திவான் லொடபட சிங் பகதூர்/பதிப்புரை

பதிப்புரை

ரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் — இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.

அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லி இருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ் நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய, ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ‘திகம்பர சாமியார்’ இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சிநிற்கிறது.

'இவ்வளவு வருடங்கள் ஆகி விட்டதே! போர் அடிக்காதா?’ என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளியிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், கதை போகும் போக்கே மிக மிக நன்றாக உள்ளது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் இப்படிப்பட்ட நாவல்களை எழுதியதால் ஏராளமான நற்சாட்சிப் பத்திரங்களையும், தங்க மெடல்களையும் பெற்று உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இந்த நாவல்களைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டும், போற்ற வேண்டும், நாங்களும் நிறைய புத்தகங்களை விற்க வேண்டும். இதெல்லாம் வாசகர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? இந்தப் புத்தகங்களை வாங்கும் அனைவருமே புத்திசாலிகள்தாம்.

இந்த நாவல்களை வெளியிடும் முயற்சியில் எங்களுக்கு மிகவும் உதவியாக எங்களது நீண்ட நாள்

நண்பரான, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவரான திரு. இரா. முத்துக்குமாரசாமிக்கும், நூலின் பழைய பிரதிகளைக் கொடுத்து உதவிய (காஞ்சி புரம்/ அன்பர்களுக்கும், மேலும் இந்த நூல்களை, அந்தக் காலத்திலயே ஏராளமாக விற்பனை செய்து, பெரும் பணியாற்றி தற்போது எங்களுக்கு உரிமையை வழங்கிய இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் உரிமையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? மீண்டும் வருமா?’ என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நூல்களை ‘புரூப்’ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல வாசகர்கள், ‘பரூப்’ படிக்க வில்லை என்றால்கூடப் பரவாயில்லை, தாமதப்படுத்தாமல் உடனே வெளியிடுங்கள் என்று கூறினார்கள்.

அன்று 007
இன்று ஜேம்ஸ்பாண்டு - ஆனால்
அன்றும் இன்றும் என்றும்
"திகம்பர சாமியார்”

அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன்