என்பது மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய சிறப்புப் பெயராகும் (Incrsiption 80 of 1928). ஆகவே இப்பிரகாரத்திலமைந்த திருமாளிகைப்பத்தி இவ்வேந்தனால் திருப்பணி செய்யப்பெற்றதெனக் கொள்ளுதல் பொருந்தும். கிழக்குக் கோபுரத்தின் வழியாகக் கோயிலினுள்ளே நுழைவதற்கு முன் அக்கோபுரவாசலின் வெளிப்புறத்தே கோபுரத்தை ஒட்டிய நிலையில் தென் பக்கத்தே விநாயகர் கோயிலும் வடபக்கத்தே சுப்பிரமணியர் கோயிலும் அமைந்துள்ளமை காணலாம். கிழக்குக் கோபுர வாசலின் தென் பறத்தே இக் கோபுரத்தைப் பழுது பார்த்துத் திருப்பணிசெய்த காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார், அவர் தமக்கையார் உருவச் சிலைகள் மாடங்களில் அமைந்துள்ளன.

சோழராட்சியில் கட்டப்பெற்ற இக்கோபுர வாயிலில் பரத சாத்திரத்திற் கூறிய வண்ணம் நூற்றெட்டுக் கரணங்களைச் செய்யும் ஆடல் மகளிருடைய சிற்ப வடிவங்களை அமைத்து அழகுப்படுத்தியவன் பல்லவ மரபினனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனாவான். இவனது படிவம் இக்கோபுரவாயிலுள் வட மேற்குப் பக்கத்தே தெற்கு நோக்கிய மாடத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோபுர வாயிலுள் நுழைந்து மூன்றாம் பிரகாரத்தை அடையும் நிலையில் தோன்றும் நந்தி மண்டபம் திருமூலட்டானப் பெருமான் சந்நிதியை நோக்கிப் புறத்தே அமைக்கப் பெற்றதாகும். இப்பிரகாரத்தினை வலம் வரும் பொழுது கிழக்குக் கோபுரத்தின் எதிரே தென்பக்கமாகச் சிறிது தள்ளிய நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் உள் வாசல் அமைந்துள்ளமை காணலாம். கிழக்கிலிருந்து வலமாகச் சென்றால் தெற்குக் கோபுரத்தின் எதிர்ப்பக்கத்தே கதையாலியன்ற நந்தியம் பெருமான் அமைந்துள்ள கல் மண்டபமும் இதன் பின் புறத்தே பலிபீடமும் இணைந்துள்ளமை காணலாம். வெளிப்புறத்தேயுள்ள இந்நந்தி உள்ளேயுள்ள நடராசப் பெருமான் சந்நிதியை நோக்கிய நிலையில் அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாம். நந்தி மண்டபத்தின் தென்புறத்தேயுள்ள தெற்குக் கோபுரம் சொக்கசீயன் என்னும் சிறப்புப் பெயருடைய முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் திருப்பணி செய்யப் பெற்றமையின் சொக்க சீயன் என்னும் பெயர் பெறுவதாயிற்று. மூன்றாம் குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாகவும் அவன் மகளை மணந்த மணவாளப் பெருமாளாகவும் விளங்கிய பல்லவர் தலைவனாகிய கோப்பெருஞ்சிங்கன் இக்கோபுரத்தை ஆண்டுதோறும் பழுதுபார்த்தற்கெனவே செங்கற்பட்டு மாவட்டம் ஆத்தார் என்றும் சிற்றாரைத் தானமாகக்கொடுத்துள்ளான். இக்கோபுர வாயிலின் உட்புறத்தே பரத நாட்டிய கரணங்களை புலப்படுத்தும் மகளிரது ஆடற்சிற்பங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இக் கோபுர வாயிலின் மேற்பகுதியில் உட்புறத்தே வடக்கு நோக்கிய நிலையில் முருகப் பெருமானது திருவுருவம் கோபுரத்தையொட்டி அடைந்துள்ளது. தெற்குப் பிரகாரத்தின் மேற்குப் பாதியில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக முக்குறுணி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. தென்பாலுகந்தாடும் தில்லன் சிற்றம்பலவனை வழிபாடு செய்தற் பொருட்டுத் தெற்குக் கோபுர வழியே நுழைந்து வலம் வரும் பொழுது முகப்பில் இப்பிள்ளையார் கோயில் அமைந்திருப்பதால் இங்கு எழுந்தருளிய விநாயகப் பெருமான் முகக் கட்டண விநாயகர் எனப் பெயர் பெற்றாரெனவும் அப்பெயரே பிற்காலத்தில் முக்குறுணி விநாயகர் எனத் திரிந்து வழங்கப் பெற்றதெனவும் கருதுவர் ஆராய்ச்சியாளர்'.

முக்குறுணி விநாயகரைத் தரிசித்தவர்கள் மேலைக் கோபுர வழியாக வெளியே சென்று அக்கோபுரத்தின் தென் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பெற்றுள்ள கற்பக விநாயகரைத் தரிசித்தல் வழக்கம். தல விநாயகராகிய இப்பிள்ளையார் குலோத்துங்க சோழ விநாயகர் என இக்கோயிற் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றார். இப் பிள்ளையாரை வணங்கிய பின்னர், மேலைக் கோபுரத்தின் வழியாக மீண்டும் உள்ளே வந்து அக்கோபுரத்தின் வடபக்கத்தே கிழக்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள முருகப்பெருமானை வழிபடுதல் மரபு. இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வயானை ஆகிய தேவியர் இருவரும் இருபுறத்தே நிற்க முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்துள்ளார். இச்சந்நிதியில் முருகப்பெருமானுக்குத் தம்பியராம் பேறு பெற்ற நவவீரர் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சந்நிதியில் மயில்கள் இரண்டுள்ளன. அவற்றுள் ஒன்று முருகன் சூரனுடன், போர் செய்யும் நிலையில் மயிலாய் வந்த இந்திரனையும், மற்றொன்று போரின் முடிவில் மயிலாய் வந்த சூரனையும் குறிக்கும்.

