திவான் லொடபட சிங் பகதூர்/வடுவூரார் தமிழ் இலக்கிய வரலாறு
வடுவூர் துரைசாமி ஐயங்கார்: 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங் கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்டவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஓர் அச்சகமும் 'மனோ ரஞ்சனி' (19) என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக் குவித்தவர். கலைமகள் கம்பெனி, விற்பனை நிலையமாகும்.
நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திரு மண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகையிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமை யோடிருக்க. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர். இவர் மாடிக்கு ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை.மு.கோ., எஸ்.எஸ். வாசன் வந்து போவர்.
மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகன் மனைவி புஷ்பவல்லி; புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு; ஒரு பெண்ணும் பிள்ளையும் ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு பிள்ளை ரகுவும் நேவியில் காப்டன். வடுவூராரின் நவீனம் ‘மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு
இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின.
திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சிகள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார்.
வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அளவுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தினரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வரலாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
-நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு