தேன் சிட்டு/குழலோசை



குழலோசை


மார்கழித் திங்களில் அதிகாலையில் பூவின்மேல் பனி விழுகின்ற அரவத்தைக் கேட்டிருக்கிறீர்களா? உருவமில்லாத பனித்திவலை காற்று வெளியிலே மிதந்து வந்து இதழ் அவிழ்ந்து கொண்டிருக்கும் பூவின்மேலே படிந்து மெல்ல மெல்ல முத்துச் சொட்டாக உருவங்கொள்ளும் ஆச்சரியத்தைக் கண்டு களிக்க நான் கழனிகளினூடே நடந்து கொண் டிருந்தேன்.

கிழக்கு மங்கலாக வெளுத்திருக்கிறது. பரிதியின் ஒளி தோன்றப் போகிறது என்பதற்கு அறிகுறியாக இப்பொழுதுதான் அடிவானத்திலே ஒன்றிரண்டு வெள்ளை ரேகைகள் படர்ந்திருக்கின்றன. மார்கழி இறுதி வாரத்திலே ஒரு நாள்.

விரிந்த மலரின் இதழ்களின் மேலே பனி விழு கிறது. அரவமில்லாத அரவமொன்று தொனிக்கிறது. பனி மிதந்து வருகிறது; இதழ்கள் அதை ஏந்துகின்றன. மலரின் உள்ளத்திலே கிளர்ந்த அழகும் இன்பமும் மேலே பொங்குவது போலப் பனிநீர் மலர் இதழ்களிலே வடிவங் கொள்ளுகிறது. நெஞ்சிலே காதல் அரும்புவது போலே, விண்ணிலிருந்து கருணை வெள்ளம் இழிவது போலே.

உருவில்லாத நுண்ணிய திவலைகளாகக் காற் றிலே மிதந்து வந்து இதழ்களிலே படிந்த பனி மெதுவாக ஒருங்கு திரண்டு நீர்த்துளியாக உரு வெடுக்கிறது. உருண்டு திரண்டு முத்துச் சொட்டாக இதழ்களின் நுனியிலே இளமங்கையின் வதனத்திற்கு எழில் தரும் எள்ளின் பூவையொத்த நாசியில் தொங்கி அசையும் முத்துப் புலாக்கைப் போல ஒரு கணம் நிற்கிறது. நீர்த்துளியின் சுமை தாங்காது மெல்லிய, இதழ் தலை சாய்கிறது; முத்துச்சொட்டு நிலத்திலே குதிக்கிறது. மரங்களின் இலைகளிலிருந்தும் நூற்றுக்கணக்காகப் பணிச் சொட்டுக்கள் முத்து முத்தாகக் குதிக்கின்றன.

என் உடம்பெல்லாம் ஒரு ஜிலுஜிலுப்பு ஏறுகின்றது. பனித் திவலையின் இந்த ஜிலுஜிலுப்பிலே ஒரு தனிப்பட்ட இன்பக் கிளர்ச்சியுண்டாகிறது. மார்கழித் திங்களிலே அதிகாலையிலே இறைவனுடைய புகழைப் பாடி பஜனை செய்து கொண்டு தெருக்களிலே வலம் வரவேண்டுமென்று முதலில் ஏற்பாடு செய்தவர்கள் இந்த இன்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். இழுத்துப் போர்த்துக் கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பவர்கள் இந்த இன்பத்தைத் துய்க்க முடியாது.

நான் கழனிகளின் வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று புல்லாங்குழலின் நாதம் செவிகளிலே பாய்ந்தது. திட்டமான உருவம் பெறாத ஏதோ ஒரு நாடோடிப் பாடலின் மெட்டு அது. கலைப் பண்பில்லாத உள்ளக் கிளர்ச்சியின் எதிரொலிதான்; ஆனாலும் அதிலே ஒரு தனிக் கவர்ச்சியிருந்தது. பனித்திவலைகள் உண்டாக்கிய அமைதியைப் பெருக்குவதுபோல அந்தக் குழலோசை வானிலே மிதந்தது. எதிர்பார்த்திருக்கும் இன்பத்தைப்பற்றிய நினைவிலே எழுந்த கிளர்ச்சியால் அந்த இசை உருக்கொள்ளுவது போலத் தோன்றியது. கழனி வெளியிலே குபுகுபுவென்று பனி பெய்கின்ற அதிகாலையிலே அணியறியாத அந்தக் குழல் இசை யின் மெல்லிய நாதம் எங்கும் பெருகியது. உலகம் கந்தர்வலோகமாக மாறிவிட்டது.

நான் அந்த இசையை அனுபவித்துக்கொண்டே அடியெடுத்து வைத்தேன். ஒரு மரத்தடியிலே கல்லின் மேல் அமர்ந்து ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். மெதுவாக அவனிடம் சென்றேன்.

குழல் வாசிப்பதை நிறுத்திவிட்டு அவன் என்னை உற்றுப் பார்த்தான். அந்தப் பக்கத்திற்கே புதியவனை ஒருவன் அதிகாலையிலே அங்கு வந்தது அவனுக்கு வியப்பை உண்டாக்கியிருக்கிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது.