இச்சந்நிதியின் நேர் வடக்கே சென்றால் கிழக்கு நோக்கிய நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும் அதன் அருகே நூற்றுக்கால் மண்டபத்தையொட்டித் தெற்கு நோக்கிய வாயிலையுடைய வீரபாண்டியன் திருமண்டபமும் அமைந்திருத்தலைக் காணலாம். தில்லையில் சிவகங்கைக் கரையின் மேற்கே மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனால் கட்டப் பெற்றது நூற்றுக்கால் மண்டபமாகும். இது விக்கிரமசோழன் திருப்பண்டபம் என்னும் பெயருடையதென்பது இம்மண்டபத்தின் பன்னிரு தூண்களில் அப்பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலால் அறியலாம். இம் மண்டபம் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தை நோக்கிய முகப்பு வாயிலையுடையதாய் இரண்டு பக்கங்களிலும் படிகளைப் பெற்றுள்ளது. இத்தகைய நூற்றுக்கால் மண்டபத்தோடு ஒன்றாக இணைக்கப்பெற்றுத் தென்புற முகப்பினையுடையதாய் அமைக்கப்பெற்றதே முற்குறித்த வீர பாண்டியன் திருமண்டபமாகும். இம்மண்டபத்திலுள்ள சில தூண்களில் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம். பாண்டிய மன்னர்கள் தங்குல நாயகராகிய சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சி யம்மை திரு முன்னிலையிலேயே முடி சூடிக்கொள்ளுதல் மரபு. இம்மரபினை யொட்டியே சடையவர்மன் வீரபாண்டியன் என்பான் தான் முடிசூடிக் கொள்ளுதற்கு வாய்ப்பாக இம்மண்டபத்தை யொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைக்கட்டி அப்பெருமான் முன்னிலையில் கி.பி. 1267-ஆம் ஆண்டில் இம் மண்டபத்தில் வீராபிடேகமும் விஜயாபிடேகமும் செய்து கொண்டான் எனத் தெரிகிறது. வீரபாண்டியன் மண்டபத்துக்குக் கிழக்கே சிவகங்கையை நோக்கிய நிலையில் திரு மூல விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தென் புறத்தில் ஒரு தூணையும் வடபுறத்தில் சுவரையும் உடையதாய் அமைந்துள்ளமையால் இக்கோயில் ஒற்றைக்கால் மண்டபம் என வழங்கப் பெறுகின்றது.

நூற்றுக்கால் மண்டபத்தின் வடபக்கத்தே அமைந்தது சிவகாமியம்மை திருக்கோயிலாகும். சிவகாமக் கோட்டம் என்னும் பெயருடைய இக் கோயில், கி.பி. 1118 முதல் 1136 வரை ஆட்சிபுரிந்த விக்கிரம சோழனால் கற்றளியாக அமைக்கப் பெற்றதாகும் விக்கிரம சோழன் காலத்தில் தொடங்கப்பெற்ற இக்கோயில் திருப்பணி இவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறைவு செய்யப்பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதியாகிய இத்திருக் கோயிலின், முகப்பிலுள்ள சொக்கட்டான் மண்டபம் திருவண்ணாமலை ஆதீனத்தலைவர் ஒருவரால் அமைக்கப் பெற்றதாகும். சிவகாமி அம்மை கோயிலின் முகப்பிலமைந்த கோபுர வாயில், அந்தப்புரப் பெருமாள் திருவாசல் என்னும் பெயருடையதாகும். விக்கிரம சோழன் படைத்தலைவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் சிவகாமியம்மை திருக்கோயிலைச் சூழ்ந்த திருச்சுற்றும் திருமாளிகைப்பத்தியும் அமைத்துள்ளான். அந்தப்புரப் பெருமாள் வாசல் வழியே அம்மை கோயிலுட் சென்று வெளிப்பிரகாரத்தை வலம்வரும் பொழுது தென்கீழ்த் திசையில் மேற்கு நோக்கியவாறுள்ள சித்திர புத்திரர் கோயிலையும், திருமாளிகைப் பத்தியின் குறடுகளில் தொடர்ந்து அமைந்துள்ள இசைக்கலை. ஆடற் கலை பற்றிய அழகிய சிற்பங்களையும் காணலாம். வடக்குப் பிரகாரத்தில் அண்மையிலமைக்கப்பெற்ற ஸ்ரீசக்கரத்தையும் ஸ்ரீசங்கராச்சாரியார் திருவுருவத்தையும் காணலாம். அம்மையின் கோபுர வாயிலையொட்டி உள்ளேயமைந்த முன் மண்டபம் மரத்தினால் அமைக்கப்பெற்றது போன்ற வேலைப்பாடுடைய கருங்கல் தூண்களையும் மேற் கூரையையும் உடையதாய்ச் சிற்பவேலைப்பாடுகளைப் பெற்று விளங்குகின்றது. நீளமும் அகலமும் உடையதாய் அமைக்கப்பெற்ற இம்மண்டபத்தில் கொடிமரத்தின் வலப் பக்கத்தமைந்த மேற் கூரையிலே தாருகா வனத்து முனிவர்களின் செருக்கினை அடக்குதல் வேண்டிச் சிவபெருமான் பிச்சைக் கோலம் உடையராய் மோகினி வடிவுடைய திருமாலுடன் சென்றதும், இறைவனது பேரழகிலீடுபட்ட முனிவர் மனைவியர் தம்வசமிழந்து ஆடை அவிழநின்ற நிலையும், திருமாலாகிய மோகினியின் வடிவழகிலீடுபட்டு மையல் கொண்ட முனிவர்கள் தமது தவத்தினை நெகிழவிட்ட தன்மையும் ஆகியகாட்சிகள் வண்ண ஓவியமாக வடிக்கப்பெற்றுள்ளன. இம்மண்டபத்தில் பார்வதிதேவியின் திருவருட் பெருமையை விளக்கும் ஓவியக் காட்சிகள் வரையப் பெற்றிருத்தலைக் காணலாம். முன் மண்டபத்தின் வழியாக உள்ளே சென்று உட்பிரகாரத்தை வலம் வந்து சிவகாமியம்மையைத்தரிசித்து அன்னையின் திருவருளைப் பெறலாம். சிவகாமியம்மை திருக்கோயில் கோபுரவாசலின் வடபுறத்தே மகிஷாசுர மர்த்தனியாகிய துர்க்கையின் சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதி கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் அண்டாபரண தேவர் என்னும் தெய்வத்துக்குரிய திருக்கோயிலாக விளங்கியது. இக்கோயிற் சுவரில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுக்களால் இதனை அறியலாம். துர்க்கையை வழிபட்டபின் சிலகாமியம்மை கோயிலின் வடபக்கத்தே பாண்டிய நாயகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் அறுமுகப் பெருமான் கிழக்கு நோக்கிய நிலையில் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வயானை என்னும் தேவியருடன் தன்னை வழிபடும் அடியார்க்கு அருள் புரிகின்ற தெய்வக் காட்சியைக் காணலாம். இக்கோயில் யானைகளாலும் யாளிகளாலும் இழுக்கப்படும் தேர் வடிவில் அமைக்கப் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் நாற்புறங்களிலும் உள்ள கீழ்க் குறடுகளில் ஆடல் பாடல் பற்றிய அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள தூண்கள் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பெற்ற திரிபுவன வீரேச்சுரத்தில் அமைந்துள்ள துாண்களைப் போன்று முழுதும் சிற்ப வேலைப்பாடு நிறைந்தளவாய் விளக்குதலாலும், மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டியார் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரமைப்பில் பாண்டிய நாயகம் என்னும் பெயரால் இக்கோயில் வழங்கப் பெற்று வருதலாலும் இத்திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்ட திருத்தலங்களில் முருகப்பெருமானுக்கென அமைந்த மிகப் பெரிய அழகிய சந்நிதி இப்பாண்டிய நாயகத் திருக்கோயிலேயாகும். இத்திருக்கோயில் மண்டப மேற் கூரையின் உட்புறத்தே கந்தபுராண வரலாறும் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளும் நம் பன்னிரு திருமுறையாசிரியர்கள் திருவுருவங்களும் எழில் மிக்கவண்ண ஓவியங்களாக வரையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வோவியங்களை வரைந்து இத்திருக்கோயிலுக்கு மூன்று முறை குடமுழுக்குச் செய்தவர்கள் சிதம்பரம் அணிகல வணிகர் தருமபூஷணம் செ. இரத்தினசாமிச் செட்டியார் அவர்களும் அவர்தம் மைந்தர்களும் ஆவர்.

இத்திருக்கோயிலை யொட்டி அமைந்த வடக்குக் கோபுரம் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப் பெற்றதாகும். இக்கோபுர வாயிலின் உள்ளே கிருஷ்ண தேவராயர் சிலைவடிவம் கிழக்கு நோக்கிய மாடத்தில் உள்ளமை காணலாம். இக்கோபுரத்தின் உட்பக்கத்தே தெற்கு நோக்கிய நிலையில் முருகப்பெருமான் திருவுருவம் கோபுரத்தை யொட்டிய புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. இச்சந்நிதியில் அறக்கடவுளாகிய இயமன் திருவுருவம் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

பாண்டிய நாயகத்தின் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் ஒன்பது சிவலிங்கங்கள் எந்தருளிய (sic. எழுந்தருளிய) நவலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரர் பாடிய திருத் தொண்டத் தொகையில் திருநீலகண்டக் குயவனார் முதல் திருநீலகண்டப் பாணனார், சடையனார், இசைஞானியார் நம்பியாரூரர்வரையுள்ள அறுபத்து மூன்று தனியடியார்களும், தில்லைவாழந்தணர் முதல் அப்பாலும் அடிச்சார்ந்தார் ஈறாகவுள்ள ஒன்பது தொகை அடியார்களும், இடம் பெற்றுள்ளனர். இவ்வொன்பது தொகையினரையும், சிவலிங்கவடிவில் வைத்துப் போற்றும் நிலையில் அமைந்துள்ளதே இந்த நவலிங்கம் திருக்கோயிலாகும். இக்கோயில் திருத்தொண்டத்தொகையீச்சுரம் என்ற பெயரால் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. இக் கோயிலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிவனடியார் ஒருவர் புதுப்பித்துக் கட்டியுள்ளார்.

நவலிங்கம் திருக்கோயிலுக்கு நேர் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் கீழ்ப்பக்கத்தில் அமைந்துள்ள மண்டபம் ஆயிரக்கால் மண்டபமாகும். முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவன் என்பான், தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் சொன்னவாறு அறிவார் (கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனார்) கோயிலும், புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையாக அமைத்தான் என்று செய்யுள் வடிவில் அமைந்த கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கண்டன் மாதவனால் கட்டப் பெற்ற புராண மண்டபத்தை உள்ளடக்கிய நிலையில் விரிந்த இடமுடையதாக அமைக்கப்பெற்றதே இவ்வாயிரக்கால் மண்டபம். இதனைக் கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என ஆராய்ச்சியாளர் சதாசிவபண்டாரத்தார் கருதுவர். அண்மையில், இம்மண்டபத்தைப் பெரும் பொருட் செலவில் பழுது பார்த்துத் திருப்பணி செய்தவர் ஆடூர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தினசபாபதி பிள்ளையவர்களாவர். இவ் வாயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் நாயனார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் அரங்கேறியது. தில்லையில் ஆண்டுதோறும் நிகழும் ஆனித்திருமஞ்சன விழாவிலும், மார்கழித் திருவாதிரை விழாவிலும், ஒன்பதாந் திருநாளில் தேரில் எழுந்தருளி நான்கு பெருவீதிகளிலும் உலாப்போந்த நடராசப்பெருமானும் சிவகாமி அம்மையும் அன்றிரவு இம் மண்டபத்தில் எழுந்தருளியிருந்து மறுநாள் விடியற்காலை திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகலில் இங்கிருந்து புறப்பட்டு நடம் கொண்ட கூத்தராய் அடியார்களுக்குத் திருவருட் காட்சி நல்கிக் கீழைவாயில் வழியே சிற்றம்பலத்துள் சென்று புகுந்தருள்வர். பத்தாம் திருநாளில் திகழும் இத் திருநடனக் காட்சியே திருக் கூத்துத் தரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப்பெறுகின்றது.

சிற்றம்பலத்தில் ஆடல் புரியும் கூத்தப் பெருமானை ஆயிரக்கால் மண்டபத்தே எழுந்தருளச் செய்து மீண்டும் சிற்றம்பலமாகிய ஞான மன்றத்தே புகுந்தருளச்செய்யும் இத்திருவிழா நிகழ்ச்சியானது, மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையில் பயிர்த் துடிப்பாக இடைவிடாது நடம்புரிந் தருளும் கூத்தப்பெருமானை நெஞ்சத்தினின்றும் எழுந்தருளச் செய்து, புருவ நடுவில் தியானித்து, ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உச்சந் தலைக்குமேல் பன்னிரண்டு அங்குலம் உயர்ந்து விளங்கும். மேலிடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மேல் எழுந்தருளும்படி செய்து, முதல்வனது திருவருளோடு ஒன்றியிருந்து, அம் முதல்வனை மறுபடியும் நெற்றிக்கு நேரே புருவத்து இடை வெளியிற் கண்டு போற்றி, மீண்டும் நெஞ்சத்தாமரையில் எழுந்தருளச் செய்யும் சிவஞானச் செல்வர்களது அகப்பூசை முறையினை நினைவுபடுத்துவதாகும். சிவஞானச் செல்வர்களின் அகத்தே நிகழும் இத் திருக்கூத்துத தரிசனத்தை உலகமக்கள் பலரும் புறத்தே கண்டு உய்தி பெறும் நிலையில் நிகழ்த்தப் பெறுவதே நடராசர் தரிசன விழாவாகும். தில்லைச்சிற்றம்பலமாகிய மன்றம் உலக புருடனது நெஞ்சமாகிய ஞான ஆகாயமாகவும், இங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் மூலாதாரம் முதல் ஆக்ஞை வரையுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டுத் தலையின் மேலிடமாகத் திகழும் (சகஸ்ராரம்) ஆயிரம் இதழ்த் தாமரையாகவும், சிற்றம்பலத்துக்கும் ஆயிரக்கால் மண்டபத்துக்கும் நடுவே குலோத்துங்க சோழன் திருமாளிகை கிழக்கு வாயிலை யொட்டியமைந்த முகமண்டபம் புருவ நடுவாகவும் அமையக், கூத்தப் பெருமான் சிவகாமியம்மை காண ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து முகமண்டபம் வரையுள்ள எல்லையிலும், முகமண்டபத்திலிருந்து சிற்றம்பலம் வரை உள்ள எல்லையிலும், திருக்கூத்து நிகழ்த்தியருளும் இத்திரு நடனக் காட்சியானது, சிவஞானச் செல்வர்களால் அகத்திற்கண் கொண்டு பார்த்தற்குரிய திருக்கூத்துத் தரிசனத்தை உலக மக்கள் அனைவரும் முகத்திற்கண் கொண்டு பார்த்து உய்யும் வண்ணம் நிகழ்த்தப் பெறுவதாகும். மூன்றாம் பிரகாரத்தை வலம்வந்தவர்கள் கோயிலினுள்ளே புகுதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் ஆக இரண்டு வாயில்கள் அமைந்துள்ளன. அவ்விரண்டனுள் மேற்றிசையில் அமைந்துள்ள வாயிலுக்குக் குலோத்துங்க சோழன் திருமாளிகைத் திருவாயில் எனனும் பெயர் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றது. எனவே இறைவன் திருவுலாப் போகுங் காலத்தில் எழுந்தருளும் கீழைத்திரு வாயிலைக் குலோத்துங்க சோழன் திருமாளிகைக் கீழைத்திருவாயில் எனக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து கிழக்கு வாயில் வழியாகக் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நுழைகின்றோம். இப்பிரகாரம் இரண்டாங் குலோத்துங்க சோழனால் அமைக்கப்பெற்றமையின் குலோத்துங்க சோழன் திருமாளிகை எனக் கல்வெட்டிற் குறிக்கப்பெறு கின்றது. இருபத்தொரு படிகளமைந்த கீழை வாசலில் நின்று மேற்கே நோக்கினால் கூத்தப் பெருமான் ஆடல்புரியும் பொன்னம்பலம் எதிரே தோன்றுதல் காணலாம். இரண்டாம் திருச்சுற்றை வலம் வரும் வழியில் தெற்குப் பிராகாரத்திலே தில்லையம்பலவாணர் சந்நிதியில் பலிபீடத்துடன் நிறுவப்பெற்றுள்ள கொடிமரத்தினையும் அதன் தென் பாலமைந்த நிருத்த சபையினையும் கண்டு வழிபடலாம்.

இறைவன் காளியுடன் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக ஆடல் புரியும் திருமேனி இந்நிருத்த சபையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் தெற்குப் பக்கத்தே வடக்கு நோக்கிய நிலையில் சரபமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளது. இச்சபை குதிரை பூட்டிய தேரின் அமைப்புடையதாய் அமைக்கப் பெற்றமையின் இது தேர்மண்டபம் எனவும் வழங்கப்பெறும். இம் மண்டபத்திலமைத்துள்ள தூண்கள் திரிபுவன வீரேச்சுரத்திலமைந்துள்ள தூண்கள் போன்று சிற்ப அமைப்புடையனவாய் விளங்குவதாலும், இம்மண்டபத்தின் வடபக்கம் கீழேயமைந்த குறட்டில் தில்லையம்பலப் பெருமானைக் கைகூப்பித்தொழும் நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழனது உருவம் அமைக்கப் பெற்றிருத்தலாலும், அவ்வேந்தனது வழிபடு தெய்வமாகிய சரபமூர்த்தியின் சந்நிதி இங்கு அமைந்திருத்தலாலும் தேர் மண்டபமாகிய இந்நிருத்த சபையைக்கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழனே என்பதனை நன்கு உணரலாம். இம்மண்டபத்தின் நடுவிலுள்ள. மேற்கூரை தில்லைச் சிற்றம்பலத்தைப் போலவே மரத்தினால் அமைக்கப்பெற்றுச் செம்புத் தகடு வேட்ட பெற்றுள்ளமை காணலாம். இம்மண்டபத்திலுள்ள சிற்பங்கள் யாவும் சிற்பக்கலை வல்லுநர்களால் வியந்து பாராட்டத்தக்க கலை நுட்பமும் வனப்பமுமுடையனவாக விளங்குகின்றன.

