தேன் சிட்டு/அன்பு வழி

அன்பு வழி

மனிதன் ஒரு விசித்திரமான பிராணி. அவனுக்கு அற்புதமான மனம் இருக்கின்றது; அறிவு இருக்கின்றது. இந்த அறிவைப்பற்றிப் புகழ்ச்சியாகப் பலபடப் பேசுவதுண்டு.

"விலங்குகள் தமது சொந்த அனுபவங்களினால் மட்டும் பயனடையும். ஆனல் மனிதன் தனது சொந்த அனுபவங்களால் மட்டுமல்லாது மற்றவர்களுடைய அனுபவங்கள், அவனுடைய முன்னோர்களுடைய அனுபவங்கள் ஆகியவற்றாலும் பயனடைகிறான். அது அவனுக்கிருக்கும்படியான அறிவின் தனிச் சிறப்பு” என்று பெருமையோடு கூறுவார்கள்.

கொதிக்கின்ற பாலில் வாயை வைத்தால் சுடும் என்று பூனைக்குத் தெரியாது. வாயை அதில் வைத்துத் துன்பப்பட்ட பிறகே அது தெரிந்துகொள்ளும். ஒரு பூனை தெரிந்துகொண்டதென்றால் அதன் குட்டி, அந்தக் குட்டியின் குட்டி ஆகியவைகளும் இந்த அனுபவத்தால் பயனடைய முடியுமா? முடியாது. அவைகளும் தாமாகவே இந்தத் துன்பத்தை அனுபவித்துத்தான் தெரிந்துகொள்ளும். ஒரு தலைமுறையிலுள்ள பூனையின் அனுபவங்களை எழுதி வைத்து அடுத்த தலைமுறையில் வரும் பூனைகளுக்குப் பயன்படச் செய்ய அவற்றால் முடியாது. எழுதி வைக்கவும் முடியாது; மற்றவை அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படிப்பட்டதன்று. மனிதன் தனது வரலாற்றை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு எழுதி வைக்கிறான். பின்னால் வருகிற சந்ததியர்கள் அதைப் படித்துப் பயனடையலாம். உலகத்தின் ஒரு மூலையிலுள்ள ஒரு மனிதக் கூட்டத்தின் வரலாற்றை மற்றொரு கோடியிலுள்ள மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் கூட்டத்தார் அடைந்த அனுபவங்களைக் கொண்டு உலகத்திலுள்ள எல்லா மக்களும் தங்கள் வாழ்க் கையைத் தக்கவாறு மாற்றி அமைத்துக்கொண்டு நல்ல பயனடையலாம்.

மெய்தான்; நல்ல பயனடைந்து முன்னேறலாம் என்பதில் ஐயமில்லை. ஆனல் மனிதன் அப்படிப் பயனடைகிறானா? என்று ஆராயும்போதுதான் நம்பிக்கை குலைகிறது. வரலாற்றுப் பாடம் பள்ளிகளிலே தேர்வு முடிந்ததும் மறந்து போவதாகத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் முன்னோர் செய்த தவறு களையே மக்கள் திரும்பத் திரும்பச் செய்வார்களா?

வரலாற்றைப் படிப்பதால் நாம் தெரிந்து கொள்ளுகிற பாடத்தைப் பற்றி பெர்னாட்ஷா தமக்கே உரிய பாணியிலே அழகாகக் கூறியிருக்கிறார்.

"வரலாற்றைப் படித்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன்; அதாவது வரலாற்றைப் படிப்பதால் நாம் ஒன்றுமே தெரிந்து கொள்வதில்லை” என்று அவர் கூறுகிறார். உண்மையான வாக்கு. ஒரு முறை செய்த தவறை நாம் உணர்ந்து கொண்டதற்கு அடையாளம் அதை மீண்டும் செய்யாமலிருப்பதே ஆகும். இதுவரையில் மானிட சாதி செய்த பல தவறுகளை வரலாறு நமக்கு வெளிப்படையாக எடுத்துக் காட்டுகிறது. அவற்றைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; அவை பெரிய தவறுகள் என்று விமரிசனம் செய்கிறோம். ஆனால் அவற்றையே திருப்பித் திருப்பி நாம் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு வரலாற்றைப் படிப்பதால் என்ன பயன்?