"புல்லாங்குழல் மிக இனிமையாக இருக்கிறது" என்று பேச்சைத் தொடங்கினேன்.

சிறுவன் மகிழ்ச்சியால் சிரித்தான்; ஆனால் பதில் ஒன்றும் பேசவில்லை.

"அதிகாலையில் குழல் ஊதுகிறாயே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.

"மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் நாலு நாள் தானே? ஊதிப் பழகவேண்டாமா?" என்றான் சிறுவன். "மாட்டுப் பொங்கலுக்குக் குழல் அத்தனை அவசியமா?”

"குழலூதாமல் பொங்கலேது? பட்டியே அமங்கலமாகப் போகும்" என்றான் சிறுவன்.

"நீ குழலூதுவது மாட்டிற்குத் தெரியுமா?”

"ஒ நல்லாத் தெரியும், சாயங்காலத்திலே நான் குழல் ஊதினால் மாடுகளெல்லாம் எங்கிருந்தாலும் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடும்."

"உனக்குச் சொந்தமாக மாடிருக்கிறதா?”

"இந்த மாடெல்லாம் என்னுடையதுதான் - நான்தான் அவைகளை மேய்க்கிறவன்" என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு பக்கத்திலே பட்டியிலிருந்த மாடுகளைக் காண்பித்தான் சிறுவன்.

அந்த மாடுகளை மேய்ப்பவன் அவன்தான். ஆனால் அவற்றின் சொந்தக்காரன் அவனல்ல என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவன் பெரிய பண்ணைக்காரர் பட்டியிலே மாடு மேய்க்கிறவன்.

இருந்தாலும் அந்த மாடுகளையெல்லாம் தன்னுடையதாகவே அவன் கருதுகிறான். அத்தகைய மனப்பான்மை எப்படி உண்டாக முடியும் என்று எண்ணிக்கொண்டே நான் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.

சற்று தூரம் சென்றதும் மறுபடியும் புல்லாங் குழலின் ஒலி மதுரமாகக் காற்றில் மிதந்து வந்தது. அந்த இசையில் லயித்துப் போனவன்போலக் கதிரவன் மெதுவாக எட்டிப் பார்த்தான், அவனுடைய  பொன் மஞ்சட் கிரணங்களுக்கும் பணித் திவலைகளுக் கும் போட்டியேற்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் போட்டிக்கிடையிலும் அறுகம்புல்லின் நுனியில் உருண்டு நிற்கும் முத்துச் சொட்டிலே புகுந்து பொற் கதிர்கள் வர்ண ஜாலங்களை வெளிப்படுத்துவதில் தவறவில்லை.

பெரிய பண்ணைக்காரர் எதிரிலே வந்துகொண் டிருந்தார். நான் அவரை இதுவரை பார்த்ததில்லை. அறிமுகமில்லாதிருந்தாலும் அன்போடு அவர் என்னிடம் உரையாடலனார். நாட்டுப் புறத்தின் இயற்கையெழிலைத் துய்க்க நான் வந்திருப்பதை அவரிடம் கூறினேன்.

"பொங்கல் நோன்பு வருகிறது. எங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டுப் போகவேனும்" என்று அவர் பரிவோடு கூறினார்.

"பொங்கலுக்கு எங்கள் வீட்டிற்கே போகலா மென்றிருக்கிறேன்” என்று நான் மறுமொழி சொன்னேன்.

"இதுவும் உங்கள் வீடுதான். மனமிருந்தால், அன்பிருந்தால் எல்லாம் சொந்தந்தான்” என்றார் பண்ணைக்காரர்.

"உங்கள் உள்ளம் மிகவும் பரந்த உள்ளம். உலகத்திலே எல்லோரும் உங்களைப்போல இருக்கிறார் களா?” என்று உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சியை அப்படியே கூறினேன்.  "யார் தலையிலே கட்டிக் கொண்டு போகிறார்கள்? ஏதோ உயிரோடு இருக்கிற வரையிலும் எல்லோரோடும் சமமாக இருந்து எல்லாரும் சந்தோசப் படும்படி செய்தால் அதுதான் நல்லது" என்று அவர் கூறினார்.

மாட்டுக்காரப் பையன் மாடுகளை யெல்லாம் தன்னுடையதாக நினைத்திருப்பதின் ரகசியம் இப்பொழுதுதான் எனக்குப் புலனாயிற்று.

பண்ணைக்காரர் படித்தவரல்ல. கையெழுத்துப் போடக்கூட அவருக்குத் தெரியாதென்று பின்னால் தெரிய வந்தது. ஆனால் அவர் வாழ்க்கையின் ரகசியத் தைக் கண்டுகொண்டிருக்கிறார்.

"உங்கள் பண்ணையிலே பட்டி பெருகவேனும்; பால்பானை பொங்க வேணும். உங்களைப்போல ஆயிரம் ஆயிரம் பண்ணைக்காரர்கள் தோன்ற வேணும்" என்று கூறிவிட்டு நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்.

இன்று பொங்கல் திருநாள். மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனுடைய குழலோசையும் பண்ணைக் காரருடைய அன்புச் சொற்களும் இன்பம் பொங்க என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்_சிட்டு/குழலோசை&oldid=1395348" இலிருந்து மீள்விக்கப்பட்டது