நிருத்த சபைக்கு மேற்குத் திசையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகப் புண்டரீகவல்லித் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. அதன் வடபுறத்தே அமைந்த மண்டபத் தூணில் தெற்கு நோக்கிய நிலையில் தூணில் பாலதண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது. அங்கிருந்து மேலைப்பிரகாரத்தின் வழியே செல்லும் போது குலோத்துங்க சோழன் மேலை வாயிலுக்கு எதிரே கீழ்ப் புறமதிலையொட்டி மேலே திருமுறை கண்ட விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அதன் கீழே தாயுமானேசுவரர் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைந்துள்ளன. இப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சமயாசாரியர் நால்வர் திருவுருவமும், அதனருகில் தென்புறத்தே சந்தானாசாரியர் நால்வர் திருவுருவமும், அதன் தென்புறத்தே வேதாகமத்திருமுறைக் கோயிலும் கிழக்கு நோக்கிய சந்நிதிகளாக அமைக்கப்பெற்றுள்ளன. சமயாசாரியர் நால்வர்க்கு விமானம் அமைத்தும், சந்தானாசாரியர் திருவுருவங்களை விமானம் புதிதாக அமைத்தும், திருமுறைக்கோயிலை விமானத்துடன் அமைத்தும் குடநீராட்டு விழாவைச் சிறப்பாக நிகழ்த்திய பெருமை தருமை யாதீனம் இருபத்தாறாவது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்குரியதாகும். இச் சந்நிதிகளை வணங்கிக் கிழக்கு நோக்கி வடக்குப் பிரகார வழியே சென்றால் அதன் வட பகுதியில் பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானம் எனப் போற்றப்பெறும் தொன்மைத் திருக்கோயிலைக் காணலாம். அங்குப் புலிக்கால் முனிவரால் பூசிக்கப்பெற்ற சிவலிங்கப்பெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தெற்குநோக்கிய நிலையில் உமைய பார்வதி அம்மையார் எழுந்தருளியுள்ளார். இவ்விரு சந்நிதிகளையும் வழிபட்டு மீண்டும் மேற்குநோக்கித் திருமூலட்டானரை வலமாக வரும்பொழுது விமானத்தின் தென்புறத்தில் வல்லப கணபதியையும் மோகன கணபதியையும், ஆலமர் செல்வராகிய தட்சணாமூர்த்தியையும் கண்டு வழிபடலாம். அங்கிருந்து வடக்குப் பக்கமாகத் திரும்பி, திருமூலட்டான விமானத்தை வலம்வரும் நிலையில் மேற்குப்பக்கத்தே மூத்த பிள்ளையார், தலவிருட்சம், சிவலிங்கம் முதலிய திருவுருவங்கள் அமைந்துள்ளமை புலனாகும். வடக்குப்பக்கத்தே திருத் தொண்டத்தொகையாற் போற்றப்பெற்ற தனியடியார் தொகையடியார் திருவுருவங்களும், அவர்களது வரலாற்றை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பியின் திருவுருவமும், தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் நாயனார் திருவுருவமும் அமைந்த சந்நிதியைக்கண்டு வழிபடலாம். திருமூலட்டானேசுவர விமானத்தின் வடபக்கத்தே அமைந்த சண்டீசுவரரை வணங்கி கிழக்குப்புறமாகத் திரும்பினால் சிவலிங்கத் திருவுருவில் அமைந்துள்ள அண்ணாமலையாரை வணங்கி, மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் செல்லுமிடத்துக் கீழைப்பிரகார மூலையில் அமைந்த அலங்கார மண்டபத்தைக் காணலாம். அங்கிருந்து தெற்கு நோக்கி மீண்டும் மேற்குப்பக்கமாகத் திரும்பினால் திருவுலாச் செல்லும் பஞ்சமூர்த்திகள் முதலிய எழுந்தருளும் திருமேனிகள் அமர்ந்துள்ள பேரம்பலத்தைக் கண்டு தரிசிக்கலாம். தேவசபையென வழங்கும் இப்பேரம்பலம் நடுவே செப்புத்தகடு போர்த்தப் பெற்ற கூரையினையுடையதாய்த் தென் திசை நோக்கி அமைந்த வாயிலையுடையதாய் விளங்குகின்றது. இங்கிருந்து மேற்கு நோக்கினால் கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ள பொன்னம்பலமும் அங்குச் செல்லுதற்குரிய கிழக்கு வாயிலும் அவ்வாயில் வழியே - சிற்றம்பலத்தைச் சூழவுள்ள முதற் பிரகாரத்தை அடையலாம். தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழத் திருமாளிகைப்பத்தியுடன் அமைந்த இம்முதற் பிரகாரம் விக்கிரம சோழன் திருமாளிகையெனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளது. இதன் நடுவே இறைவன் ஐந்தொழில் ஆடல் புரியும் சிற்றம்பலம், பொன் வேயப்பெற்ற மேற்கூரையையுடையதாகவும் மேலே ஒன்பது கலசங்களையுடையதாகவும், நாற்புறத்தும் சந்தனப் பலகைகளால் அடைக்கப்பெற்றதாகவும், கிழக்கிலும் மேற்கிலும் ஏறிச்செல்லுதற்குரிய திருவணுக்கன் திருவாயில்களைவுடையதாகவும் அமைந்துள்ளது. இதன் முகப்பில் நந்தியம் பெருமான் எழுந்தருளிய முக மண்டபம் அமைந்துள்ளது. சிற்றம்பலத்தின் எதிரேயுள்ள முக மண்டபத்தினையொட்டிக் கிழக்குப் பக்கத்தில் செப்புத்தகடு போர்த்தப்பெற்றதாய் கருங் கற்றுாண்கள் தாங்கப்பெற்றதாய் உள்ள மரக்கூரை அமைந்துள்ளது. இது, முன்மண்டபமாகிய கனகசபையிலே ஆறுகாலமும் சந்திர மௌலீஸ்வரராகிய படிகலிங்கத்திற்கு நிகழும் அபிடேகத்தை அன்பர் பலரும் நின்று தரிசித்தற்கெனவே அமைக்கப் பெற்றதெனத் தெரிகிறது. இங்கிருந்து வலமாகச் சிறிது மேற்கே சென்றால் தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் சந்நிதியை அடையலாம். இங்கு நின்ற வண்ணமே அம்பலவர் திருக்கூத்தினைக் கண் தரிசிக்கலாம். சிற்சபையிலுள்ள சிதம்பர ரகசியத்தையும் கூத்தப்பெருமானையும் சிவகாமியம்மையையும் அணுகிச் சென்று வழிபடுவோர் சிற்சபையாகிய சிற்றம்பலத்திற்கும் கனகசபையான முன் மண்டபத்திற்கும் இடையே மேற்புறத்தும் கீழ்ப்புறத்தும் அமைந்த திருவணுக்கன் திருவாயில் வழியாக ஏறிச்சென்று முன் மண்டபத்தில் நின்று கண்டு தரிசித்தல் மரபு. முன் மண்டபமாகிய கனகசபையில் கூத்தப்பெருமானை நோக்கிய நிலையில் நந்தியம் பெருமானது திருவுருவம் அமைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலவனைப் பூசிக்கும் தில்லைவாழந்தணர்கள் கனக சபையிலிருந்து சிற்சபையினுள்ளே செல்லுதற்குரிய இணைப்பாக ஐந்துபடிகள் அமைக்கப் பெற்றுள்ளன. இப்படிகள் பஞ்சாட்சரப்படிகள் என வழங்கப்பெறும். இப்படிகளின் இருபுறத்தும் இவற்றைத் தாங்கும் நிலையில் துதிக்கை யுடையகளிற்றின் {யாளியின்) கைகள் அமைந்துள்ளமையால், இதனைத் திருக்களிற்றுப்படியென வழங்குதல் சைவ இலக்கிய மரபாகும். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியாரின் வழி நூலாக இயற்றிய நூலை இப்படியில் வைத்தபோது, இப் படியிலமைந்தகளிறு இத்நூலைக் கூத்தப் பெருமான் திருவடியில் வைத்தது என்றும் அதுபற்றி அந்நூல் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர்பெற்ற தென்றும் வழங்கும் வரலாறு இம் மரபினைக் குறிப்பதாகும்.