போர் ஏற்படுவதால் எத்தனையோ துன்பங்கள் விளைகின்றன. ஒரு நாட்டின் பெருஞ் செல்வமாகிய இளைஞர்கள் ஆயிரம் ஆயிரமாக மடிகிறார்கள். நாட்டிலே பெருஞ் சேதம் ஏற்படுகிறது. முடிவிலே வெற்றி பெற்ற நாடும் நலிவையே அடைகின்றது. மகாபாரதக் கதை இந்த உண்மையை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது. கெளரவர்கள் தோல்வியுற்று மடிந்தார்கள். பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களுடைய நிலைமை தோல்வியுற்றோரின் நிலைமையைவிட உயர்ந்ததாயிருக்கவில்லை. மடிந்த வர்கள் ஒரு வகையில் நல்ல புண்ணியம் செய்தவர் களாகத் தோன்றியது. அதற்குமேல் அவர்களைத் துன்பம் வாட்ட முடியாதல்லவா? ஆனால் வெற்றி பெற்று உயிர் வாழ்ந்த பாண்டவர்கள் இறந்து போன அத்தனை பேருக்காகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. ஆருயிர் மைந்தர்களையும், காதலர்களையும் இழந்தோரின் ஏக்கக் குரலை வாழ்நாளெல்லாம் அவர்கள் கேட்டு வருந்த வேண்டியதாயிற்று. போரால் யாருக்கும் நன்மையில்லை என்பதை மகாபாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு எடுத்துக் காட்டி விட்டது. அதன் பிறகு நடந்த ஒவ்வொரு போரும் இதே உண்மையை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் யார் அதைச் சரிவர உணர்ந்திருக்கிறார்கள்? மறுபடியும் மறுபடியும் அதே தவறை உலகம் செய்து கொண்டுதானிருக்கிறது. வரலாற்றைப் படிப்பதால் நாம் ஒன்றுமே தெரிந்து கொள்வதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா?

"நூறு போர்களைச் செய்த பிறகும் நான் புதிதாக ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை; போரைப் பற்றி எல்லாம் எனக்கு தொடக்கத்திலேயே தெரியும்" என்று நெப்போலியன் ஒரு தடவை பெருமையடித்துக் கொண்டானாம். பாவம், அவனுடைய மூளைக்கு எட்டியது அவ்வளவுதான். ஆனால் அசோகன் ஒரே ஒரு போரைத்தான் நடத்தினான். அதிலேயே அவனுக்கு ஒரு புதிய உண்மை தெரிந்துவிட்டது. போர் என்பது மிகக் கொடுமை வாய்ந்தது; அதனால் யாருக்கும் எவ்வித நன்மையும் விளையாது என்று அவன் கண்டுகொண்டான்.