கூத்தப் பெருமான் அம்மைகாண ஆடல்புரியும் அம்பலத்தைத் திருச்சிற்றம்பலம் எனவும், அவ்வம்பலத்தின் மேல் பொன்வேயப் பெற்ற முகடாகிய புறப்பகுதியைப் பேரம்பலம் எனவும் ஞான சம்பந்தப் பிள்ளையார் குறிப்பித்துப் போற்றியுள்ளார்.

"நிறைவெண் கொடிமாடம் நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே”-- என வரும்

திருப்பாடல் பொன்மன்றத்தில் இறைவன் ஆடல் புரியும் உள்பகுதியைச் சிற்றம்பலம் எனவும், பொன் வேய்ந்த மேற்பகுதிபைப் பேரம்பலம் எனவும் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். திருநாவுக்கரசுப் பெருமான் இச்சந்நிதியைத் தில்லைச் சிற்றம்பலம் எனவும் தில்லையம்பலம் எனவும் பாடிப் போற்றியுள்ளார். திருமூலநாயனார் பொன்னம்பலம் என இதனைப் போற்றுவதால் அவர் காலத்திலேயே இம்மன்றம் பொன்னினால் வேயப் பெற்றிருந்தது என்பது நன்கு விளங்கும். வானுலகத்து உள்ள தேவர்களே தில்லைப்பெருமானைத் தொழுது போற்றி இவ்வம்பலத்தைப் பொன்னினால் வேய்ந்தார்கள் எனக்கோயிற் புராணம் கூறும். இக்கூற்றுக்கு ஆதாரமாக,

“முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ" -என வரும்

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை அமைந்துள்ளது. இத்திருப் பாடலில் தூய செம்பொன்னினால், எழுதிமேய்ந்த சிற்றம்பலம் என திருநாவுக்கரசுப்பெருமான் குறிப்பிடுதலால் இவ்வம்பலத்தில் வேயப்பெற்ற பொற்றகடுகள் ஒவ்வொன்றிலும் திருவைந்தெழுத்து எழுதப்பெற்றுள்ளமை அறியப்படும். திருச்சிற்றம் பலமாகிய பொன்னம்பலத்தில் அறுபத்து நான்கு கைச்சாத்துக்கள் உள்ளன. இவை அறுபத்து நான்கு கலைகளைக் குறிப்பன என்பர். அம்பல முகட்டில், இருபத்தோராயிரத்து அறு நூறு பொன்னோடுகள். வேயப்பெற்றுள்ளன. இவை ஒவ்வொருநாளும் மனிதர்களாகிய நம்மனோர் விடும் மூச்சின் எண்ணிக்கையை உணர்த்துவன. பொன்னோடுகளிற் பொருத்தப்பெற்ற ஆணிகள் எழுபத்தீராயிரமாகும். இவை மாந்தருடைய சுவாச இயக்கத்திற்கு ஆதாரமாகிய எழுபத்திரண்டு நாடிகளை உணர்த்துவன. இம் மன்றத்தின் புறத்தே வெள்ளித்தகடு போர்த்தப் பெற்ற பலகணிகள் தொண்ணூற்றாறும் சைவசித்தாந்தத் தத்துவங்கள் முப்பத்தாறும் அவற்றின் விளைவாகிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. சிற்றம்பல வாயிலிலமைந்துள்ள திருக்களிற்றுப்படிகள் ஐந்தும் திருவைந் தெழுத்தை உணர்த்துவன. சிற்றம்பலத்தினுள்ளே பிரணவ தீபத்தில் சிதம்பர ரகசியம் அமைந்துள்ளது. சதாசிவபீடத்தில் கூத்தப்பெருமானும் சிவகாமியம்மையும் எழுந்தருளியுள்ளனர். நடுவேயமைந்த பீடத்திலுள்ள பத்துத் தூண்களில் நான்கு நால் வேதங்களையும் ஆறு ஆறங்கங்களையும் உணர்த்துவன. இம்மன்றத்திலுள்ள மரத் தூண்கள் இருபத்தெட்டும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை உணர்த்துவன. பதினெட்டுக்கற்றூண்கள் பதினெண் புராணங்களைக் குறிப்பன. மேலுள்ள ஒன்பது கலசங்கள் ஒன்பது வாயில்களைக்குறிப்பன. இம்மன்றத்தின் தத்துவ அமைப்பு,