இவ்வாறு யாராவது ஒருவருக்கு உண்மை புலப் படுகிறது. அவர் அதை உலகுக்கு எடுத்துக் காட்ட முயலுகிறார். உலகமும் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுத் தத்தளிக்கும்போது இந்த உண்மையை அறிந்து கொண்டதுபோலக் குரல் எழுப்புகின்றது. ஆனல் அந்தப் போர் முடிந்த சில ஆண்டுகளுக்குள் அதனால் ஏற்பட்ட இன்னல்களே யெல்லாம் மறந்துவிடுகிறது. போரே கூடாது என்று வற்புறுத்திய அறிஞர்களின் நல்லுரைகளுக்கும் செவிடாய் விடுகிறது. மறுபடியும் பழைய பாதையிலே நடக்கத் தொடங்கிவிடுகிறது.புதிய புதிய அழிவுப் படை களை உண்டாக்கும் முயற்சியிலே முழுக் கவனத் தையும் செலுத்தத் தொடங்கிவிடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்திலே முதல் பிரிட் டிஷ் அணுகுண்டுச் சோதனை நடைபெற்றது. பேரச்சந்தரும் இடி முகக்கத்துடனே அது வெடித் ததையறிந்து பிரிட்டிஷ் பிரதமர் உள்ளங் குளிர்ந் தாராம். ஆனால் நமது நாட்டுப் பெரிய விஞ்ஞானி யாகிய ஸ்ர் சி. வி. ராமன் அதையறிந்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. "புத்தருடைய வழியைப் பின் பற்ற முயலும் எனக்கு இந்த அணுகுண்டு வெடி இன்பமூட்டவில்லை. இதனால் உலகுக்கு நன்மை ஏற் படாது" என்று அவர் வெளிப்படையாகக் கூறி விட்டார். "அணுகுண்டு ஆராய்ச்சியில் முனைந்திருக்கும் நாடுகளின் அடிப்படையான நோக்கம் எனக்குப் பிடிக்கவில்லை. அணுவாராய்ச்சி மானிட சாதியின் இன்பத்திற்குக் காரணமாக அமைந்தால் அதை நான் வரவேற்பேன்" என்று நமது பிரதமர் பண்டித நேரு தமது கருத்தை விளக்கியிருக்கிறார்.

இரண்டாம் முறையாக ஏற்பட்ட கொடியதோர் உலகப் போர் முடிவடைந்து சில ஆண்டுகளே ஆயின. அதில் அழிந்த நகரங்களெல்லாம் இன்னும் முழுமையாகச் சீரமைப்புப் பெறவில்லை. போரின் கொடுமைகளை நன்கு உணர்த்திக்கொண்டு இடிந்த கட்டடங்கள் பல இடங்களிலே காட்சியளிக்கின்றன. போரால் எற்பட்ட நலிவு இன்னும் தீர்ந்தபாடில்லை. அதோடு போரிலே படுதோல்வியடைந்த நாடு உதவியளிக்க வேண்டிய பொறுப்பும் , வெற்றியடைந்த நாடுகளுககு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையிலுங்கூட உலகம் போரின் பயனற்ற தன்மையை நன்கு உணர்ந்துகொண்டதாகத் தெரிய வில்லை. இப்பொழுது மூன்றாவது உலகப் போரைப்பற்றிய பேச்சுக் கேட்கின்றது. அதற்கு ஆபத்தங்களும், அமைதிக்கு வழியென்கிற பெயரால், நடந்து கொண்டிருக்கின்றன.

படையைப் பெருக்கி அமைதியை நிலைநாட்டுவோம் என்று சொல்வதெல்லாம் பொருளற்ற வாசகமாகும். படையால் போர் நேருமேயன்றி அமைதி நிலைபெறாது. படை பெருகினால் ஐயம் பெருகுகின்றது. "அவன் ஐயாயிரம் வெடிகுண்டு விமானம் கட்டியிருக்கிறான்; ஆதலால் நான் பத்தாயிரம் கட்ட வேண்டும். அவனுடைய விமானம் மணிக்கு 500 மைல் பறக்கிறது; என்னுடைய விமானம் 600 மைலாவது பறக்கவேண்டும்; அப்பொழுதுதான் அவன் என்னிடம் சண்டைக்கு வரமாட்டான்" என்ற எண்ணத்தையே நாடுகளுக் கிடையில் விளைவிக்கிறது. படை பெருகப் பெருக இந்தப் போட்டியும் மும்முரமாகிறது; ஐயம் வலுக் கிறது. அவற்றின் பயனாக முதலில் உள்ளத்திலே அமைதி குலைகின்றது; பீதி தலையெடுகிறது. உலகம் அறிவை இழந்துவிடுகிறது. பிறகு போர் அரக்கனின் கோரக் காட்சி தோன்றுகிறது. ஹிரோஷிமாவில் விழுந்த முதல் அணுகுண்டு ஒரே கணத்தில் எண் பதினாயிரம் மக்களின் உயிரைக் குடித்துவிட்டது. இன்று அணுகுண்டின் அழிப்பு வலிமை இன்னும் பல நூறு மடங்கு ஓங்கியிருக்கிறது. அணுகுண்டைவிட ஆயிரம் மடங்கு அழிவுச் சக்தி கொண்ட ஹைடிரஜன் குண்டு தோன்றிவிட்டது. இந்த நிலைமையிலே போர் தொடங்கினால் உலகமே ஒரு சில நாட்களில் அழிந்துவிடும்; மானிட சாதியும் முடிந்து போகும். ஒரு நூறு அணுகுண்டுகளும் ஹைடிரஜன் குண்டுகளும் இந்த அழிவைத் திட்டமாகச் செய்து முடித்துவிடும். பூதத்தைப் படைத்த ஒருவன் அதன் கையாலேயே மாய்ந்தது போல மானிட சாதியின் முடிவும் ஆகிவிடும்.