ஆறு சாத்திரம், நாலுவேதமதில் தூண்
ஆகமங்கள் இருபத்தெட்டுடன்
ஐம்பெரும் பூதங்கள் பதினெண் புராணங்கள்
அரியசிறு தூண் உத்திரம்
ஏறுகலை அறுபத்து நாலு கைம்மா
நாட்டி எழுபத்திரண்டாயிரம்
எழில் வரிச்சுடன் ஆணி புவனம்
இருநூற்றிருபத்தி னாலும்
குலவு சிற்றோடு இருபத்தோ ராயிரமும்
கூறும் அறு நூறும் ஆகத்



தேறுமொரு பெரு வீடு கட்டி விளையாடும் உமை
சிறுவீடு கட்டி யருளே
சிவகாமசுந்தரி யெனும் பெரிய விமலையே'
சிறுவீடு கட்டி யருளே
.

எனவரும் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் விரித்துக் கூறப்பெற்றிருத்தல் அறியத்தகுவதாகும்.

தில்லைச்சிற்லம்பலமாகிய இத்திருவருள் நிலையத்திலே எல்லாம் வல்ல இறைவன், முக்கண்களும் நான்கு திருக்கரங்களும் உடையவராகவும், இளம்பிறை, பாம்பு, ஊமத்தநறுமலர் கங்கை தங்கிய சடைமகுடம் உடையவராகவும்; புலித்தோலாடை புனைந்தவராகவும்; நீறணிந்த மேனியும் குமிண் சிரிப்புமுடையவராகவும்; தன் இடப்பக்கத்தே உள்ள சிவகாமியம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினையாடியருளும் காட்சி காண்போர்க்கு எக்காலத்தும் பேரின்பத்தினை நல்கும் அற்புதக் காட்சியாகும். இவ்வற்புதக் காட்சியைத் திருநாவுக்கரசு சுவாமிகள் தாம் பாடிய கோயில் திருவிருத்தப் பதிகங்கள் இரண்டிலும் விளித்துரைத்துப் போற்றியுள்ளார். கூத்தப்பெருமானை வழிபடுவோர் இத்திருப்பதிகங்களை இச்சந்நிதியின் முன்னின்று பாடிப் போற்றுவாராயின் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனார் நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்வர் என்பது திண்ணம். நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள சதாசிவபீடத்தையொட்டி நடராசப் பெருமானுக்கு வலப்பக்கத்தேயடைந்த பிரணவ பீடத்தில் சிதம்பர ரகசியம் எனப்படும் அருவத் திருமேனியாகிய சந்நிதி அமைந்துள்ளது. பெருவெளியாக இறைவன் விளங்குந் திறத்தைப் புலப்படுத்தும் இது, வில்வப் பொன்னிதழ் மாலை தொங்கவிடப்பட்டுக் கறுப்புத் திரையினால் மறைக்கப் பெற்றுள்ளது. இதனைத் தரிசிப்போர் தில்லைவாழந்தணர் உள்ளிருந்து திரைவிலக்கி, கற்பூர தீபம் காட்டும் நிலையில் சிற்றம்பலத்தில் அமைந்த பலகணி வாயிலாகவே புறத்தே நின்று கண்டு வழிபடுதல் வேண்டும். நடராசப் பெருமானுக்கு அருகே மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதியின் திருவுருவம் அமைந்த பேழையும் படிகலிங்கம் அமைந்துள்ள பேழையும் வைக்கப் பெற்றுள்ளமை காணலாம். தில்லைச் சிற்றம்பலத்திலே, அருவத் திருமேனியாகிய சிதம்பர ரகசியத்தையும் உருவத் திருமேனியாகிய கூத்தப்பெருமான் திருவுருவத்தையும் அருவுருவத்திருமேனியாகிய படிகலிங்கத்தையும் ஒருங்கே கண்டு தரிசிக்கலாம். கூத்தப்பெருமான் திருவுருவத்தை அதிகார சிவமாகிய மாகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகிய சபாபதி எனவும், அம்மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட போக சிவமாகிய சதாசிவமூர்த்தியின் மேலான தத்துவம் கடந்த நிலையில் உள்ள ஆனந்த தாண்டவமூர்த்தி எனவும் ஆகமங்கள் இருதிறனாகக் கூறுகின்றன. மகுடாகமம் கூறும் நடராச வடிவம் தத்துவங்கடந்த ஆனந்தத் தாண்டவ வடிவமாகும். காமிகம் முதலிய ஆகமங்கள் கூறும் நடராசர் சந்நிதி பரிவார சந்நிதி எனவும், மகுடாகமங் கூறும் நடராசர் சந்நிதி மூலத்தானச் சந்நிதி எனவும் பகுத்து ணர்தல் வேண்டும். இச் சிறப்புப்பற்றியே தில்லைப் பெருங்கோயிலின், வழிபாடு மகுடாகமத்தை அடியொற்றியதெனத் தில்லைக் கலம்பக ஆசிரியர் குறித்துள்ளார் எனக்கருத வேண்டியுளது.

தில்லைச்சிற்றம்பலவரை வணங்கி, அவ்வம்பலத்தைச் சூழ்ந்த முதற்பிரகாரத்திலுள்ள கூத்தாடும் விநாயகர் இலிங்கோற்பவர், அறுமுகப்பெருமான் ஆகிய பரிவார தெய்வங்களின் சந்திதியையும், பள்ளியறையையும், மேல் மாளிகையையும், அதனை யொட்டியமைந்தமேன்மாடத்திலுள்ள ஆகாயலிங்கத்தையும், கீழே பிச்சைத்தேவர் சந்நிதியையும் பைரவர் சந்நிதியையும் வணங்கி, பரமானந்த கூவத்தின் அருகேயுள்ள சண்டேசுவரர் சந்நிதியை அடையலாம், பைரவர் சந்நிதிக்கு எதிரில் பரமானந்த கூவத்தின் அருகில் அமைந்தது. சண்டேசுவரர் சந்நிதியாகும். இதன்கண் நான்கு முகங்களையுடைய, பிரம சண்டீசுவரரும் ஒருமுகத்தோடுள்ள சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசுவரரும் எழுந்தருளியுள்ளனர். இம்முதற் பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியின் குறட்டின் கீழ், திருவிளையாடற் புராணச் சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

தில்லையம்பலத்தில் நடம்புரியும் கூத்தப்பெருமான் சந்நிதியை யடைந்து தென்புறமாக எதிரிலுள்ள படிகளின் - மேலேறி நின்று பார்த்தால் தென் பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பல வரது திருவுருவத்தோற்றத்தையும், மேற் பக்கமாகக்கிழக்கு நோக்கியமைந்த சந்நிதியில் அறிதுயிலமர்ந்தருளிய கோவிந்த ராசப்பெருமாள் திருவுருவத்தையும் ஒருங்கே கண்டு வழிபடலாம். கி. பி 726 முதல் கி.பி. 775வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மப் பல்லவன் என்பவனால்தில்லைப்பெருங் கோயிலில் பிரதிட்டை செய்யப் பெற்ற பெருமாள் சந்நிதி தில்லைத் திருச் சித்திர கூடம் என்பதாகும். இது திருமங்கையாழ்வாராலும் குல சேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகும். தில்லை மூவாயிரவராகிய அந்தணர்களே இது திருச் சித்திர கூடப் பெருமாளையும் முற்காலத்தில் பூசனை செய்து வந்தனர். இச்செய்தி,

மூவாயிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காயசோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே.

(பெரிய திருமொழி 3-2,3)

எனத் திருமங்கை ஆழ்வாரும்,

'செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வமமான் றானே”

(பெருமாள் திருமொழி 10-2)

எனக் குலசேகர ஆழ்வாரும் பாடிப் போற்றிய பனுவல்களால் புலனாகின்றது. குலசேகராழ்வார் அருளிய, அங்கணெடு மதில், எனத்தொடங்கும் பதிகம் இராமாயண நிகழ்ச்சியைத்தொகுத்துக் கூறும் சிறப்புடையதாகும்.

இங்ஙனம் ஓரிடத்தில் நின்றே சிவபெருமான் திருமாலாகிய இருபெருந் தெய்வங்களையும் ஒரு சேர வழிபடும் நிலையில் அமைந்துள்ள தெய்வத்தலம் தில்லைப்பெருங்கோயிலாகிய இத்திருத்தலமேயாகும். தம் பெற்றோர்கள் தில்லைப் பெருமானை வழிபட்டதன் பயனாகப் பிறந்த அப்பைய தீட்சதர் என்பவர் வேதசாத்திரங் கலைகளில் வல்லவராய் வட மொழியிற் பல நூல்களை இயற்றிச்சிவபரத்துவத்தை நிலைநாட்டிய பெருந்தகையார் ஆவர். சிறந்த சைவசமயச் சான்றோராகிய இப் பெரியார் இங்கு நின்று தில்லைக்கூத்தனையும் கோவிந்தராசப் பெருமாளையும் ஒருங்கே போற்றும் முறையில் வடமொழியில் தோத்திரப்பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் திருமாலையும் சிவபெருமானையும் ஒருங்கே போற்றுவனவாகவும் சைவ வைணவ, சமரச உணர்வைத் தூண்டுவனவாகவும் அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தக்கதாகும்.

தில்லைப் பெருங்கோயிலில் தெற்கு மேற்கு வடக்கிலுள்ள கோபுரங்களையடுத்து முறையே திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவர்க்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. மேற்குக் கோபுரத்தையொட்டி மூன்றாம் பிரகாரத்தில் திருநோக்கழகியான் மண்டபம் ஒன்றிருந்தது. இன்னும்பல சந்நிதிகளும் இருந்தன. இவையனைத்தும் வேற்றுச் சமயத்தார் தில்லைப்பெருங்கோயிலை அரணாகக் கொண்டு தங்கிச் செய்த சிதைவுகளாலும் அரசியல் ஆட்சி மாற்றங்களாலும் கவனிப்பாரில்லாமையாலும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. முன்னோர்கட்டிய கோயில்களைச் சிதையாமற் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் பிற்காலத்தில் நம்மனோர்க்கு இல்லாமை வருந்துதற்குரியதாகும்.

இறைவன் ஆடல்புரியும் சிற்றம்பலம் சிற்சபை எனவும். அதற்கு முன்னுள்ள எதிரம்பலம் கனகசபை எனவும், கொடிமரத்தின் தெற்கேயள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் சந்நிதி நிருத்தசபை எனவும், சோமாஸ்கந்தர் முதலிய எழுந்தருளும் திருமேனியுள்ள சந்நிதி தேவசபை (பேரம்பலம்) எனவும், ஆயிரக்கால் மண்டபம் இராசசபை எனவும் வழங்கப் பெறும். இவை ஐந்தும் தில்லையிலுள்ள ஐந்து சபைகளாகும்; இவ்வைந்து சபைகளும் சோழ மன்னர்களாலேயே திருப்பணி செய்யப் பெற்றன என்பது இவற்றின் கட்டிட அமைப்பால் நன்குவிளங்கும்.