இதைத் தெளிவாக உணர்ந்த சிந்தனையாளர்கள் பலர் உலகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அணுப்படை வழியைப் பின்பற்றினால் மனித வருக்கமே வேரற்று மாண்டு போகும் என்று அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியப் பண்பாட்டின் அவதாரமாக வந்த காந்தியடிகள் ஹிம்சையை அறவே களையவேண்டும் என்று வற்புறுத்தினர். அன்பினாலும் அஹிம்சை யாலும் நாம் சாதிக்க விரும்புவனவற்றை யெல்லாம் வெற்றிகரமாகச் சாதிப்பதோடு உலகிலே இன்பமும் அமைதியும் ஒங்கச் செய்யலாம் என்பதை அவர் நமது நாட்டுச் சுதந்திரப் போரிலே மெய்ப்பித்துக் காட்டினார். அவருடைய உபதேசத்தைக் கடைப்பிடிக்காவிடில் இன்றைய நிலைமையில் மானிட சாதிக்கு உய்வே கிடையாது. எச். ஜி. வெல்ஸ் கூறிச் சென்றது போல மனித இனமே மறைந்துபோகும்படி நேரிடும். ஆதலால் இதை ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

விலங்கு நிலையிலிருந்து பரிணாமக்கிரமத்திலே மனிதன் தோன்றியிருக்கிறான். அவனுடைய மூளை வளர்ச்சி பெற்றிருக்கிறது; அவனுடைய மனமும் வளர்ச்சி பெற்று நுட்பமடைந்திருக்கிறது. ஆனால் அவனுடைய விலங்குணர்ச்சிகள் இன்னும் மறைந்து விடவில்லை. மனிதன் தானடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அறிகுறியாகத் தனது அறிவுத் திறமைகளை மட்டும் எடுத்துக்காட்டுவது போதாது. அன்பு, இரக்கம், கருணை போன்ற அவனுடைய மென்மை உணர்ச்சிகள் எவ்வளவு தூரம் ஓங்கி வளர்ந்திருக்கின்றன என்பதை அவன் எண்ணிப் பார்க்க வேண்டும். அவைகள் ஒங்குவதே உண்மையில் அவனுடைய முன்னேற்றத்திற்கு அறிகுறியாகும்.

அணுகுண்டு முன்னேற்றத்தின் சின்னமல்ல; அது அழிவின் சின்னம்; அது மானிட சாதியின் யமன். அன்பே முன்னேற்றத்தின் சின்னம். அன்பு பெருக இன்பம் பெருகும். அன்பு பெருக மானிட சாதி சுவர்க்க இன்பத்தை உலகில் நிலைநாட்டும், அன்பே உலக அமைதிக்கும் மக்கட்கூட்டத்தின் இன்பத்திற்கும் வழியாகும். அதை விட்டால் வேறு வழி கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்_சிட்டு/அன்பு_வழி&oldid=1395349" இலிருந்து மீள்விக்கப்பட்டது